பூர்ணிமா மிஸ்டிரி, தனது மீன்பிடி வலையுடன், ராய் மங்கள் ஆற்றில் நடந்து செல்கிறார். அவரது இடுப்பைச்சுற்றி தண்ணீர் சுழன்று செல்கிறது. அரை மணி நேரத்திற்கும் மேலாக அவர் ஆற்றங்கரைக்கும் அருகில் நீந்திக்கொண்டிருக்கிறார். அவருக்கு பின்னால் உள்ள வலையை இழுத்துக்கொண்டு, புலி இறால் குஞ்சுகளை தேடிக்கொண்டிருக்கிறார்.
கரையில் அவர் வலையில் சேகரமாகியுள்ளவற்றை தனித்தனியாக பிரிக்கிறார். அவர் புலி இறால் குஞ்சுகள் அதன் ஓட்டிலிருந்தும், நரம்பிலிருந்தும் பிரித்து, மற்ற மீன்களையும் பிரித்தெடுக்கிறார். அவரது புடவை சூரிய ஒளியில் நன்றாக உலர துவங்கிவிட்டது. ஆனால், பூர்ணிமா மீண்டும் ஆற்றுக்குள் இறங்கி தன் வேலையைத் தொடர வேண்டும். “போதிய அளவு புலி இறால் குஞ்சுகளை நான் பிடிக்க வேண்டும். அப்போதுதான் என்னால் அவற்றை விற்க முடியும். அதற்கு மேலும் 2 முதல் 3 மணி நேரம் ஆகும்“ என்று அவர் கூறுகிறார்.
மண் கரையில் அமர்ந்துகொண்டு தான் பிடித்தவற்றை பிரித்தெடுத்து பூர்ணிமா, இந்த உப்பும், சகதியுமான நீரில் நீண்ட நேரங்கள் செலவிடுவது குறித்து பேசுகிறார். இந்த உப்பு மண்ணில் வேலை செய்வது தோல் தொற்றையும், அரிப்பையும் ஏற்படுத்துகிறது. “எங்கள் வேலை எவ்வளவு கடினமான ஒன்று என்று பாருங்கள்“ என்று அவர் கூறுகிறார். “சுந்தரவனத்தில் உள்ள மக்கள் இவ்வாறு உழைத்துதான் சாப்பிடுகின்றனர்.“
பூர்ணிமா இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வேலையை தனது குடும்பத்திற்கு உதவுவதற்காக செய்தார். அவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவரது கணவருக்கு தண்ணீர் என்றால் அச்சம் என்பதால், அவரால் மீன்பிடிக்கச் செல்ல இயலாது. மீன்பிடித்தொழில்தான் இங்கு பிரதானமான தொழிலாக உள்ளது. எனவே அதற்கு செல்ல முடியாததால், பூர்ணிமாவின் கணவர் இங்கு காய்கறிகள் விளைவித்து அவற்றை வீட்டில் விற்று வருகிறார்.





