அவர்கள் மக்களை பாதுகாக்காமல் வன உயிரினங்களை மட்டுமே பாதுகாக்க விரும்பினால் தேர்தலின் போது வாக்களிக்கச் சொல்லி அவர்கள் விலங்குகளிடமே சென்று கேட்டுக் கொள்ளட்டும். "நாங்கள் எங்களது வன உரிமைகளையும் பெறவில்லை, மனிதர்கள் என்ற அந்தஸ்தையும் கூட நாங்கள் பெறவில்லை", என்று கூறுகிறார் அனார் சிங் பதோல். ஆதிவாசி சமூகங்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதாக மத்தியப் பிரதேச வனத் துறையின் அதிகாரிகள் கூறியதைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார், அவை அவர்களின் மூதாதையர்களின் நிலங்களில் இருந்து அவர்கள் வெளியேற்றப்படுவதை நியாயப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
கடந்த வாரம், பரேலா ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த, 35 வயதாகும் பதோல், 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் தேதி அன்று தில்லியில் நடைபெற்ற வன உரிமை பேரணியில் கலந்து கொள்வதற்காக, மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள கயிர்கேடா கிராமத்தில் இருந்து தில்லிக்கு வந்திருக்கிறார்.
வனத்துறையினர் தங்களின் சமூக வனப்பகுதிகளில் பயிர்களை மீண்டும் மீண்டும் அழிப்பதன் மூலம் ஆதிவாசிகளின் வன உரிமைகளை மறுக்கின்றனர், இதனால் ஆதிவாசிகள் விவசாயக் கூலித் தொழிலாளர்களாக தினசரி ஊதியத்திற்கு வேலை செய்யும்படியான கட்டாயத்தில் இருக்கின்றனர், என்று அவர் கூறுகிறார். பின்னர், வனத்துறையினருக்கு வருவாயைக் கொடுக்கும் தோட்டங்களை அமைப்பதற்காக வனத்துறை அதிகாரிகளால் அந்த நிலங்கள் கையகப் படுத்தப்படுகின்றன. புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள 12 கிராமங்களில் புலிகள் காப்பகம் அமைக்க வனத்துறையினரால் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தனது பரேலா ஆதிவாசி சமூகம், தங்களது சமுதாய வன நிலத்தில் விவசாய உரிமைகளை உறுதிப்படுத்த முயற்சிக்கும் போதேல்லாம் மத்தியப் பிரதேச வனத்துறை எவ்வாறு அவர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்துகிறது என்பதை பற்றி அவர் பேசுகிறார். எடுத்துக்காட்டாக, 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம், அண்டை கிராமமான சிவாலில் வன வெளியேற்றத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, அப்போது வனத்துறை அதிகாரிகள் பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தி சுடுவதற்கு அது வழிவகுத்தது. "நாங்கள் உணவுப் பயிர்களான சோயாபீன், மக்காச்சோளம், சோளம் மற்றும் அரிசி ஆகியவற்றை விளைவிக்கும் நிலத்தை, பெருநிறுவனங்களுக்கு தோட்டங்கள் அமைப்பதற்கு குத்தகைக்கு விடுவதற்கு தான் அரசாங்கம் விரும்புகிறது", என்று அவர் கூறுகிறார். "எங்களை அச்சுறுத்துவதற்காகவும் மற்றும் எங்களை இடம் பெயரச் சொல்லி கட்டாயப்படுத்துவதற்காகவும் தான் எங்களது பயிர்கள் எரிக்கப்படுகின்றன. இந்த நிலத்திற்கான எங்களது உரிமைகோரல் இன்னும் நிலுவையில் தான் இருக்கிறது", என்று அவர் கூறுகிறார்.
