இந்தியாவில் கடந்த வருடத்தில் ‘பெண்களுக்கு எதிரான குற்றங்கள்’ என 4,45,256 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கிட்டத்தட்ட தினசரி 1,220 வழக்குகள் . அதுவும் அதிகாரப்பூர்வமாக தேசிய குற்றப் புலனாய்வு நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டவைதாம். யதார்த்தத்தில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம்.

பெண்களுக்கு எதிரான வன்முறை, அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவியிருக்கிறது. பணியிட துன்புறுத்தல்கள், கடத்தல், பாலியல் அச்சுறுத்தல், குடும்ப வன்முறை, கலை மற்றும் மொழியில் உள்ள பாலின பாரபட்சம் போன்றவை பெண்களுக்கான பாதுகாப்பை அச்சுறுத்துகின்றன.

தங்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்களை பதிவு செய்வதில் பெண்கள் தயக்கம் காட்டுவது ஆவணப்படுத்தப்பட்ட விஷயம். இது இன்னும் அவர்களின் குரல்களை வெளிப்படாமல் ஒடுக்கவே செய்கிறது. உதாரணமாக உத்தரப்பிரதேசத்தின் 22 வயது தலித் பெண்ணான பர்க்காவின் பிரச்சினையை எடுத்துக் கொள்ளுங்கள். கடத்தல் மற்றும் வல்லுறவு பற்றிய புகாருக்கான முதல் தகவல் அறிக்கையை காவல்துறை பதிவு செய்ய மறுத்ததாக கூறுகிறார். காரணம், குற்றஞ்சாட்டப்பட்டவர் ஓர் அரசியல் தலைவர். வல்லுறவில் தப்பிய மற்றுமொருவரான மாலினி, ஹரியானாவை சேர்ந்தவர். அவர் சொல்கையில், “குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் பணம் பெற்றுவிட்டு செல்லும்படி காவலர்கள் சொன்னார்கள். சமாதானத்துக்கு நான் மறுத்ததும் என்னை அவர்கள் திட்டி, சிறையில் தள்ளுவோம் என்றார்கள்,” என்கிறார்.

காவல்துறை அலட்சியம், கட்டப்பஞ்சாயத்துகள், மருத்துவ மற்றும் சட்ட உதவிகள் இல்லாமல் இருத்தல் போன்றவை இன்னும் பெண்களை ஒடுக்கி, தங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பாலியல் குற்றங்களுக்கான நிவாரணத்தை கேட்க முடியாமல் செய்து விடுகிறது. 2020ம் ஆண்டில் வெளியான நீதி பெறுவதில் உள்ள தடைகள். உத்தரப்பிரதேசத்தில் வல்லுறவு செய்யப்பட்டு தப்பித்த 14 பேரின் அனுபவங்கள் என்ற அறிக்கையில் ஆறு வழக்குகளில், உயரதிகாரிகளிடம் புகாரை கொண்டு சென்ற பிறகுதான் காவல்துறை, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கிறது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட மிச்ச வழக்குகளிலும் கூட நீதிமன்ற உத்தரவுக்கு பிறகுதான் பதிவாகி இருக்கிறது. சாதி, வர்க்கம், மாற்றுத்திறன், வயது ஆகியவற்றால் பாலியல் வன்முறைக்கான புகார்களை பெறும் அரசு செயல்முறைகளுக்குள் பலரும் வர முடியாமல் இருக்கின்றனர். தலித் மனித உரிமை பாதுகாப்பாளர்கள் குழுவின் அறிக்கையின்படி, வன்முறையாளர்கள் 18 வயதுக்குள்ளான பெண்களை இலக்கு வைக்கிறார்கள். தலித் பெண்களுக்கு எதிரான 50 பாலியல் வன்முறை சம்பவங்களில் 62 சதவிகிதத்தில் இதுதான் நிலை. இந்த்

