யாஷ் மஹலுங்கே மழைக்காலத்தில் பள்ளிக்குச் செல்வதற்காக ஒவ்வொரு நாளும் தனது உயிரைப் பணயம் வைத்துள்ளான். பள்ளிக்கு செல்லக்கூடிய எண்ணற்ற மாணவ,மாணவிகள் மற்றும் சிலரின் பெற்றோருடன், எட்டு வயதே ஆன யாஷும் உடைந்த பாலத்தின் தூணின் மீதுள்ள குறுகலான வழுக்கக்கூடிய நிலையில் உள்ள சுவரின் மீது நடந்து பள்ளிக்குச் சென்று வருகிறான். அந்த சுவரிற்கு நேர் கீழ், பல அடி ஆழத்தில் புதர்களும்,சேறும் சகதியுமாக நிறைந்துள்ளது.
ஒவ்வொரு பகல் பொழுதிலும் பள்ளிக்குச் சென்று மாலை அவர்கள் வீடு திரும்ப உடைந்த பாலத்தில் நடக்கும் இரண்டு தடவையும், அவர்கள் குழுவானது ஒரே வரிசையில் ஒரு கையில் குடையுடனும் தோளில் அதிக எடைக்கொண்ட பையுடனும் காலில் செருப்பு ஏதுமின்றியும் அந்த பாலத்தில் நடந்து சென்று வருகின்றனர். இவ்வளவு ஆபத்து நிறைந்த 30 நிமிட நடைக்கு பின்னர், அவர்களது பாதங்கள் பாலத்தின் மிச்ச பகுதியான பாதுகாப்பான கான்கிரீட் பகுதியை அடைகின்றது. பின்னர் மண் பாதையில் நடந்து ஆவூர்பல்ஹேரி குக்கிராமத்தில் உள்ள அவர்கள் வீட்டை அடைகின்றனர். அவர்களின் வீட்டிலிருந்து அவர்கள் படிக்கும் பள்ளி இருக்கக்கூடிய, அவார் கிராமம் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
“நான் பாலத்திலிருந்து கீழே பார்க்கும் போது எனக்கு பயமாக இருக்கும். மயக்கம் வருவதாக உணர்வேன். அப்போது என் பாபாவின்(அப்பாவின்) கைகளை இறுக்கமாக பற்றிக் கொள்வேன்” என்றான் யாஷ்.
ஆவூர் பல்ஹேரி கிராமத்தில் உள்ள 77 குடும்பங்களும் (அவார் கிராமப்பஞ்சாயத்து புள்ளிவிவரப்படி) கடந்த 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை, இத்தகைய அந்தரத்தில் தொங்குகின்ற கயிற்றின் மீது நடப்பது போன்ற அபாயகரமான நடையை மேற்கொண்டிருக்கவில்லை. அதற்கு முன்னர் வரை,பாட்சா ஆற்றின் நீரோடையைக் கடப்பதற்காக அவர்கள் சிறிய அளவிலான பாலத்தைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால், கடந்த 2005 ஜூலை 28 அன்று பெய்த கனமழையில் 1998 ஆம் ஆண்டு தானே மாவட்ட குழு நிர்வாகத்தால் கட்டப்பட்ட அந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த பாலத்தின் இரண்டு குறுகிய சுவர்களும், மதகுகளும் மட்டுமே மழையால் அடித்து செல்லப்படாமல் உடைந்த அந்தப்பாலத்திலிருந்து எஞ்சியுள்ள்ளது.










