ஒடிசாவின் பாலங்கீர் மாவட்டத்தின் துசாமுண்டா கிராமத்திற்கு வெளியிலிருக்கும் குடிசை வீட்டில் தனது நான்கு குழந்தைகளுடன் விதவையான ஆதிவாசிப் பெண்ணான கமலா பஹாரியா வசித்து வருகிறார், நாங்கள் அவரைச் சந்தித்து 16 வருடங்கள் ஆகின்றது. அந்த நேரத்தில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு செங்கல் சூளை உரிமையாளர் வலுக்கட்டாயமாக வைத்திருந்த அவரது இரண்டு வயது மகனான கௌதக்கை மீட்க உத்தரவிடுமாறு கந்தபஞ்சியில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் கமலா முறையிட்டார்.
இக்குடும்பம் பஹாரிய பழங்குடி இனத்தை சேர்ந்தது, இவர்கள் பாரம்பரியமாக கூடைகள் தயாரித்து வந்தனர். அவர்கள் வேலை தேடி நகரத்திற்கு புலம்பெயர்ந்தனர் ஆனால் கமலா கர்ப்பமானார் மற்றும் நோய்வாய்பட்டார், அதனால் அவர்கள் கிராமத்துக்கே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அக்குடும்பத்தினர் சூளை உரிமையாளரிடமிருந்து வாங்கிய முன்பணத்தை மீட்டெடுப்பதற்காக அவர்களின் ஒரு குழந்தையை அவர் வலுக்கட்டாயமாக வைத்திருந்தார்.
நீதிமன்றம் குழந்தையை மீட்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டது, கௌதக் வீடு திரும்பினான்.
அதன் பிறகு பல ஆண்டுகள் கழிந்தாலும் பஹாரியா மக்களுக்கு எதுவும் மாறவில்லை, இச்சமூகத்தினரை கம்மர் சமூகம் என்றும் அழைப்பர், கிழக்கு ஒடிசாவில் இருக்கும் இவர்களுக்கு பழங்குடியினர் என்ற அந்தஸ்து கிடைக்க போராடி வருகின்றனர், இதே சமூகத்தைச் சேர்ந்த சத்தீஸ்கரில் இருக்கும் மக்கள் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினராக அங்கிகரிக்கப்பட்டுள்ளனர். தற்போது 18 வயதாகும் கௌதக்கிற்கு வேறு வழியில்லாமல் புலம்பெயர் தொழிலாளியாக இருக்கிறார். அவர் மும்பையில் உள்ள கட்டுமான தளங்களில் வேலை செய்து வருகிறார்.
"எட்டாம் வகுப்பிற்கு பிறகு வேலைக்காக அவன் நகரத்திற்கு செல்வது இது இரண்டாவது முறை", என்கிறார் கமலா. "நான் அவனிடம் கல்வியை தொடருமாறு கெஞ்சினேன், ஆனால் அவன் என் பேச்சை கேட்கவில்லை". இப்பகுதியில் இருக்கும் இளைஞர்கள் கட்டுமான தளத்தில் வேலை செய்வதை விரும்புகின்றனர், இது அவர்களுக்கு அதிக சுதந்திரத்தை அளிக்கிறது மேலும் செங்கல் சூளையில் அவர்கள் அனுபவிக்கும் சித்திரவதையை விட இது குறைவானதே.
கௌதக் தான் கமலாவின் நான்கு பிள்ளைகளில் மூத்தவர். அவரது மகள்கள் அனைவரும் பள்ளிக்கு செல்கின்றனர். 14 வயதாகும் சக்கரபத்தி 9ஆம் வகுப்பு படிக்கிறார், 13 வயதாகும் சந்திரகாந்தி 8ஆம் வகுப்பு படிக்கிறார் மற்றும் 10 வயதாகும் பிரேமலதா 4ஆம் வகுப்பு படிக்கிறார். சந்திரகாந்தி மற்றும் பிரேமலதா ஆகியோர் கஸ்தூர்பா காந்தி ஆசிரம பள்ளியில் படிக்கின்றனர், இப்பள்ளி குறிப்பாக பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கானது. முதலில் சக்கரபத்தியும் ஆசிரம பள்ளியில் தான் படித்தார் இப்போது வீட்டிலிருப்பதால் அருகிலிருக்கும் கிராமத்திலிருக்கும் உயர்நிலைப்பள்ளிக்கு சைக்கிளில் செல்கிறார்.
"கமலா நிறைய போராடியிருக்கிறார், ஆனால் அவர் எப்போதும் கைவிட்டதில்லை", என்கிறார் உள்ளூர் வழக்கறிஞர் மற்றும் மனித உரிமை ஆர்வலரும், இப்பகுதியிலிருந்து புலம்பெயந்தோருக்கான அதிகாரியான பிஷ்ணு சர்மா. அவர் தனது மகள்களை ஆசிரமப் பள்ளியில் சேர்ப்பதற்காக அரசாங்கத்தை எதிர்த்து போராடினார். அதிகாரிகள் முதலில் பஹாரியாக்கள் பழங்குடியினர்கள் அல்ல என்று கூறி அவர்களுக்கு அனுமதி மறுத்தனர்".