அகச்சிக்கல் மற்றும் உடல் நல குறைபாடு கொண்ட சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் கூட பாலியல் வன்முறை இந்தியாவில் நிகழ்த்தப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. பேசுவதில் இருக்கும் தடைகளும் யாரையேனும் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயமும் காரணங்களாக இருக்கின்றன. மனநலப் பிரச்சினை கொண்ட  21 வயது கஜ்ரி போன்றோர் புகார்கள் அளித்தாலும் கூட, சட்ட முறைகளே தண்டனையாக மாறுகின்றன. 2010ம் ஆண்டில் கஜ்ரி கடத்தப்பட்டார். கடத்தல், பாலியல் வல்லுறவு, குழந்தைத் தொழிலாளர் பணி ஆகியவற்றால் 10 வருடங்கள் பாதிக்கப்பட்டிருந்தார். அவரின் தந்தை சொல்கையில், “காவல்துறை வாக்குமூலங்கள், பரிசோதனைகள் போன்றவற்றை கஜ்ரிக்காக செய்ய அதிக விடுப்புகள் தேவைப்படுவதால், ஒரு வேலையில் நீடிப்பது சிரமமாக இருக்கிறது. தொடர்ந்து விடுப்புகள் கேட்டால் வேலை போய்விடும்,” என்கிறார்.

பண்டைய இந்தியாவில் இருந்த பிராமண ஆணாதிக்க முறை என்கிற கட்டுரையில் பேராசிரியர் உமா சக்கரவர்த்தி, “கட்டுபடுத்துவதற்கான சரியான அமைப்புமுறையை உருவாக்கி பெண்களை தொடர்ந்து காப்பதற்கான வெறி” இருந்ததாக எழுதுகிறார். இந்தக் கட்டுப்பாடு, ஆணாதிக்க முறைகளுக்கு ஒத்துப் போகும் பெண்களுக்கு முன்னேற்றங்களையும் மறுக்கும் பெண்களுக்கு அவமதிப்புகளையும் வழங்கியது. பெண்களின் இயக்கத்தை கடுமையாக கட்டுப்படுத்தும் இந்த விதிகள், பெரும்பாலும் பெண் பாலினம் மற்றும் அவர்களின் பொருளாதார சுதந்திரம் ஆகியவற்றின்பால் கொண்டிருக்கும் அச்சத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. “முன்பு ஊருக்குள் கர்ப்பிணியை நான் பார்க்கச் சென்றாலும் அல்லது கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக இருந்தாலும். அவர்கள் (கணவர் வீட்டார்), வேறு ஆண்களை நான் சந்திக்க செல்வதாக கூறுவார்கள். சுகாதார செயற்பாட்டாளராக அது என் கடமை ஆகும்,” என்கிறார் 30 வயது கிரிஜா. உத்தரப்பிரதேச மஹோபா மாவட்டத்தில் வசிக்கும் கிரிஜா, அவரது வேலையை விட வேண்டுமென கணவர் வீட்டாரால் வற்புறுத்தப்படுகிறார். “நேற்று என் கணவரின் தாத்தா லத்தியை கொண்டு என்னை தாக்கி , கழுத்தை நெரிக்க முயன்றார்,” என்கிறார் அவர்.

பெண்கள் தங்களுக்கான ஊதிய வேலைகள் ஒருவழியாக கண்டறிந்த பிறகு, பணியிட அச்சுறுத்தல் அடுத்த சிக்கலாக வந்தது. டெல்லி மற்றும் பெங்களூருவில் இருக்கும் ஜவுளி ஆலைத் தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பின்படி, 17 சதவிகித பெண்கள் பணியிடத்தில் பாலியல் அச்சுறுத்தல் நேர்வதாக சொல்லியிருக்கின்றனர். “ஆண் மேலாளர்கள், மேற்பார்வையாளர்கள், பழுது நீக்குபவர்கள் போன்றோர் எங்களை தொட முயலுவார்கள். நாங்கள் புகாரளிக்கவென எவரும் இருக்க மாட்டார்,” என்கிறார் ஜவுளி ஆலையில் பணிபுரியும் லதா. (வாசிக்க: திண்டுக்கலில் தலித் பெண்கள் ஒன்றுபட்டபோது ). பெண் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை பெறுவதற்கான அதிகாரம் பெறவென விஷாகா விதிமுறைகள் (1997) உள் புகார் குழுவை பரிந்துரைத்திருக்கிறது. அக்குழுவுக்கு ஒரு பெண் தலைவராக இருக்க வேண்டும். குழுவின் உறுப்பினர்களில் பாதிக்கு மேல் பெண்களாக இருக்க வேண்டும். இத்தகைய வழிகாட்டுதல்கள் இருந்தும், அவற்றை நடைமுறைப்படுத்துவது குறைவாகதான் இருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை வீட்டிலும் பணியிடத்திலும் தொடர்கிறது.

