ஹேமந்த் கவாலே, தனது பெயருக்கு முன், ஒரு அடைமொழியை சேர்க்க வலியுறுத்துகிறார்.
"நான் படித்தவன், வேலையில்லாதவன், மற்றும் திருமணமாகாதவன்," என்று இந்த 30 வயது இளைஞர், தனது மணமாகாத நிலை மற்றும் அவரது பிற இளம் விவசாய சகோதரர்களை பற்றியும் தானே எண்ணி சிரிக்கிறார்.
“சு-ஷிக்ஷித். பெரோஜ்கர். அவிவாஹித்.” அவர் ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து கூறுகிறார். மேலும் அவரது சிறிய பான் கியோஸ்கில் அவரைச் சுற்றியுள்ள 30 வயதுக்குட்பட்ட அவரது மற்ற நண்பர்களும், தங்களது கட்டாய பிரம்மச்சாரியம் பற்றிய கோபத்தையும் சங்கடத்தையும் மறைத்துக் கொண்டு சிரிக்கின்றனர். தனக்கும் பொருந்தும் என்பது போன்ற நிலை அது.
"அதுதான் எங்களின் முக்கிய பிரச்சினை,” என்கிறார் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற கவாலே.
மகாராஷ்டிராவின் விவசாயத் தற்கொலைகளால் பாதிக்கப்பட்ட கிழக்குப் பகுதியான, யவத்மால்-தர்வா சாலையில் உள்ள, பருத்திக்கு பெயர் போன விதர்பாவில் உள்ள செலோடி கிராமத்தில் நாங்கள் இருக்கிறோம். இவ்விடம், நீண்ட காலமாக விவசாய நெருக்கடி மற்றும் அதிக பேரின் இடம்பெயர்வுக்கு ஆளாகியுள்ளது. கிராமத்தின் பிரதான சதுக்கத்தில், கவாலே இயக்கும் கியோஸ்கின் நிழலில், இவ்விளைஞர்கள் குழு தங்கள் நேரத்தை போக்குகிறது. அவர்கள் யாவரும் பட்டதாரிகள் அல்லது முதுகலைப் பட்டதாரிகள் ஆவர். அவர்கள் அனைவரின் பெயரிலும் விவசாய நிலம் உள்ளது. அவர்கள் அனைவரும் வேலையில்லாதவர்கள். அவர்கள் அனைவரும் மணமாகாதவர்கள்.
அவர்களில் பெரும்பாலானோர் புனே, மும்பை, நாக்பூர் அல்லது அமராவதி போன்ற தொலைதூர நகரங்களில், குறைந்த சம்பளத்தில் சிறிது காலம் வேலை செய்துள்ளனர். மாநில அல்லது யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அல்லது பிற வேலைகளுக்கான போட்டித் தேர்வுகளை எழுதி, தோல்வியடைந்துள்ளனர்.
இந்தப் பகுதியிலும் நாடு முழுவதிலும் உள்ள பெரும்பாலான இளைஞர்களைப் போலவே, கவாலேயும் தனக்கு வேலை கிடைக்க சிறந்த கல்வி தேவை என்று எண்ணியுள்ளார்.
ஆனால், இப்போதோ மணப்பெண்ணைப் பெற, ஒரு நிரந்தர அரசு வேலை வேண்டும் என்பதை கண்டுபிடித்துள்ளார்.
வேலைகள் குறைவாக இருந்ததாலும், வெகு தூரத்தில் இருந்ததாலும், கவாலே கிராமத்தில் உள்ள தனது குடும்ப பண்ணையில் ஒரு சிறிய கடை போட்டு, வியாபாரம் நடத்தி வருகிறார்.
"நான் ஒரு பான் கியோஸ்க் வைக்க முடிவு செய்தேன். மற்றும் ஒரு நண்பரிடம் ரஸ்வந்தி [கரும்புச் சாறு கடை] நடத்தச் சொன்னேன். மற்றொரு நண்பரை இங்கே ஒரு சிற்றுண்டி கடை வைக்கச் சொன்னேன். அதனால் எங்களுக்கு கொஞ்சம் வியாபாரம் நடக்கும்," என்று புத்திசாலியான கவாலே கூறுகிறார். "புனேவில் ஒரு முழு சப்பாத்தி சாப்பிடுவதற்கு பதிலாக, எனது கிராமத்தில் அரை சப்பாத்தி சாப்பிடுவது நல்லது," என்று அவர் கூறுகிறார்.