பூமி அதிகார் அந்தோலன் என்ற அமைப்பு இந்தியா முழுவதும் நில உரிமை அமைப்புகள் மற்றும் மக்கள் கூட்டமைப்புகளின் ஒரு பரந்து விரிந்த குழுவாகும், அது ஏற்பாடு செய்த பேரணியில் பதோலும் சேர்ந்து செல்கிறார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து குறைந்த பட்சம் 2,000 பேர் பங்கேற்று இருப்பர் (ஏற்பாட்டாளர்கள் இந்த எண்ணிக்கையை 5,000 என்று கூறுகின்றனர்) ஒவ்வொரு சமூகத்தினரிடமும் வனத்துறை உடனான சந்திப்புகளைப் பற்றிச் சொல்ல ஒரு கதை இருக்கிறது.
சட்டவிரோத கைதுகள், பயிர்களை எரித்தல் மற்றும் நெடுஞ்சாலைகள், பெரிய அணைகள் கட்டுதல், பணப்பயிர் தோட்டங்கள், சுரங்கம் அமைக்க அவர்களை பலவந்தமாக வெளியேற்றுதல் மற்றும் ஏனைய பிற வளர்ச்சித் திட்டங்களுக்கான அவர்ளின் சம்மதம் வரை அக்கதைகள் பரந்து விரிந்து உள்ளது.
இந்த நடைமுறையால், ஆதிவாசி சமூகங்களுக்கு சமூக வன வளங்கள் மற்றும் மேய்ச்சல் உரிமைகள் ஆகியவற்றில் இருந்து வரும் வருவாய் மறுக்கப்படுகிறது மேலும் பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள் என்று அழைக்கப்படும் இடத்தில் வன உரிமைகள் செல்லுபடியாகாதபடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தில்லி ஆர்ப்பாட்டத்தில் தங்களது மூதாதையர்களின் நிலத்தில் அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவதால் ஏற்பட்ட அவர்களின் கோபம் நன்றாக தெரிந்தது.
ஆந்திரா, மஹாராஷ்டிரா மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் வனவியல் நிர்வாகத்திற்கு எதிரான வெற்றிகரமான போராட்டங்களின் கதைகள் இந்த மக்களுக்கு மேற்கோள் காட்டப்பட்டன. இந்தப் போராட்டங்கள் பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகளின் உரிமைகளை அங்கீகரித்தல் சட்டம் அல்லது 2006 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வன உரிமைகள் சட்டம் ஆகியவற்றின் சட்ட பாதுகாப்பிலிருந்து விலக்கப்பட்டவை.
இமாச்சலப் பிரதேச மக்களை போல, பேரணியில் காங்கிரா மாவட்டத்திலுள்ள பாலம்பூர் நகரைச் சேர்ந்த பிரகாஷ் பண்டாரி வன உரிமைகள் சட்டத்தின் உத்தரவாதங்கள் குறித்து தனது மாநிலத்தில் அதிகரித்து வரும் விழிப்புணர்வு குறித்துப் பேசினார். உதாரணத்திற்கு, கின்னார் மாவட்டத்தில், ஆதிவாசி சமூகங்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கும் சுற்றுச்சூழல் அமைப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஒருங்கிணைந்த கசாங் நீர் மின் திட்டத்தை எதிர்க்க இச்சட்டத்தை பயன்படுத்தினர். இச்சமூகங்களின் வன உரிமைகளை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் பண்டாரி இணைந்து பணியாற்றுகிறார். ஒரு மாநிலத்தில் 60 சதவீதத்திற்கும் அதிகமான நிலங்கள் காடுகளாக இருக்கும் நிலையில், "வனப்பகுதியினைச் சாராமல் எந்த ஒரு பெரிய வளர்ச்சி திட்டமும் இங்கு நடைபெற முடியாது...", என்று அவர் கூறுகிறார். "இதனால் தான் இப்பகுதியின் மக்களுக்கும், சூழலுக்கும் அவர்களின் வன உரிமைகள் அங்கீகரிக்கப்படுவது அவசியமாகிறது", என்று அவர் கூறுகிறார்.