2019-21ம் ஆண்டு தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, 18-49 வயதுக்குள் இருக்கும் பெண்களில் 29 சதவிகிதம் பேர் , 15 வயதிலிருந்து வீட்டிலேயே வன்முறையை எதிர்கொள்கின்றனர். எனினும் குடும்பத்தாரிடமிருந்து நண்பர்களிடமிருந்தும் அரசு அமைப்புகளிலும் பாலியல் மற்றும் வன்முறையை எதிர்கொண்டவர்களில் 14 சதவிகிதம் பேர் மட்டும்தான், அவற்றை தடுக்கும் முயற்சியில் புகார் அளிக்கின்றனர். இணையர்களின் வன்முறையை சந்திக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. “ அவள் என் மனைவி. நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள் ?,” என்பார் ரவி, அவரது மனைவியை தாக்கும்போது யாரேனும் தலையிட்டால். 2021ம் ஆண்டில், உலகெங்கிலும் உள்ள 45,000 இளம்பெண்கள் இணையர்களாலும் குடும்ப உறுப்பினர்களாலும் கொல்லப்பட்டிருக்கின்றனர் .

சந்தேகத்துக்கு இடமின்றி, வெகுஜன ஊடகங்களில் காட்டப்படும் வன்முறையான காதலுறவுகளும் முக்கிய காரணம். இளம் பார்வையாளர்களின் மீதான இந்திய சினிமாவின் தாக்கம் என்கிற ஆய்வில், இளைஞர்களின் 60 சதவிகிதம் பேர் ஈவ் டீசிங் (தெருக்களில் பாலியல் சீண்டல்) செய்வதில் தவறில்லை எனக் கருதுவது வெளிப்பட்டிருக்கிறது. பாலின ஒடுக்குமுறையை இயல்பாக பார்க்கும் கொடூரமான போக்கு பற்றி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இழைத்தும் நாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர்களாகி இருப்பவர்கள் என்கிற இன்னொரு ஆய்வும் குறிப்பிட்டிருக்கிறது.

இந்த கலாச்சாரத்துக்கு கூடுதலாக, வன்முறைக்கு ஆளாக்கப்பட்டவரையே குறை சொல்லும் போக்கும் இருக்கிறது. பீட் மாவட்டத்தை சேர்ந்த கிராமத்தில், சொந்த ஊர்க்காரர்கள் நால்வரால் வல்லுறவு செய்யப்பட்ட ராதா, அவர்களை எதிர்த்து பேசியதும் நடத்தை சரியில்லை என்றும் கிராமத்துக்கு கெட்ட பெயர் கொண்டு வந்து விட்டார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டார்.

இத்தகைய குற்றங்களின் பட்டியல் நெடியது. அவற்றின் ஆணாதிக்க வேர்கள் நம் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. பெண்கள் மீதான வன்முறை குறித்து மேலதிகமாக பாரி நூலகத்தின் பாலின வன்முறைப் பகுதி யில் படியுங்கள்.

முகப்பு வடிவமைப்பு: ஸ்வதேஷ ஷர்மா

தமிழில் : ராஜசங்கீதன்

Dipanjali Singh

Dipanjali Singh is an Assistant Editor at the People's Archive of Rural India. She also researches and curates documents for the PARI Library.

यांचे इतर लिखाण Dipanjali Singh
PARI Library Team

The PARI Library team of Dipanjali Singh, Swadesha Sharma and Siddhita Sonavane curate documents relevant to PARI's mandate of creating a people's resource archive of everyday lives.

यांचे इतर लिखाण PARI Library Team
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

यांचे इतर लिखाण Rajasangeethan