இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிறந்த எருமைக் குட்டி, ஜனவரி மாதத்தில் இறந்தபோது சரிகா சாவந்த் கவலைப்பட்டிருக்கிறார். “சோளத்தில் பெரிய புழு இருந்துள்ளது என்று நினைக்கிறேன். அதனால் நேத்திலிருந்து எருமைக் குட்டி பால் குடிக்கவில்லை” என்றார் அவர். 24 வயதான அவரை நான் மஸவாத் நகரில் உள்ள கால்நடைகளுக்கான காப்பகத்தில் பார்த்தேன்.
போன வருட தீபாவளிக்கு இரண்டு பசுக்களை விற்பனை செய்யவேண்டிய நெருக்கடிக்கு ஆளானார்கள் சரிகாவும் அவரது கணவர் அனில் சாவந்த்தும். அதற்குப் பிறகுதான் எருமைக் குட்டி இறந்துபோன நட்டத்தை அவர்கள் சந்தித்தார்கள். இந்த குடும்பத்துக்கு தற்போது நான்கு ஜெர்சி பசுக்கள் உள்ளன. மூன்று எருமைகளும் இரண்டு கன்றுக்குட்டிகளும் உள்ளன. பால் விற்பனைதான் அவர்களின் முக்கியமான வருமானம். “இரண்டு வருசமா மழை பெய்யவில்லை.போன வருடம் தீபாவளிக்குப் பிறகு தண்ணீர் பற்றாக்குறை இருக்கு. (அக்டோபர்-நவம்பர் 2018) கிராமத்தில் உள்ள கிணறுகள் எல்லாம் வறண்டுபோய்விட்டன. தீவனம் இல்லை. பச்சைப்புல் எங்கேயும் இல்ல. எங்க மாடுங்களுக்கு நாங்க எப்படி தீனி வைப்போம்? வாங்கின கடனும் ஏறிக்கிட்டே போகுது.” என்கிறார் சரிகா.
அவர்கள் மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கணவனும் மனைவியும் வறட்சியைத் தாங்க முடியாமல் மஸ்வாத் நகரில் உள்ள கால்நடைகள் காப்பகத்துக்கு இடம் மாற்றிப்போனார்கள். அவர்களின் கிராமத்தில் உள்ள 994 பேர் மகாராஷ்ட்டிராவின் சடாரா மாவட்டத்தில் உள்ள மான் வட்டாரத்துக்குப் போயிருக்கின்றனர்.
2018ஆம் வருடம் அக்டோபர் 31 அன்று மகாராஷ்டிரத்தின் 26 மாவட்டங்களில் உள்ள 151 வட்டாரங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசால் அறிவிக்கப்பட்டன. அவற்றில் 112 வட்டாரங்கள் மிகமோசமாக பாதிக்கப்பட்டிருந்தன. சடாரா மாவட்டத்தின் மான் மற்றும் கத்தாவ் தாலுகாக்கள், சங்லி மாவட்டத்தின் ஜாட், அட்பாடி, கவாதேமகான்கள் தாலுகாக்கள், சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள மால்சிராஸ், சங்கோல், மான்தேஷ் பகுதியில் உள்ள அனைத்து வட்டாரங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டன. மான்தேசி பவுண்டேசன் மூலமாக அமைக்கப்பட்ட கால்நடை காப்பகத்தில் எட்டாயிரம் கால்நடைகள் உள்ளன. 64 கிராமங்களிலிருந்து வந்துள்ள 2500 பேர்கள் வரை இங்கு தங்கியுள்ளனர். (பார்க்க: Families separated by the search for fodder மற்றும் Chimnabai gets to eat finally, with 8000 others)