பேரணியில் கலந்து கொண்டவர்களில் எஃகு அமைச்சகத்தில் பணிபுரியும் R. நரசிம்மனும் இருந்தார். அவர் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஐந்தாவது அட்டவணை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். ஆந்திரப் பிரதேசத்தின் கிரிஜன சங்கத்தின் மக்களும் அவருடன் இருந்தனர். "பழங்குடியினர் தான் பழங்குடியினரை பாதுகாக்கின்றனர் அதைத் தான் நாங்கள் செய்தாக வேண்டும், அதே நேரத்தில் அரசாங்கம் எங்களின் பூர்வீக மரபுகளை அழிப்பதில் மும்முரமாக இருக்கிறது", என்று அவர் கூறுகிறார். அவர் தனது பகுதியில் உள்ள பாஃசைட் சுரங்கத்தினால் ஏற்பட்ட இடம்பெயர்வு மற்றும் மாசுபாடு ஆகியவை மாவட்டத்தில் உள்ள லம்பாடி மற்றும் கோண்டா ஆதிவாசிகளின் கிராமங்கள் மற்றும் கலாச்சாரத்தை மேலும் சீரழிக்கும் என்று அவர் கவலைப்படுகிறார். ஐந்தாவது அட்டவணை பகுதி பெரும்பாலும் பழங்குடியினர் வசிக்கும் பகுதி மேலும் இதற்கு இந்திய அரசியலமைப்பின் மூலம் சிறப்பு பாதுகாப்புகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், 2015 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் மாநில வனத்துறை ஆகியவை இரண்டு பெரிய நிறுவனங்களுக்கு பிரித்தெடுக்கும் சுரங்கத்திற்கான அனுமதிகளை வழங்கின. இது வன உரிமைகள் சட்டத்தின் மீதான நேரடி உரிமை மீறல் மற்றும் மாநில பழங்குடியினர் ஆலோசனைக் குழுவின் கட்டாயமாக வழங்கப்பட வேண்டிய ஆலோசனை இன்றி எடுக்கப்பட்ட முடிவு என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பேரணியின் முக்கிய கோரிக்கை வன உரிமைகள் சட்டத்தினை திறம்பட செயல்படுத்துவதும், பாரம்பரிய வனவாச சமூகங்களின் தனிப்பட்ட மற்றும் சமூக உரிமைகளை அங்கீகரிப்பதும் தான். போராட்டத்தில் பங்கேற்ற பலரும் வலியுறுத்தியதைப் போல அவர்களின் வன உரிமைகளுக்கான அச்சுறுத்தல் இப்போது வன உரிமைகள் சட்டத்தின் இருப்பு வரை நீண்டுள்ளது.
வன உரிமைச் சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்த மனுக்கள் மீதான வாதங்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. நீதிமன்றம் வன உரிமைச் சட்டத்தை முறியடித்தால், அது ஆதிவாசி மற்றும் பிற பாரம்பரிய வனவாச சமூகங்களைச் சேர்ந்த 10 லட்சத்துக்கும் அதிகமான மக்களை வனங்களை விட்டு வெளியேற்றுவதை சட்டபூர்வமாக அனுமதிக்கும்.
2006 ஆம் ஆண்டிற்குப் பிறகு அம்மக்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாக பதோலின் மனைவி ரியாலி தவார் கூறுகிறார். அந்த ஆண்டு வன வெளியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக பிறந்து 11 நாட்களே ஆன தனது பச்சிளம் குழந்தையிடம் இருந்து பிரிக்கப்பட்டு அவர் 45 நாட்கள் தொலைவில் இருந்து சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தொடர்ந்து போராடி வருகிறார் மேலும் தில்லியில் நடந்த பேரணியில் மற்றவர்களுடன் சேர்ந்து 'அரசாங்கத்தின் நிலம் என்று கூறப்படுவது உண்மையில் எங்களது நிலம்', என்று கோஷமிட்டார்.
