ஒரு ஏக்கருக்கும் குறைவாக இருக்கும் குடும்ப நிலத்தில் பத்து வருடங்களுக்கு பிறகு அவர் வேலை பார்க்கிறார். “புலம்பெயர் தொழிலாளர்கள் (பிகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள்) குறைந்த நேரத்தில் அதிக வேலை செய்து பணத்தை எனக்கு சேமித்துக் கொடுத்ததால், தனிப்பட்டளவில் நானே நிலத்துக்கு சென்று வேலை பார்ப்பதை நிறுத்தியிருந்தேன்,” என்றார் அவர். “ஆனால் இப்போது வெளியூர் தொழிலாளர்கள் வரவில்லை என்றால், நெல் விவசாயத்தை நான் கைவிட வேண்டியிருக்கும்,” என்கிறார் 62 வயதாகும் ரெஹ்மான். முன்னாள் அரசு ஊழியராக இருந்தவர்.
”ஒரு 15 வருடங்களுக்கு பிறகு அறுவடைக்காலத்தில் என் நிலத்தில் நிற்கிறேன். எப்படி அறுவடை செய்ய வேண்டும் என்பதை கூட நாங்கள் மறந்துவிட்டோம்,” என்கிறார் 60 வயதாகும் ஹலீமா. கடந்த மாதம், அவர் இரண்டு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் வீட்டிலிருந்து கணவருக்கும் 29 வயது மகன் அலி முகமதுக்கும் உணவு கொண்டு வந்தார். பிற நேரங்களில் அலி முகமது மணல் குவாரிகளிலும் கட்டுமான தளங்களில் அன்றாடக் கூலியாக வேலை பார்த்தார்.
மத்திய காஷ்மீரின் நெல்வயல்களில் ஒரு கனல் (எட்டு கனல் ஒரு ஏக்கர்) நெல் அறுவடைக்கு, 1000 ரூபாய் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஊதியமாக கொடுக்கப்படும். 4-5 தொழிலாளர்கள் ஓர் அணியாக வேலை பார்த்து ஒரு நாளில் 4-5 கனல்கள் அறுவடை செய்து விடுவார்கள். உள்ளூர் தொழிலாளர்கள் அதிக ஊதியம் கேட்கிறார்கள். ஒரு நாளுக்கு 800 ரூபாய் கூலி கேட்கிறார்கள். நான்கு உள்ளூர் தொழிலாளர்கள் சேர்ந்து ஒரு நாளில் ஒரு கனல் (அதிகபட்சம் 1.5 அல்லது 2) மட்டுமே அறுவடை செய்கிறார்கள். ஒரு கனலுக்கு மொத்தமாக 3200 ரூபாய் ஆகிறது.
2019ம் ஆண்டின் ஆகஸ்டு 5ம் தேதி சட்டம் 370 நீக்கப்பட்டு பல மாதங்களுக்கு முழு அடைப்பு இருந்தது. அடுத்த சில மாதங்களிலேயே ஊரடங்கும் தொடங்கியது. காஷ்மீரை சேராதவர் அனைவரையும் 24 மணி நேரங்களுக்குள் வெளியேற சொன்ன பிறகு, விவசாய வேலைக்கு என புலம்பெயர் தொழிலாளர் கிடைப்பது கடினமாகிவிட்டது. சிலர் மட்டும் தங்கி ஏப்ரல், மே மாதங்களில் நெல் நடவு செய்தார்கள். ஆனால் திறம் வாய்ந்த வேலையாட்களுக்கான தேவை ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களின் அறுவடை நேரத்தில்தான் இருக்கும் என்கின்றனர் விவசாயிகள்.
நக்பாலிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் டரெண்ட் கிராமத்தில் வசிப்பவர் இஷ்தியாக் அகமது ராதெர். ஏழு கனல் நிலம் வைத்திருந்தும் அவ்வப்போது அன்றாடக்கூலி வேலைக்கும் செல்லும் அவர், “இந்த அறுவடைக் காலத்தில் ஒரு கனலில் நான்கு பேர் வேலை பார்க்க 3200 ரூபாய் கேட்கிறார்கள். எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை. தற்போது நெல் அறுவடையில் அனுபவமில்லாத அன்றாடக் கூலி தொழிலாளர்களைத்தான் நாங்கள் வேலைக்கு வைக்கிறோம். எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் பயிரை இப்போது அறுவடை செய்தால்தான் அடுத்த வருட நடவுக்கு தயாராக முடியும். இதே வேலைக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் வெறும் 1000 ரூபாய்தான் கேட்பார்கள்,” என்கிறார்.
