"அன்றைய தினம்போல் நான் அவ்வளவு வேகமாக என் வாழ்நாளிலேயே ஓடியது இல்லை" என்று ஒருவித பதற்றத்துடன் அவர் நினைவுகூரும்போது அவரின் மனைவி சுலோச்சனா, மகள்கள் திஷா (18), வைஷ்ணவி (15) அருகில் இருந்தனர். அவர்களின் புன்னகையிலும் பதற்றம் இருந்தது. அன்றைய தினம் ஆத்ராம் மயிரிழையில் உயிர்பிழைத்தார் என்பதை அவர்கள் நன்றாகவே உணர்ந்திருந்தனர். வீட்டுக்குச் சென்றவுடன் ஆத்ராம் தன்னை ஓர் அறைக்குள் பூட்டிக் கொண்டார். அது கால்நடைகளின் கொட்டில். அன்று இரவு முழுவதுமே அவர் வெளியே வரவில்லை. நடக்கத்துடனேயே இருந்ததாகச் சொல்கிறார்.
அது பெரிய புலி என்று மராத்தி மொழியின் வராஹடி வட்டார வழக்கில் கூறினார். அவரது குரலில் சிறு ஹாஸ்யம் இருந்தது ஆனால் ஒரு துளியும் துணிவில்லை. அவர் பயந்துவிட்டாரா? என்ற கேள்விக்கு அவரின் மகள்கள் இருக்காதா? என்று சிரிப்புடன் பதிலளித்தனர்.
அதிகரிக்கும் புலி - மனித மோதல்
மகாராஷ்டிராவின் கிழக்குக் கோடியில் உள்ள விதர்பா வனங்களில் அதிகரித்து வரும் மனிதன் - புலிகள் இடையேயான மோதல் உச்சத்தைத் தொட்டிருப்பதற்கான சாட்சியே ஆத்ராமின் கதை.
புலிகள் - மனிதர்கள் மோதல் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது என்கிறார் போராட்டியின் முன்னாள் விவசாயி சித்தார்த் தூதே. இப்போது அவர் விவசாயம் செய்யவில்லை பாதுகாவலராக மட்டுமே செல்கிறார். போராட்டி கிராமத்திலிருந்து 100 கி.மீ தொலைவில் இருக்கும் திப்பேஸ்வர் வனவிலங்குகள் சரணாலயத்தின் காப்புக் காடுகளில் இருந்து சில புலிகள் இடம்பெயர்ந்துள்ளன. எல்லையை நிர்ணயிக்க அவை மேற்கொள்ளும் இந்தப் பயணம் மக்களை அச்சத்தில் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது என அவர் கூறுகிறார். (மேலும் விவரங்களுக்கு T1 புலியின் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் அத்தியாயத்தைப் பார்க்கவும்)
ஆத்ராமின் வீட்டில் நம்மைச் சந்தித்த மேஷ்ராம், "யவத்மால் மாவட்டத்தின் முட்புதர், இலையுதிர் காடுகளை ஒட்டியே அடர்ந்த மக்கள் தொகை கொண்ட கிராமங்களும் உள்ளன. புதிதாய்ப் பெருகிய புலிகள் தாவர உண்ணிகளையும், கிராமங்களில் கிடைக்கும் எளிய இரையான கால்நடைகளையும் உண்டு ருசி கண்டுள்ளன. இப்போதெல்லாம் T1- ஐ எங்களால் இப்பகுதியில் பார்க்க இயலவில்லை. ஆனாலும் நாங்கள் பாதுகாப்பில் சமரசம் செய்வதில்லை. எப்போதாவது புலி நடமாட்டத்தை உணர்ந்தால் உடனே கிராமத்தாரை உஷார்படுத்துகிறோம்" என்றார்.
இந்த மோதலில் இரண்டு விஷயங்கள் உள்ளன எனக் கூறுகிறார் மகாராஷ்டிராவின் வனவிலங்குகளின் முதன்மைப் பாதுகாவலர் அசோக் குமார் மிஸ்ரா. "ஒருபுறம், வனத்துறையின் பாதுகாப்பு முயற்சியால் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திட்டமிட்டு நடத்தப்படும் வனவிலங்குகள் வேட்டையை நாங்கள் தடுத்துள்ளது ஒரு காரணம். இன்னொருபுறம், மக்கள் தொகை அதிகரிப்பால் வனங்களின் மீதான் அழுத்தமும் கூடி வருகிறது" என்றார்.
"இதுதவிர விதர்பா வனங்கள் சாலை, நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக வெகுவாக துண்டாடப்பட்டுள்ளன. இதனால் புலிகளின் வாழ்விடம் சுருங்கியுள்ளது, அறுபட்டுள்ளது. புலிகளின் பாரம்பரியத் தடங்கள் அழிக்கப்பட்டதால் அவை சுற்றித்திரிய இடம் இல்லாமல் போகிரது. இப்படி நடக்கும்போது மனித - விலங்கு மோதலைத் தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும்" என வினவுகிறார் மிஸ்ரா. "இவற்றையெல்லாம் தடுக்காவிட்டால் இந்த மோதல் இன்னும் ஆழமாகும்" என எச்சரிக்கிறார்