“எங்கள் அனைவரையும் சுற்றி அசாம் இருக்கிறது,” என சாண்டோ டண்டி இந்த காணொளியில் பாடுகிறார். 25 வயது நிறைந்த அவர் ஜுமுர் பாணியில் இசையமைத்து பாடல் எழுதியிருக்கிறார். தன்னுடைய வீடாக அவர் கூறும் அசாம் மலைகளையும் குன்றுகளையும் பற்றி அப்பாடல் பாடுகிறது. அசாமின் ஜோர்ஹாட் மாவட்டத்திலுள்ள சைகோட்டா தேயிலை எஸ்டேட்டின் தேகியாஜுலி பகுதியில் டண்டி வசிக்கிறார். ஒரு சைக்கிள் பழுது நீக்கும் கடையில் பணிபுரியும் அவர், சமூகதளத்தில் தன் இசைப் பாடல்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
ஜுமுர் இசைபாணி உள்ளூரில் பிரபலம். மேளத்தின் தாளங்களையும் புல்லாங்குழல் இசையையும் பாடலில் டண்டி குறிப்பிடுகிறார். சத்ரி மொழியில் பாடப்படும் இப்பாடல்கள் பிகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், தெலெங்கானா போன்ற மத்திய, தெற்கு, கிழக்கு இந்தியப் பகுதிகளிலிருந்து அசாம் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிய இடம்பெயர்ந்த பல பழங்குடிக் குழுக்களில் பாடப்படுகிறது.
பழங்குடி குழுக்கள் காலப்போக்கில் பிற உள்ளூர் சமூகங்களுடன் கலந்துவிட்டன. ‘தேயிலைப் பழங்குடிகள்’ என குறிக்கப்படும் அவர்கள், 60 லட்சம் பேர் அசாமில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. சொந்த மாநிலத்தில் பட்டியல் பழங்குடிகளாக இருந்த அவர்களுக்கு இங்கு பட்டியல் பழங்குடி பிரிவு மறுக்கப்படுகிறது. மாநிலத்தின் 1,000 தேயிலை தோட்டங்களில் கிட்டத்தட்ட 12 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.
இக்காணொளியில் சுனிதா கர்மாகர், கீதா கர்மாகர், ருபாலி டண்டி, லக்கி கர்மாகர், நிகிதா டண்டி, பிரதிமா டண்டி, அரோடி நாயக் ஆகிய தோட்டத் தொழிலாளர்கள் நடனமாடுகின்றனர்.
சண்டோ டண்டியின் பிற காணொளிகளை காணவும் அவரது வாழ்க்கை குறித்து வாசிக்கவும் செப்டம்பர் 2021-ல் பாரி பதிப்பித்த துயரம், வேலை மற்றும் நம்பிக்கை பற்றிய சாண்டோ டண்டியின் பாடல்கள் கட்டுரையை படிக்கவும்.
தமிழில் : ராஜசங்கீதன்