பாத்திமா பீபியிக்கு பிறந்த பச்சிளம் குழந்தை உயிரிழந்த பின்னரே அவர் தனது ஐந்தாவது பிரசவத்திற்காக சமுதாய பிரசவ மையத்தை நாடியுள்ளார். அதுவரை அவரது மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உட்பட அனைத்து குழந்தைகளுமே அவரது வீட்டிலேயே பிரசவித்துள்ளனர். இதுகுறித்து தெரிவித்த பீபியின் தாய் ஜமீலா “ஆக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக அந்த ஆண் குழந்தை இறந்தது. எனவே இந்த முறை நாங்கள் மருத்துவமனைக்கு வந்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
மேலும், பீபியின் குடும்பத்தினர் அவர்கள் வசித்து வரும் ராம்பூர் கிராமத்தில் இருந்து வெறும் 30 நிமிட பயணத்தொலைவில் உள்ள வடக்கு 24 பர்கனஸ் மாவட்டத்தின் பயர்மரி கிராமத்திற்குச் செல்வதற்காக 700 ரூபாய் செலவு செய்து வேன் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த பாத்திமா, ”எங்கள் கிராமத்தைச் சார்ந்த வறியப் பெண்கள் படகை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் செல்கின்றனர். உயர் அலை அடிக்கும் போது இது மிகவும் ஆபத்தானது. கடந்தாண்டு கூட, அதிகளவு பாரம் ஏற்றி வந்த படகொன்று உயர் அலையின் போது கத்கஹலி பகுதியில் கவிழ்ந்தது. சிலர் உயிரிழக்கவும் செய்தனர்” என்று கூறினார்.
பாத்திமா சந்தித்து வந்த பிரச்சனைகள் சுந்தர்பன் பகுதியில் கருவுற்ற பெண்கள் எப்போதும் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு உதாரணமாக உள்ளது. இது அனைத்து உடல்நலன் சார் சிக்கல்களுக்கும் பொருந்தக்கூடியது. இந்தத் தீவுப்பகுதியில் வசிக்கக்கூடிய பெரும்பாலான மக்களுக்கு மருத்துவ உதவி பெறுவது என்பது மலை மீது ஏறும் பயணம் போன்று தான் உள்ளது.
சுந்தர்பன் பகுதியில் வசிக்கக் கூடிய மக்கள் மருத்துவ உதவிக்காக முதலில் அணுகக்கூடிய அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களான துணை மருத்துவமனைகள்(sub-centers) சுந்தர்பன் பகுதியைச் சுற்றி மிகக்குறைந்த அளவிலேயே உள்ளன. அதாவது 5000 பேருக்கு ஒரு துணை மருத்துவமனை என்ற வீதத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதேவேளையில், வடக்கு 24 பர்கனஸ் மாவட்டத்தின் பச்சிம் ஸ்ரீபதிநகர் மற்றும் புர்பா ஸ்ரீபதிநகர் ஆகிய கிராமங்களின் மொத்த மக்கள் தொகை ஏறத்தாழ 9500 ( 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி). இந்த மொத்த மக்கள் தொகையானது அதிலிருந்து உயர்ந்துக்கொண்டும் இருக்கிறது. எனவே, 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் முறையான உபகரணங்கள் இல்லாத துணை மருத்துவமனைகளை முழுமையாக சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சிலர் மருத்துவ உதவிகளுக்காக உள்ளூர் பகுதிகளில் தங்களை மருத்துவர்களாக சுயபிரகடனம் செய்யக்கூடியவர்களை நாடி வருகின்றனர்.