இருப்பினும், ஐக்கிய வன மக்களின் இயக்கம் இரண்டு குறிப்பிடத்தக்க வெற்றிகளை கொண்டு வந்திருக்கிறது. ஒரு பழமையான மற்றும் முக்கிய மனுதாரரான - இந்திய வன விலங்கு அறக்கட்டளை - வனப் பாதுகாப்புச் சட்டத்தினை எதிர்கும் வழக்கிலிருந்து விலகியுள்ளது. சுற்றுச்சூழல், வன மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், இந்திய வனச் சட்டத்தில் (1927) முன்மொழியப்பட்ட திருத்தத்தை திரும்பப் பெற்றுள்ளது, இது வன அதிகாரிகளுக்கு தாக்குதல் நடத்தவும், மேலும் அது ஆக்கிரமிப்பாளர்களாகவோ அல்லது வேட்டையாடுபவார்களாகவோ அவர்களால் கண்டறியப்படும் மக்களை சுட்டுக் கொள்வதற்கான அதிகாரத்தையும் அவர்களுக்கு வழங்கியது.
2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி அன்று வன உரிமைகள் சட்டத்தை பாதுகாக்க முற்படும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பிறர் தாக்கல் செய்த முறையீட்டு விண்ணப்பங்களை உச்ச நீதிமன்றம் அனுமதித்தது, வனவிலங்கு முதன்மை மற்றும் பிற Vs இந்தியக் கூட்டமைப்பு, வழக்கில் அவர்களை முறையாக கட்சிக்காரர்களாக ஏற்றுக்கொண்டது. தனது சொந்த சட்டத்தையே பாதுகாக்க மத்திய அரசு தயக்கம் காட்டியதன் காரணமாக, இந்த சட்ட போரில் வன உரிமைகள் சட்டத்தை பாதுகாக்க முற்படும் ஒரே நிறுவனம் இது தான்.
"வன உரிமைகள் சட்டம் என்பது ஒரு அரசியலமைப்புச் சட்டம், நாங்கள் எங்களது அரசியலமைப்பை என்றுமே அவமதிக்க மாட்டோம்", என்று உச்சநீதிமன்றத்தில் இம்மனு குறித்து நிவாடா ராணா கூறுகிறார். அவர் உத்திரப்பிரதேசத்தின் கேரி மாவட்டத்தில் உள்ள சூடா கிராமத்தை சேர்ந்தவர், இந்த வழக்கில் உள்ள இரண்டு ஆதிவாசி மனுதாரர்களில் ஒருவராவார், மேலும் இவர் தாரு ஆதிவாசி விவசாயத் தொழிலாளர்களின் மகளிர் சங்கத்தின் தலைவராவார். தூத்வா தேசிய பூங்காவிற்காக வழுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு பிற கிராமங்களில் மறு குடியமர்தப்பட்டுள்ளவர்களை வனத்துறையினர் துன்புறுத்த முயற்சிக்காத ஒரு நேரத்தை தன்னால் நினைவுகூரக் கூட முடியவில்லை என்று அவர் கூறுகிறார். வன உரிமைகள் சட்டம் - பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கும் வன உரிமைகளை நீட்டிக்கிறது மேலும் மறு குடியேற்றத்திற்கான முன் ஒப்புதல்களை கிராமசபைகளிடமிருந்து பெறவேண்டியது கட்டாயமாக்குகிறது - அவரது பகுதியைச் சேர்ந்த பலருக்கு தனிப்பட்ட வன நிலம் மற்றும் வசிப்பிட உரிமைகளை பெற இச்சட்டம் உதவியிருக்கிறது. "நாங்கள் இதற்காக (வன உரிமைகள் சட்டத்திற்காக) போராடினோம், அதற்காக தொடர்ந்து போராடுவோம்", என்று அவர் கூறுகிறார்.
இந்தக்
கட்டுரையின்
ஒரு பதிப்பு முதன்முதலில் ஓக்லாண்ட் நிறுவனத்தால் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.
தமிழில்: சோனியா போஸ்