முக்கியமான கேள்வி விழுமியங்களைப் பற்றியதுதான். இந்த விழுமியங்கள் எங்கள் வாழ்க்கைகளின் ஒரு பகுதி. எங்களை நாங்கள் இயற்கையின் ஒரு பகுதியாகப் பார்க்கிறோம். சண்டையிடும்போது ஆதிவாசிகள் அரசாங்கத்தையோ பன்னாட்டு நிறுவனத்தையோ எதிர்த்து சண்டையிடுவதில்லை. அவர்களுக்கு என ‘பூமி சேனை’ ஒன்று இருக்கிறது. பேராசையிலும் சுயநலத்திலும் வேரூன்றியிருக்கும் விழுமியங்களை எதிர்த்தே அவர்கள் சண்டையிடுகின்றனர்.
நாகரிகங்களின் வளர்ச்சியிலிருந்துதான் சிக்கல் தொடங்கியது. தனிமனிதவாதம் வளரத் தொடங்கிய பிறகு, நாம் மனிதர்களை இயற்கையிலிருந்து வேறாக பார்க்கத் தொடங்கினோம். இங்குதான் சிக்கல் தொடங்கியது. ஆற்றிலிருந்து நம்மை நாம் பிரித்துக் கொண்டு விட்ட பிறகு, நமது கழிவு நீரும் ரசாயன, ஆலைக் கழிவுகளும் அதில் கலக்கச் செய்ய நாம் தயங்கியதில்லை. நாம் ஆற்றை ஒரு வளமாக உரிமை கொண்டாடத் தொடங்கினோம். இயற்கையிலிருந்து வேறுபட்டவர்களாகவும் அதை விட உயர்ந்தவர்களாகவும் நம்மை நாம் கருதத் தொடங்கிய பிறகு, அதைச் சுரண்டி கொள்ளையடிப்பது சுலபமாகிறது. மறுபக்கத்தில் ஆதிவாசிகளின் விழுமியங்கள் வெறும் விழுமியங்கள் கிடையாது. சாதாரணத் தாளில் எழுதப்பட்டவை கிடையாது. எங்களின் விழுமியங்கள்தான் எங்களின் வாழ்க்கை முறை.