மேலும், இது போன்று அழுத்தங்களின் காரணமாக சுந்தர்பன் பகுதியில் தொலைவில் அமைந்துள்ள பகுதிகளான பச்சிம் ஸ்ரீபதிநகர் போன்ற கிராமத்தின் மக்கள் இடம்பெயர்ந்து செல்லும் வகையிலான தற்காலிக மருத்துவ அலகு(mobile medical units) போன்ற சேவைகளை நாடியுள்ளனர். இதில் சில அலகுகள் படகுகளில் இயக்கப்பட்டு ஆற்றில் சென்று வருகிறது. நாங்கள் அங்கு சென்ற அன்றைய தினம், உடல்நலக் குறைவுக்கு உள்ளான மருத்துவ உதவி தேவைபடக்கூடிய சிலர் சிறியளவிலான கூட்டமாக அன்று மருத்துவ மனையாகச் செயல்படக்கூடிய வெறுமையான அறையின் முன் காத்துக்கிடந்தனர். ஷிபுவா ஆற்றில் இரண்டு மணிநேரம் பயணித்து அந்த மருத்துவக்குழுவானது அப்போது தான் அந்தப் பகுதியை அடைந்திருந்தது. செவ்வாய்க்கிழமையான அன்று அந்த மருத்துவ அலகு இந்தக் கிராமத்தில் மருத்துவ சேவை வழங்குவதற்காக ஓதுக்கப்பட்டுள்ளது.
இடம்பெயரும் வகையிலான இந்த தற்காலிக மருத்துவ மனை தேசிய சுகாதாரத் திட்டத்தின் பகுதியாகும். மேலும், தென்னக சுகாதார மேம்பாட்டு சமிதி(SHIS) மற்றும் இதர தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இதனை செயல்படுத்தி வருகின்றன. பச்சிம் ஸ்ரீபதி நகர் மற்றும் புர்பா ஸ்ரீபதிநகர் பகுதிகளில் அமைந்துள்ள இரண்டு துணை மருத்துவ மையங்களில் சிகிச்சைப் பெற இயலாது விடுபட்டு போன பகுதிகள் மற்றும் சுந்தர்பன் பகுதியின் பிற பகுதிகளில் சேவை புரியும் வகையில் இந்த அலகு செயல்பட்டு வருகின்றது.
இந்த தீவு 4.4 மில்லியன் மக்கள் தொகை கொண்டுள்ள நிலையில், 10 க்கும் குறைவான இதுபோன்ற தற்காலிக மருத்துவ அலகுகளே சுந்தர்பன் பகுதியில் உள்ளன. எனினும், கடினமான நிலப்பரப்பைக் கடந்தே துணை மருத்துவ மையங்களுக்கு செல்ல வேண்டி உள்ளதால் இந்த கிராமத்தினர் பலரும் தற்காலிக மருத்துவ அலகுகளுக்கே செல்கின்றனர். அங்கு சென்றாலும் கூட தகுதி வாய்ந்த மருத்துவர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.
பச்சிம் ஸ்ரீபதிநகர் பகுதியைச் சார்ந்த ஆஷா தாஸ் அவரது வீட்டிலிருந்து ஒரு அறை கொண்ட மருத்துவ மையத்திற்கு நடந்து செல்கிறார். உடல்நலக்குறைவு கொண்டுள்ள சமயத்தில் அரைகுறையாக மேவப்பட்ட செங்கல் சாலைகளில் கொளுத்தும் வெயிலில் நடந்து செல்வது அவ்வளவு எளிதானது அல்ல. சிகிச்சை பெறுவதில் உள்ள சிக்கல்கள் குறித்து அவர் கூறுகையில்: “எஸ். எச்.அய்.எஸ் போன்ற நிறுவனங்கள் நடத்தி வரும் மருத்துவமனைகள் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே இயங்குகிறது. எனவே பிற நாட்களில் மருத்துவ உதவி பெறுவதற்கு துணை மருத்துவ நிலையங்களையும், தகுதியற்ற மருத்துவ மனைகளையும் நாங்கள் நாட வேண்டியுள்ளது. பதர்பிரதிமா பகுதியில் உள்ள(பொது) மருத்துவமனைக்கு செல்வதற்கு கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் பயணிக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 100 ரூபாயாவது செலவிட வேண்டும். அங்கு செல்ல நாங்கள் குறைந்தபட்சம் இரண்டு படகுகள் மற்றும் வேன்களில் பயணிக்க வேண்டும். எனவே, அவசர காலங்களில் நாங்கள் கையறு நிலையில் இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.
