தில்லியின் சோம்பலான குளிர்கால பிற்பகல் அது. ஜனவரி மாத சூரியன், விருந்தாளியை போல் முற்றங்களில் வீற்றிருக்கும்போது கமார், அவரின் தாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். தாய் கிட்டத்தட்ட ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் வசிக்கிறார். 75 வயது ஷமிமா காதூனுடன் பேசுகையில், பிகாரின் சிதாமரி மாவட்டத்தின் பாரி புல்வாரியா கிராமத்திலிருந்து பால்யகால வீட்டுக்கு அவர் பயணித்தார்.
தொலைபேசியின் இரு பக்கங்களின் குரல்களையும் அந்த மதியப் பொழுதில் கேட்டிருந்தால், வித்தியாசமான ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்திருப்பீர்கள். உருது மொழியில் பேசும் அவர், “அம்மி, சாரா எ பேடாயெகா பச்பன்மெயின் ஜோ மெரே சார் பே சகாம் ஹோதா தா நா உஸ்கா இலாத் கைசே கர்தே தே?” (சிறுவயதில் என் தலையில் ஏற்பட்ட தோல் வெடிப்பை எப்படி சரி செய்தீர்கள்?”
“சீர் மெயின் ஜோ ஹோ ஜாஹாயி - டோரொஹோ ஹோலா ரஹா - பகோரா கஹா ஹயி ஓகோ இதார். ரெ, சிக்னி மிட்டி லகாகே தோலியா ரஹா, மகர் லகா ஹயி பகுத். தா சூட் கெலாயி” (உன் உச்சந்தலையில் இருப்பதை இங்கு பத்கோரா என்பார்கள். உன் தலையை நான் ரெ (உப்பு மண்) மற்றும் சிக்னி மிட்டி (களிமண்) ஆகியவற்றை கொண்டு அலசினேன். ஆனால் அது மிகவும் வலித்தது. இறுதியில், அது சரியானது,)” என சிரிக்கிறார் வீட்டு மருத்துவத்தை விவரித்து. அவரின் மொழி கமாரின் மொழியிலிருந்து மாறுபட்டிருந்தது.
அவர்களின் உரையாடலில் எந்த வித்தியாசமும் இல்லை. கமாரும் அவரின் தாயும் எப்போதும் வேறு மொழிகளில்தான் பேசிக் கொள்வார்கள்.
“அவரின் வட்டார வழக்கு எனக்கு புரியும், ஆனால் பேசத் தெரியாது. உருது என் ‘தாய்மொழி’தான், ஆனால் என் தாய் வித்தியாசமான வழக்கில் பேசுவார்,” என அவர் அடுத்த நாள் நடந்த பாரிபாஷா சந்திப்பில் கூறினார். அங்குதான் சர்வதேச தாய்மொழி தினத்துக்கான கட்டுரைக் கருப்பொருள் குறித்து நாங்கள் விவாதித்துக் கொண்டிருந்தோம். “அவரின் மொழிக்கான பெயரை பற்றி யாருக்கும் தெரியாது. அம்மிக்கும் தெரியாது. குடும்பத்தில் இருக்கும் எவருக்கும் தெரியாது. அதை பேசும் எவருக்கும் கூடத் தெரியாது,” எனக் கூறுகிறார் அவர். வேலை தேடி கிராமத்திலிருந்து புலம்பெயர்ந்த அவர் உள்ளிட்ட ஆண்கள் அம்மொழியை பேசுவதில்லை. கமாரின் குழந்தைகள் இன்னும் தள்ளிச் சென்றுவிட்டனர். பாட்டியின் வழக்கு அவர்களுக்கு புரிவதில்லை.



















