“நாங்கள் தொடர்ந்து பசியோடு இருக்கலாம். ஆனாலும் அதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் எங்கள் கட்சிக்கொடிகளோடு வீதிகளில் ஊர்வலமாக போவோம். வேறு வழி கிடையாது. கட்டாயம் நாங்கள் செய்யவேண்டிய கடமை இது.” என்கிறார் நாராயணசாமி.
அனந்தப்பூர் மாவட்டத்தின் ராப்டாடு சட்டப்பேரவைத் தொகுதியில் அவர் ரேஷன் கடை வைத்திருக்கிறார். ஏப்ரல் 11 ஆம் தேதி வரைக்குமான தேர்தல் பிரச்சாரப் பணிகள் பற்றி அவர் பேசினார். நாடாளுமன்றத்துக்கும் சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் நடைபெறுகிற இந்தத் தேர்தலில் யார் எந்த முறையில் வாக்களிப்பார்கள், ஏன் அப்படி வாக்களிப்பார்கள் என்று விரிவாக விளக்கமாக அவர் பேசினார்.
இந்துப்பூர் மற்றும் கடப்பா நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உள்ளே வருகிற சட்டப்பேரவைத் தொகுதிகளான, ராப்டாடு மற்றும் புலிவேண்டுலா ஆகியவற்றின் மீதுதான் பெரும்பாலான கவனமும் விவாதமும் இருந்தது.
ராப்டாடு தொகுதியில் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் பரிதாலா ஸ்ரீராம் என்பவருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தோப்பு துருத்தி பிரகாஷ் ரெட்டி என்பவருக்கும்தான். 2009லிலும் 2014லிலும் ஸ்ரீராமின் அம்மா பரிதாலா சுனிதாவிடம் பிரகாஷ் ரெட்டி இந்த தொகுதியை இழந்திருந்திருந்தார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எஸ்.வி.சதீஷ்குமாருக்கும் போட்டி இருக்கிறது. அடுத்த முதலமைச்சராக வருவதற்கு வாய்ப்பு உள்ள ஜெகன்மோகனுக்குத் தான் வாய்ப்பு இருப்பதாக கணிசமானோர் கருதுகின்றனர்.
இந்துப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த நிம்மலா கிஸ்டப்பாக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் கோரண்ட்லா மாதவுக்கும்தான் போட்டி. கடப்பா நாடாளுமன்றத் தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அவினாஷ் ரெட்டி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவரை எதிர்த்து நிற்பவர்களில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதிநாராயண ரெட்டி முக்கியமானவராக இருக்கிறார்.
ஆனாலும், அனந்தபூர் மாவட்டத்தின் கிராமங்களில் உள்ள மக்கள் போட்டியிடுபவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் தெரிந்துகொண்டு அவர்களைப் பற்றி அக்கறைப்படுவதைவிட கட்சிகள் மற்றும் அவற்றின் பிரிவுகள் தொடர்பான விசுவாசிகளாகவே உள்ளனர்.ராப்டாடு பகுதியில் உள்ள கிராமத்தினரிடையே நாங்கள் பேசினோம். அவர்கள் நாடாளுமன்றத்துக்கும் சட்டப்பேரவைக்கும் வாக்களிக்க வேண்டியவர்களாக இருந்தபோதும் அவர்களின் கவனம் கூடுதலாக சட்டப்பேரவை தொகுதியில்தான் இருக்கிறது என்பது போல தோன்றுகிறது. இந்த தொகுதிகளில் உள்ளவர்களில் பொதுவாகவே நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றி அக்கறை செலுத்துவதைவிட மிக அதிகமாக அவர்கள் சட்டப்பேரவைத் தேர்தல் பற்றியே அக்கறை செலுத்துகிறார்கள் என்பதைப் பார்க்க முடிந்தது.