இந்த பகுதியைச் சார்ந்த மக்கள் மூட்டு பிரச்சனை, மூட்டுநோய், ஸ்பான்டைலிடிஸ், வெள்ளை படுதல், சிரங்கு, அரிக்கும் தோலழற்சி மற்றும் கொதிப்பு போன்ற பொதுவான உடல்நலக்குறைபாடுகளுக்காக இடம்பெயர்ந்து செல்லும் வகையிலான தற்காலிக மருத்துவமனையை அணுகுவதாக எஸ்.எச்.அய்.எஸ் மருத்துவ நிலையத்தைச் சார்ந்த தேப்ஜீத் மைடி கூறினார். இந்நிலையில், அந்த மருத்துவ நிலையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வரக்கூடிய மருத்துவர். பிரசந்தா ராய் சௌத்திரி, இப்பகுதி தண்ணீரில் இருக்ககூடிய அதிகளவிலான உப்பு அளவே சுந்தர்பன் பகுதியில் ஏற்படும் பல உடல்நலக்குறைவிற்கு முக்கியக் காரணம் என்று குறிப்பிட்டார்.
மேலும், சுந்தர்பன் பகுதியில் மருத்துவ சேவையைப்பெறுவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் கூட அவர் தெரிவித்தார்: “மருத்துவர்கள் இங்கு வருவதற்கு விரும்புவதில்லை. இங்கு குறைந்த ஊதியமும், வாழ்வதற்கான வசதிவாய்ப்புகளும் இல்லை. மேலும், சில இடங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான இடங்களை கூட அரசு அவர்களுக்கு வழங்கவில்லை. ஏன் அவர்கள் இங்கு வர வேண்டும்? எனவே, தகுதியற்ற உள்ளூர் மருத்துவர்கள் அவர்களுக்கு முறையற்ற வகையில் சிகிச்சையளிக்கின்றனர். மேலும் எப்போதாவது அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கக் கூட செய்கின்றனர். மருத்துவ சேவையைப் பெறுவதில் உள்ள இந்த தடைகளானது கருவுற்ற பெண்களை பெரிதளவில் பாதித்துள்ளது.
பச்சிம் பகுதியில் அமைந்துள்ள அரசின் துணை மருத்துவ மையம் எஸ்.எச்.அய்.எஸ் மருத்துவ நிலையத்திலிருந்து வெகு அருகில் அமைந்துள்ளது. அந்த துணை மருத்துவ மையத்தினுள் மொஹிமா மோண்டல் மற்றும் லோஹி போர் மோண்டல் ஆகிய இரு துணை செவிலியர்கள் அமர்ந்திருக்கின்றனர். அங்கு நோயாளிகளை பரிசோதிப்பதற்காக இரண்டு மேசைகள் மட்டுமே உள்ளன. மற்றபடி படுக்கை வசதியோ, மின்சார வசதியோ இல்லை. மேலும், தற்காலிக எஸ்.எச்.அய்.எஸ் மருத்துவநிலையம் செயல்படுகிற மதிய வேளையின் போது அந்த துணை மருத்துவ நிலையத்துள் ஒரு நோயாளியையும் பார்க்க முடியவில்லை. அந்த இரு துணை செவிலியர்கள் கூறுகையில், “நாங்களும் கூட எஸ்.எச்.அய்.எஸ் போன்று தீவிலுள்ள மருத்துவ நிலையத்திற்கு தகுதி வாய்ந்த மருத்துவர்கள் வருகை புரியும் போது மக்களைச் சந்திக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்தனர்.
அந்த துணை மருத்துவ நிலையத்தில் சாதாரண உடல்நலக்குறைவுகளுக்கும், கருவுற்ற பெண்களுக்கான பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிரசவத்திற்கு பிறகான பராமரிப்பிற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவசேவைகள் துணை செவிலியர்கள், சில ஆஷா பணியாளர்கள் (அங்கீகாரம் பெற்ற சமூக நல ஆர்வலர்- ASHA) மற்றும் ஆண் செவிலியர் வழியாக வழங்கப்பட்டு வருகிறது. எவ்வாறாயினும், இங்கு பிரசவம் பார்க்கப்படுவதில்லை. லோஹி போர் மோண்டல் கூறுகையில், “பெண்கள் மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொள்ள அவர்களை நாங்கள் நம்பிக்கைக் கொள்ள செய்ய வேண்டும் (தொலைவு மற்றும் செலவு உண்மையிலேயே அவர்கள் எதிர்கொள்ளும் தடைகள் என்பதால்). மேலும், பஞ்சாயத்து அமைப்புகளும் கூட மருத்துவமனையில் பிள்ளை பெற்றுக் கொண்டால் மட்டும் தான் பெண்கள் ரேஷன் அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ் போன்றவற்றை பெற முடியுமென யுத்திகளை வகுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.
