நாள் முழுக்க கோகுல் தீயில் வேலை பார்க்கிறார். காய்ச்சி எடுக்கும் இரும்பை அடித்து வார்க்கிறார். தீப்பொறிகள் அவரது சட்டையிலும் காலணிகளிலும் ஓட்டைகளை உருவாக்குகிறது. அவர் கையில் இருக்கும் தீக்காயங்கள், இந்தியப் பொருளாதாரத்தின் சக்கங்களை நகர்த்துவதில் அவரின் கடின உழைப்பை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
“என்ன இழவு அது?” எனக் கேட்கிறார் பட்ஜெட் என்கிற வார்த்தையைக் கேட்டதும்.
2025ம் ஆண்டின் ஒன்றிய அரசு பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, செய்திகள் நாடு முழுவதும் வெளியாக 48 மணி நேரம் கூட ஆகியிருக்கவில்லை. ஆனால் பக்ரியா சமூகத்தை சேர்ந்த இரும்புக் கொல்லரான கோகுலுக்கு எந்த மாற்றமும் இல்லை.
“ஒருவரும் எங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. 700-800 வருடங்கள் இப்படித்தான் ஓடியிருக்கிறது. எங்களின் தலைமுறைகள், பஞ்சாபின் மண்ணில்தான் புதைக்கப்பட்டிருக்கின்றனர். யாரும் எங்களுக்கு எதையும் தரவில்லை,” என்கிறார் நாற்பது வயதுகளில் இருக்கும் இரும்புக் கொல்லர்.




