“இந்த மரம்... இந்த வீடு... இந்த மண்ணில் இருக்கும் மென்மை... இந்த அன்பை எங்கே எடுத்துச் செல்வோம்?"
அபன்குடி ஹெம்ப்ராம் கோபமாகவும், சோகமாகவும் இருக்கிறார். 40 வயது சந்தாலி பழங்குடியான அவர், நிலத்தில் போடப்பட்டுள்ள ஒரு அடையாளத்தில் இருந்து இன்னொரு அடையாளம் வரை காட்டி விட்டுச் சொல்கிறார், “இவையெல்லாம் என்னுடையவை. எனக்குச் சொந்தமாக நிலம் இருக்கிறது,” என. அவர் தனது 5-6 பிகா நிலத்தில் (சுமார் ஒன்றரை ஏக்கர்) நெல் பயிரிட்டு வந்தார்.
“இத்தனை ஆண்டுகளாக நான் கட்டியமைத்த எல்லாவற்றையும் அரசாங்கத்தால் திருப்பித் தரமுடியுமா?” மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் அமையவுள்ள தேவ்சா பச்சாமி நிலக்கரி சுரங்கத் திட்டம் 10 ஊர்களை அழித்துவிடும். அபன்குடியின் ஹரின்சிங்கா கிராமமும் இதில் அடக்கம்.
“எல்லாத்தையும் விட்டுட்டு நாங்க எங்கே போவோம்? நாங்க எங்கேயும் போகமாட்டோம்,” என்று உறுதியாக கூறுகிறார் அபன்குடி. சுரங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் உள்ளவர்களில் ஒருவர் இந்தப் பெண். போலீஸ், ஆளுங்கட்சி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வலிமைக்கு எதிராக இவரைப் போன்ற பெண்கள் கூட்டங்கள், பேரணிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். தடிகள், துடைப்பம், அருவாள், கொடுவாள் போன்ற வேளாண் மற்றும் சமையல் கருவிகளே இவர்களது ஆயுதங்கள்.
குளிர்கால பிற்பகல் நேரத்தில் ஹரின்சிங்கா கிராமத்தில் தகதகவென்று காய்கிறது சூரியன். ஊரின் நுழைவாயிலில் அமைந்துள்ள தமது அண்டைவீட்டுக்காரர் லப்சாவின், செங்கல்லால் கட்டப்பட்ட அறைகளைக் கொண்ட ஓட்டு வீட்டின் தாழ்வாரத்தில் நின்றுகொண்டு நம்மிடம் பேசுகிறார் அபன்குடி.
பகலுணவு சாப்பிட்டுக்கொண்டே உரையாடலில் கலந்துகொண்ட 40 வயதான லப்சா ஹெம்ப்ரம் “எங்கள் நிலத்தை எடுக்க வேண்டுமானால், எங்கள் உயிரை எடுக்கவேண்டும்,” என்கிறார். முந்தைய இரவில் சமைத்து மீந்த பொறியலோடு, தண்ணீர் விட்டு சோறு சாப்பிட்ட அவர், கற்களை உடைக்கும் பகுதியில் வேலை செய்கிறார். அங்கே தொழிலாளர்களுக்கு 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை தினக்கூலி கிடைக்கும்.