பாலியாரா கிராமத்தில் உள்ள துணை மருத்துவ மையத்தில் ‘தைமா’ (பாரம்பரிய மருத்துவ உதவியாளர்) வாக உள்ளார். கருவுற்ற பெண்கள் அவர்களது குழந்தைகளைப் பிரசவிப்பதற்கு உதவுவதே அவரது பணியாகும். அவருக்கு வயது தற்போது 50க்கும் மேல் இருக்கக்கூடும். 14 ஆண்டுகளுக்கும் முன்னர் அவர் இந்தப் பணியைத் தொடங்கிய போது, அவரின் மாத வருவாய் 25 ருபாயாக இருந்தது. தற்போது 550 ருபாய். அவர் கூறுகையில்,”துணை செவிலியர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் போன்று எனக்கு என் வண்ண புடவைகள் அளிக்கப்படவில்லை? நான் நிறைய உழைத்துள்ளேன், ஆனால் எந்த அங்கீகாரத்தையும் பெறவில்லை. என் மதிய உணவு அல்லது உணவிற்கான பணத்தினைக் கூட நான் பெறவில்லை” என்று கூறினார்.
இதேவேளையில், மூன்று மாதங்களுக்கு முன்னர் லக்ஷ்மிபூர் கிராமத்தில் சமுதாய பிரசவ நிலையம்(CDC) கட்டப்பட்டதற்குப் பின்னர், நிலைமை ஓரளவு மேம்பாடு அடைந்துள்ளது. பல சமுதாய பிரசவ நிலையங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் நடக்கும் பிரசவங்களை ஊக்குவிப்பதற்காக இவை கட்டப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளுடன் சேர்ந்து, இங்கு அதிகளவிலான பெண்கள் மருத்துவமனைகளில் பிரசவம் செய்ய இவை வழிவகை செய்கின்றன. ஆனாலும், சுந்தர்பனில் பிறக்கும் குழந்தைகளில் 55 விழுக்காடு குழந்தைகள் தற்போது வரை வீடுகளிலேயே பிறந்து வருவதாக கடந்த 2014 ஆம் ஆண்டு கொல்கத்தாவிலுள்ள இந்திய சுகாதார மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த பகுதியில் நிலவி வரும் சுகாதார நல இடைவெளியை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முகாம்கள் அமைத்து ஈடுகட்டிவருகின்றன. இதேபோன்று மௌசுனி தீவின் நம்கஹனா பகுதியைச் சேர்ந்த பரிதா பைக், சமாஜ் உன்னையன் கேந்திரா என்ற அமைப்பால் பள்ளிக்கூடத்தின் வகுப்பறையொன்றில் நடைபெறவிருந்த முகாமிற்கு உதவிக் கொண்டிருந்தார். மேலும், இந்த தன்னார்வத் தொண்டு நிறுவனமானது கடந்த 2015 ஆம் ஆண்டு இதன் நிதி இருப்பு தீர்ந்து போவதற்கு முன்னர் வரை தினந்தோறும் மக்களின் சேவைக்காக மருத்துவ படகை இயக்கி வந்துள்ளது.(இது தேசிய சுகாதாரத் திட்டத்தின் பகுதியாக செயல்படுத்தவில்லை) தற்போது, அவ்வப்போது சுகாதார முகாம்கள் நடத்தி வருகிறது. இந்தாண்டு மே மாதம் கூட இந்நிறுவனம் இந்த தீவுப் பகுதியில் கண் சிகிச்சை முகாம் ஒன்றை நடத்தியுள்ளது.
