மார்ச் 21ஆம் தேதி சனிக்கிழமை காலை நகரத்தில் பல கடைகள் மூடப்பட்டு இருந்தாலும், சந்தைகள் வெறிச்சோடி இருந்தாலும், வீதிகள் அமைதியாக இருந்தாலும், அனிதா கோடாலைப் பொருத்தவரை அது அவருக்கு ஒரு வழக்கமான வேலை நாளாகவே இருந்தது. கோவிட் 19 பரவுவதைத் தடுக்க அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் அன்றைய தினம் மும்பையில் உள்ள பலர் தங்கள் வீடுகளிலேயே அடைந்து கிடந்தனர்.
ஆனால் அனிதா அந்த அமைதியான தெருக்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார், சேறு போன்ற குப்பைகளாக இருந்த சாக்கடை நீரை கழுவிக் கொண்டிருந்தார். அந்த அசுத்தமான நீர் அவரது கால்களிலும் தெரித்தது. "எங்களைப் பொறுத்தவரை எல்லா நாளுமே ஆபத்தானது தான். இந்த கொரோனா காரணமாக மட்டுமல்ல, பல தலைமுறைகளாக இப்படித்தான் எங்களுக்கு இருக்கிறது", என்று அவர் கூறினார்.
காலை ஒன்பது மணி அளவில் கிழக்கு மும்பையின் செம்பூரில் உள்ள மகுல் கிராமத்தில் எம் மேற்கு வார்டில் தெருக்களையும் நடைபாதைகளையும் தூய்மைப்படுத்தும் பணியில் இரண்டு மணி நேரம் ஈடுபட்டிருந்தார்.
இந்த மோசமான சூழலில் அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது? "இந்த முகக் கவசங்கள் எங்களுக்கு நேற்று தான் வழங்கப்பட்டன (மார்ச் மாதம் 20ஆம் தேதி) அதுவும் இந்த வைரஸின் காரணமாக நாங்கள் போராடி பெற வேண்டியிருந்தது", என்று கூறினார். அவரது இடுப்பில் சேலையுடன் சேர்த்து இந்த முக கவசமும் சொருகப்பட்டிருந்தது. மேலும் 35 வயதாகும் அனிதா தனது பாதுகாப்பிற்காக கழுத்தைச் சுற்றி ஸ்கார்ப் அணிந்திருந்தார். இந்த முகக் கவசங்கள் மெல்லியதாக இருக்கிறது மேலும் இதை மறுபடியும் பயன்படுத்த முடியாது (ஏற்கனவே இரண்டு நாட்கள் பயன்படுத்தி ஆகிவிட்டது) என்று அவர் கூறினார். கையுறையோ அல்லது கால்களுக்கு தேவையான பாதுகாப்பு அணிகளோ எதுவும் அவரது பணியில் அவர் கேள்விபடாதவை.
அனிதா மாதங் சமூகத்தைச் சேர்ந்தவர், இச்சமூகம் மஹாராஷ்டிராவில் பட்டியல் இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது மேலும் இவரது குடும்பம் பல தலைமுறைகளாக தூய்மை பணியில் தான் ஈடுபட்டு வருகின்றனர் என்று அவர் கூறுகிறார். "எனது தாத்தா மும்பையில் திறந்த வெளியில் இருந்து மனித கழிவுகளை அகற்றி தலையில் சுமந்து கொண்டு செல்வார் என்று அவர் கூறினார். எந்த தலைமுறையாக இருந்தாலும் அல்லது எந்த ஆண்டாக இருந்தாலும், எங்கள் மக்கள் எப்போதும் மனிதர்களாக தங்கள் உரிமைகளை பெற போராட வேண்டி தான் இருக்கிறது", என்று அவர் கூறினார்.
விஷயங்களை இன்னும் மோசமாக்குவதற்கு அனிதா வசிக்கும் மற்றும் பணிபுரியும் பகுதியான மகுல் அருகில் உள்ள ரசாயன தொழிற்சாலைகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களின் காரணமாக காற்று மாசு அதிகரித்துள்ளது, காற்று நச்சாக மாறியுள்ளதாக கடந்த சில ஆண்டுகளாக செய்திகளில் வந்துள்ளது.









