10 வயது நிறைவடையாத இஜாஸ், இம்ரான், யாசிர், ஷமிமா ஆகியோர் சில ஆண்டுகள்தான் பள்ளியில் படித்துள்ளனர். தங்கள் பெற்றோர் இடம் பெயர்ந்து செல்லும் காலங்களில் இவர்களும் உடன் செல்வதால், ஒவ்வோர் ஆண்டும் இவர்கள் நான்கு மாதங்கள் வரை பள்ளிக்கூடம் செல்வதில்லை. இதனால், அடிப்படைக் கணிதம், அறிவியல், சமூகவியல், சொற்கள், எழுதும் திறன் ஆகியவற்றைக் கற்பதில் பின் தங்குகிறார்கள்.
குழந்தைகளுக்கு 10 வயது ஆகும்போது, அவர்கள் பள்ளி செல்லாத காலம் மொத்தமாக ஓராண்டு ஆகிறது. முன்வரிசையில் அமரும் மிகச் சிறந்த மாணவர்களுக்குக்கூட இது பேரிழப்பு, ஈடு செய்யக் கடினமானது.
ஆனால், இனி அவர்கள் அப்படி பாடங்களை தவறவிடமாட்டார்கள். அந்தக் குடும்பங்கள் பள்ளியில் இருந்து வெகுதூரம் இடம் பெயரும்போது அவர்களோடு தானும் இடம் பெயர்ந்து சென்று பிள்ளைகளுக்குப் பாடம் நடத்துகிறார் ‘பயணிக்கும் ஆசிரியர்’ அலி முகமது. மூன்றாவது ஆண்டாக, மலையேறி காஷ்மீரின் லிட்டர் பள்ளத்தாக்கில் உள்ள கலன் என்ற குஜ்ஜர் குடியேற்றத்துக்கு வந்துள்ள அலி முகமதுவுக்கு இப்போது 25 வயது. குஜ்ஜர் சமூகத்தினர், கோடை காலத்தில் மேய்ச்சல் நிலம் தேடி தங்கள் கால்நடைகளோடு இங்கே இடம் பெயர்ந்து வருகிறார்கள். அவர்களோடு இங்கே வரும் அலி, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாத காலம் அவர்களோடு தங்கியிருந்து குஜ்ஜர் பிள்ளைகளுக்குப் பாடம் நடத்துகிறார்.
“நானும் ஓர் ஆசிரியர் ஆவேன் என்று நினைக்கிறேன்,” என்று வெட்கத்தோடு கூறிக் கொண்டே அரசாங்கம் தந்த பயிற்சி ஏட்டுக்குள் செல்கிறார் ஷமிமா ஜான். சில நேரம் குழந்தைகளுக்கு அவசரமாகத் தேவைப்படும் எழுது பொருள்களை அலி சொந்த செலவில் வாங்கித் தருகிறார்.