“பஞ்சாயத்து இந்த முகாம் குறித்து மைக்கில் அறிவித்தால், கிராமத்தினருக்கு இதுகுறித்து தெரியும்” என்றார் பரிதா. மேற்கொண்டு கூறும் போது,”எங்கள் உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ள போது, இங்கிருந்து ஏறத்தாழ 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாரிக்நகர் பொது மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகிறோம். சிலநேரம், அங்கு மருத்துவரோ, ஆக்சிஜன் வசதியோ இருப்பதில்லை அல்லது சிசேரியன்(பிரசவம்) செய்யப்படுவதில்லை(caesarean). எனவே, அவர்கள் அங்கிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காக்தீப் மருத்துவமனையை பரிந்துரைக்கின்றனர். கருவுற்ற பெண்கள் காக்தீப்பிற்குச் செல்லும் போது உயர் அலைகள் மற்றும் தரமற்ற சாலைகளை ஆகியவற்றை எதிர்கொள்ள நேருகிறது” என்று தெரிவித்தார்.
மேலும், எந்த மருத்துவமனையும் உதவாததால், இந்த தீவைச் சார்ந்தவர்கள் டைமன்ட் துறைமுகம் மற்றும் கொல்கத்தா நகரில் உள்ள பெரிய மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனர். இதற்கு 5 முதல் 6 மணிநேர பயண நேரமும், கணிசமான தொகையும் செலவாகிறது.
இந்நிலையில், எஸ்.எச்.அய்.எஸ் சுகாதாரத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் ஆலம், தொலைதூரத்தில் உள்ள பகுதிகளைச் அரசு சென்றடைவது என்பது இயலாத காரியமென உணர்வதாக தெரிவித்தார். மேலும், கடக்புகூர் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து இதுகுறித்து என்னிடம் பேசிய அவர், “அவர்களால் எவ்வளவு தூரம் சென்றடைய முடியும்? அவர்களும் கூட நிதிப் பற்றாக்குறையில் உள்ளனர். தற்காலிக மருத்துவ படகுகள் அல்லது சி.டி.சி கள் எதுவாக இருந்தாலும், அவை பெரும்பாலும் பொது-தனியார் கூட்டு பங்கேற்பு மாதிரியில் இயங்குகின்றன. எனவே, சுகாதார சேவைகளை வழங்கக்கூடிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியை அரசாங்கம் பெரிதும் நம்பியுள்ளது” என்று குறிப்பிட்டார்.
தேப்ஜீத் மைதி மேற்கொண்டு கூறுகையில், “ பொது-தனியார் கூட்டு பங்கேற்பு மாதிரி நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பினும், சுந்தர்பன் பகுதியிலுள்ள தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் போதிய அளவு மருத்துவ சேவைகள் கிடைக்கப்பெறவில்லை. உதாரணமாக நம்கஹனா,குல்டலி, பதர்பிரதிமா, ராய்திஹி, கோசபா, பசந்தி மற்றும் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தின் ஸ்வாதீஸ் ஆகிய பகுதிகளில் போதிய மருத்துவ சேவைகள் கிடைக்கப்பெறவில்லை”. என்றார்.
ஆனால், பயர்மரி சி.டி.சியைச் சார்ந்த மருத்துவர் நில்மதாப் பானர்ஜி வேறொரு பார்வையை முன்வைத்தார்: “எவ்வளவு காலத்திற்கு உடைந்த சாலைகளையும் மூர்க்கமான ஆற்றையும் குறை சொல்லிக்கொண்டு இருப்பீர்கள்? இந்த நிலைமை சுந்தர்பனில் மட்டும் நிலவவில்லை. இவை எல்லாம் சாக்குபோக்குகளே. இவை சுகாதாரக் கட்டமைப்புகளின் பல்வேறு நிலைகளில் நிலவக்கூடிய பிரச்சனை. கிராமப்புறங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் சந்திக்கும் சவால்கள் உட்பட இந்த பிரச்சனைகள் கவனிக்கப்பட வேண்டுபவை” என்று குறிப்பிட்டார்.
இதற்கிடையில் சுந்தர்பன் காடுகளில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வையும், உடல் நலனையும் பணயம் வைத்து வாழ்ந்து வருவது தொடர்ந்துக்கொண்டே தான் இருக்கிறது.
தமிழில்: பிரதீப் இளங்கோவன்.