கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஒரு புதிய மாலை அனந்தப்பூரில் இருக்கும் டாக்டர் அம்பேத்கரின் சிலையை அலங்கரிக்கிறது. ஏ.சுபன் என்கிற பூ வியாபாரி, தங்க வண்ணம் பூசப்பட்ட சிலையை நோக்கிய படிகளில் அவரின் குடும்பம் தொடுத்த சிவப்பு ரோஜாக்கள் அல்லது அல்லி மலர்களாலான மாலையை எடுத்துக் கொண்டு தினசரி காலை 8.30 மணிக்கு ஏறுகிறார். அவரோ அல்லது அவரது சகோதரரின் மகனான 17 வயது பப்லுவோ இந்த நடைமுறை தினமும் தொடர வைத்து விடுகிறார்கள்.
2010ம் ஆண்டில் சாலையின் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த டாக்டர் அம்பேத்கரின் பழைய சிலை அகற்றப்பட்டு, புதிய சிலை வந்தபோது இச்சடங்கு தொடங்கியது. அனந்தப்பூரின் மத்தியில் இருக்கும் கடிகாரக் கோபுரத்தின் தெற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் சிலை இருக்கிறது. சுபனின் பூக்கடையிலிருந்து நடக்கும் தூரம்தான்.
அருகே இருக்கும் பிற சிலைகளுக்கு அதிர்ஷ்டம் குறைவுதான். கடிகாரக் கோபுரத்துக்கு அருகே முதலில் இருப்பது இந்திரா காந்தியின் சிலை. தற்போது அச்சிலை சணல் துணியால் மூடப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் ஆந்திராவில் ஆட்சியிலிருந்த காலம் (2004 முதல் 2014) வரை பல நல்ல நாட்களை அது கண்டிருக்கிறது. 2013ம் ஆண்டில் ஆந்திராவிலிருந்து தெலெங்கானாவைப் பிரித்ததற்கு எதிராக நடந்த போராட்டங்களில் அச்சிலையின் முந்தைய வடிவம் இடிக்கப்பட்டு எரிக்கப்பட்டது. பிறகு புதியச் சிலை நிர்மாணிக்கப்பட்டது. எனினும் மூடியே வைக்கப்பட்டிருக்கிறது. அந்த வரிசையில் இருக்கும் ராஜீவ் காந்தியின் சிலையும் மூடப்பட்டிருக்கிறது. இவை, காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் அடைந்திருக்கும் நிலையின் பிரதிபலிப்பாக இருக்கலாம்.







