“எனது மூத்த மகன் ஒரு ஆட்டோ டிரைவர். அவனது மனைவி சில வீடுகளில் சமையல் வேலை செய்கிறார். காவல்துறையினர் ரோந்துப் பணியைத் தொடங்குவதற்கு முன்பே ,அதிகாலையில் இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள். மகன் எனது மருமகளை தனது ஆட்டோவில் கொண்டு போய் இறக்கிவிடுகிறார். அவள் ஒரு குடும்பத்திற்காக சமைக்கிறாள், பின்னர் அவர்கள் மாலையில் திரும்பி வருகிறார்கள்” என்கிறார் வயதான பெண் ஒருவர். பல தொழிலாளர்கள் இவ்வாறு ரகசியமாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், வசதி படைத்தவர்கள் இந்த கொள்ளை நோயை தங்கள் வாழ்க்கையில் தங்களுக்கு மிகவும் அவசியமாக தேவைப்படுகிற ஓய்வு காலமாக பார்க்கிறார்கள். "கொரோனா வைரஸ் விடுமுறைகள் கிடைத்துள்ளன," என்று மார்ச் 19 அன்று ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளியே ஒரு நபர் சொல்வதைக் கேட்டேன்.
எங்கள் வீட்டின் பால்கனியில் இருந்து பார்த்தால் சங்கமேஷ் நகரின் பறவைக் காட்சியை நம்மால் பார்க்க முடியும். எங்களுக்குப் பக்கத்தில் வசிக்கிற குடும்பங்கள் ஒன்று அல்லது இரண்டு அறைகளுடன் உள்ள நெருக்கடியான வீடுகளில் வாழ்கின்றன. அவர்கள் தங்கள் வீட்டிற்கு வெளியே கணிசமான நேரத்தைச் செலவிடுகிறார்கள். அவர்களில் சிலருக்கு உடல் ரீதியாக விலகியிருக்க வேண்டிய தூரத்தின் முக்கியத்துவத்தை நாங்கள் விளக்க முயற்சித்தோம். ஆனால், அனந்தபூரின் கோடையில் கடுமையான வெயிலும் வெப்பமும் எப்போதும் இருக்கும்.ஒரு மின் விசிறியின் கீழ் மூச்சுத் திணறுகிற வீட்டில் வாழ்வது எளிதானது அல்ல. எங்கள் பக்கத்து வீடுகளில் ஆட்டோ டிரைவர்கள், காய்கறி விற்பனையாளர்கள், பன்றி வளர்ப்பவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வீட்டுவேலை செய்வோர் உள்ளனர். இன்னும் பலரும் கூடைகளை நெசவு செய்கிறார்கள் அல்லது கை விசிறிகளை உருவாக்குகிறார்கள். அத்தகையோர்களுக்கு , ‘வீட்டிலிருந்து வேலை’ என்பது போன்றது இது . அரசின் இந்த பொது அடைப்பு காலகட்டத்திலும் அவர்கள் தொடர்ந்து வேலை செய்கின்றனர்.
அனந்தபூர் மாவட்டத்தில் தண்ணீர் கிடைப்பதே பெரிய விஷயம். அதிகாலையிலேயே எழுந்துதான் தண்ணீர் பிடிக்கவேண்டும், பெரும்பாலான நாட்களில், இங்குள்ள குழந்தைகள் தங்களின் அம்மா அப்பாக்களுக்குத் தண்ணீர் பிடிப்பதற்காக உதவுகிறார்கள். ஆட்டோ ரிக்சாக்களை தண்ணீர் டாங்குகளைக் கொண்டு வரும்வகையில் மாற்றியமைத்து, அவற்றின் மூலமாகத்தான் ‘சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்’ எங்கள் பகுதியில் விற்கப்படுகிறது. 2014 ஆம் வருடத்தில் மக்கள் ஆசையோடு பார்த்து மகிழ்ந்த தெலுங்கு சினிமா பாட்டுகளோடு அந்த ஆட்டோ ரிக்சாக்கள் வரும். மார்ச் 30 அன்றும் அப்படியே ஒரு ஆட்டோ ரிக்சா வந்தது. அதனிடம் வந்து ஒரு சில பெண்கள் தங்கள் பிளாஸ்டிக் பானைகளில் தண்ணீரை நிரப்பிக்கொண்டனர். அந்த ஆட்டோவின் ஒலிபெருக்கியில் பதிவுசெய்யப்பட்ட அறிவிப்பு தொடர்ச்சியாக வெளியாகும். “மற்ற வகையாக வரும் தண்ணீரில் ‘பாக்டீரியாக்கள் இருக்கும். வைரஸ்கள் இருக்கும்” என்று அந்த அறிவிப்பு சொல்லிக்கொண்டேயிருக்கும்.
பொது அடைப்பு என்பது அந்தப் பகுதி மக்களின் அன்றாட நடைமுறைகளை மெதுவாக மாற்றிவருகிறதுதான். ஆனாலும் பொது அடைப்புக்காக அரசாங்கம் அறிவித்திருக்கிற வழிமுறைகள் என்பவை, நகர்ப்புறங்களில் வசிக்கிற நடுத்தர வர்க்கத்தினருக்குப் பொருந்துவது போல இருக்கின்றன. அவற்றை சாமான்ய ஏழை மக்களால் பின்பற்றுவது என்பது அவர்களின் சக்திக்கு அப்பால் இருக்கிறது. சாமான்ய மக்களின் குழந்தைகள் தொடர்ந்து திருடன் - போலீஸ், கண்ணா மூச்சி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுகிறார்கள். இத்தகைய விளையாட்டுகளுக்கு எந்தவொரு சாதனமும் தேவையில்லை. வெறுமனே விளையாடலாம். இந்த பொது அடைப்பு என்பது குழந்தைகளைப் பொறுத்தவரையில் ஒரு நீட்டிக்கப்பட்ட விடுமுறை. தெருக்களில் சின்ன சின்ன சாமான்களை விற்பனை செய்வோர் சமீபத்தில் தான் வருவதை நிறுத்தினர். ‘வறுத்த கடலை, வறுத்த கடலை’ என்று எங்கள் தெருவில் உரக்க சப்தம் போட்டு வியாபாரம் செய்பவர், மார்ச் 21 அன்றுதான் வருவதை நிறுத்தினார். மார்ச் 28 முதல், ஐஸ்கிரீம் விற்பனையாளர் தலை காட்டவில்லை. காய்கறிகளை விற்பனை செய்பவர் மட்டும் தொடர்ந்து வருகிறார்.
எங்களுக்கு பக்கத்தில் மிகவும் நெரிசலான குடியிருப்பு பகுதி இருக்கிறது. அங்கே இருக்கிற வீடுகள் மிகவும் குறுகலானவை. அதில் வசிப்பவர்கள் அனைவரும் ஒரு நாளில் முழுக்க முழுக்க வீட்டுக்குள்ளேயே இருக்க முடியாது. அத்தியாவசியமான தேவைகளை சேமித்து வைப்பதற்கும் அவர்களுக்கு இடமில்லை. ‘நோய் தொற்று ஏற்படாமல் இருக்க தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் இடையில் இருக்க வேண்டிய இடைவெளியை பராமரிப்பதும் கிட்டத்தட்ட அவர்களுக்குத் சாத்தியம் இல்லாதது. பெரியவர்கள் தங்களது பகடைகளுடன் தரையில் உட்கார்ந்துகொண்டு அவர்களுக்குப் பிடித்த ஆடு - புலி விளையாட்டை விளையாடுகிறார்கள்.