“இங்கு கல்யாணம் முடித்து வந்ததை நினைத்து வருந்துகிறேன்.”
ஒரு இளம் மணமகளாக, 29 வயது ரோஸி, தனது அனுபவத்தை பகிர்கிறார். ஆனால், இது அவரது தனிப்பட்ட கருத்து மட்டும் இல்லை. ஸ்ரீநகர், தால் ஏரிக்கு அருகில் வசிப்பவர்கள் யாரையும் பெண்கள் மணக்க விரும்பவில்லை என்று அங்கு வசிப்பவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். "ஏற்கனவே எங்களை மூன்று பேர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்," என தனது இளைய மகனுக்கு மணமுடிக்க பெண் தேடும், குல்ஷன் நசீர், கூறுகிறார். "கல்யாண தரகர்கள் கூட இப்போது இந்த பக்கம் வருவதை நிறுத்திவிட்டார்கள்."
இதற்கு காரணம், இங்கு வாழும் குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை, என்கிறார், பாரு மொஹல்லாவைச் சேர்ந்த இந்த அம்மா. இத்தனைக்கும், இவர்கள் வசிப்பது, மாநிலத்தின் மிகப்பெரிய நன்னீர் ஏரி இருக்கும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
"ஒன்பது வருடங்களுக்கு முன்பு, நாங்கள் எங்கள் படகுகளில் சென்று, தால் ஏரியின் பல்வேறு இடங்களில் இருந்து தண்ணீரை சேகரிப்போம்," என்கிறார் தச்சராக பணிபுரியும் முஷ்தாக் அகமது. "அப்போது தண்ணீர் லாரிகள் ஏதும் இருந்ததில்லை."
ஆனால் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக, முஷ்தாக், சரியாக, காலை 9 மணிக்கெல்லாம், மாநிலத்தின் தண்ணீர் லாரிகள் வருவதற்காக, பிரதான சாலையில் வந்து காத்திருக்கிறார். குடோ மொஹல்லாவில் வசிக்கும் இவரது 10 பேர் கொண்ட குடும்பம் அவரைத் தான் நம்பி உள்ளது. வசதிக்காக, ரூ. 20,000-25,000 வரை செலவு செய்து, சேமிப்பு தொட்டிகளை வாங்கி, பைப்லைன் அமைத்தார். "ஆனால் மின்சாரம் இருந்தால் மட்டுமே இந்த அமைப்பு செயல்படும், அதிலும் காஷ்மீரில் குளிர்காலத்தில் மின்சாரம், பெரிய பிரச்சினையாகும்," என்கிறார் அவர். இந்த மாதம் (மார்ச்) டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதின் காரணமாக, அவர்கள் மீண்டும் வாளிகளைத் தூக்கிக் கொண்டு தண்ணீரை சுமந்து செல்ல வேண்டியிருந்தது.






