அகமது ராதெரும் இங்கிருக்கும் பிற விவசாயிகளும் கடுகு, பட்டாணி போன்ற பல பயிர்களை குறுவை பருவத்தில் பயிரிடுகிறார்கள். கந்தெர்பலில் சிறு நிலங்கள் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு நெல்தான் பிரதான பயிர் என்றும் குறிப்பாக ஷாலிமார் 3, ஷாலிமார் 4, ஷாலிமார் 5 வகைகளை பயிரிடுவார்கள் என்கிறார் விவசாய இயக்குநரான சையது அல்தாஃப் அய்ஜாஸ் அந்த்ராபி.
விவசாய இயக்குநர் அலுவலகத் தரவுகள்படி காஷ்மீரின் மொத்த விவசாய நிலத்தில் (4.96 ஹெக்டேர்கள்), 28 சதவிகிதமான 1.41 ஹெக்டேர் நிலங்களில் நெல் பயிரிடப்படுகிறது. “நெல்தான் இங்கு பிரதான பயிர். அதன் இனிய சுவை காஷ்மீருக்கு வெளியே எங்கும் கிடைக்காது,” என்கிறார் அந்த்ராபி. நீர் வளம் நிறைந்த காஷ்மீரில் ஒரு ஹெக்டேருக்கு 67 குவிண்டால் நெல் கிடைக்கிறது என்கிறார். பலரின் வாழ்வாதாரமாக நெல் இருக்கிறது. அறுவடை செய்யும் நெல்லை விவசாயக் குடும்பங்கள் சொந்த பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்கின்றனர். குறிப்பாக கொடூரமான குளிர் மாதங்களில் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
ஆனால் இந்த வருடத்தில், ரஹ்மான் மற்றும் ராதெர் போன்ற சிறு நிலம் கொண்டிருக்கும் விவசாயிகள் இரண்டு விதங்களில் நஷ்டத்தை சந்தித்திருக்கின்றனர். ஊரடங்கினால், அவர்களும் குடும்ப உறுப்பினர்கள் அன்றாடக் கூலி வேலைகளை இழந்திருக்கிறார்கள். செங்கல் சூளை, மணல் குவாரி, கட்டுமான தளம் போன்ற இடங்களில் வழக்கமாக 600 ரூபாய் அன்றாடக் கூலியாக வழங்கப்படும். அடுத்ததாக, அறுவடைக்கென விவசாயிகள் உள்ளூர் தொழிலாளர்களைத்தான் பணிக்கு அமர்த்த வேண்டியிருக்கிறது. அவர்களுக்கான கூலி விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாத உயரத்தில் இருக்கிறது.
மத்திய காஷ்மீரின் பட்கம் மாவட்ட கரிபோரா கிராமத்தில் வசிக்கும் 38 வயது ரியாஸ் அகமது மிர்ரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார். ஊரடங்கினால் மண் தோண்டும் வேலையை இழந்துவிட்டு, அவரிடம் இருக்கும் 12 கனல் நிலத்தின் அறுவடையை பெரிதும் நம்பியிருக்கிறார். “நிலத்தை நான் மிகவும் நம்பியிருக்கிறேன். ஆனால் எதிர்பாராத மழை (செப்டம்பர் மாத தொடக்கத்தில்) பெருமளவிலான பயிரை நாசம் செய்துவிட்டது,” என சில வாரங்களுக்கு முன் கூறினார். “புலம்பெயர் தொழிலாளர்கள் இங்கு இருந்திருந்தால், அவர்களின் துரித அறுவடை திறமையால், கொஞ்ச நெல்லையேனும் காப்பாற்றியிருக்க முடியும்.”
டரெண்ட் கிராமத்தில் நான்கு கனல் நிலம் வைத்திருக்கும் 55 வயது அப்துல் ஹமீது பர்ராவும் இதே போன்ற நம்பிக்கைதான் கொண்டிருக்கிறார்: “புலம்பெயர் தொழிலாளர்கள் காஷ்மீர் நெல் வயல்களில் இல்லாதது இதுவே முதல் முறை.” (குறைவெனினும் கடந்த வருடத்தில் சிலர் இருந்தனர்.) “ஊரடங்கு, கடையடைப்பு காலங்களில் நாங்கள் வேலை பார்த்திருக்கிறோம். கோவிட் காலம் வேறாக இருக்கிறது. எங்கள் நெல் வயல்களில் புலம்பெயர் தொழிலாளர்களை எதிர்காலத்தில் பார்க்க முடியுமென நம்புகிறேன்.”
இந்த நம்பிக்கைகள் பலிக்கக் கூடும். கடந்த இரண்டு வாரங்களாக, பிற மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் வரத் தொடங்கி விட்டனர்.
தமிழில்: ராஜசங்கீதன்