சுகுமார் பிஸ்வாஸ் சாதாரண இளநீர் வியாபாரி இல்லை. “உணவு இல்லாமல் என்னால் வாழமுடியும். ஆனால், பாடாமல் என்னால் வாழ முடியாது,” என்று கூறும் அவரது இசைக் காதல், தாகம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு இளநீரை வெட்டும்போதுகூட நிற்பதில்லை. மேற்கு வங்கத்தின் சாந்திபூரில் உள்ள லங்காபுரா பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அவர் ‘தாப்தாது’ (இளநீர் தாத்தா) என்றே அறியப்படுகிறார்.
அந்த 70 வயது மனிதர், பச்சை இளநீரை வெட்டி ஸ்டிரா போட்டுத் தருகிறார். குடித்து முடித்தவுடன், காயை இரண்டாக வெட்டி, வழுக்கையை வழித்துத் தருகிறார். நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிக்கொண்டே இவை எல்லாவற்றையும் செய்கிறார். லாலோன் ஃபக்கீர் போன்ற ஞானிகள் மற்றும் இசைக் கலைஞர்கள் ஷா அப்துல் கரீம், பாபா கெய்ப்பா போன்றோர் இசையமைத்த பாடல்களை அவர் பாடுகிறார். வாழ்க்கையின் பொருளை இந்தப் பாடல்களில் பார்ப்பதாக கூறும் அவர், ஒரு பாடலை பாரிக்காக விளக்குகிறார்: “உண்மை என்பது என்ன என்று அறிந்தால்தான் அந்த உண்மையை நம்மால் அடைய முடியும். அப்படி உண்மையை அறிய நமக்குள் நாம் நேர்மையாக இருக்க வேண்டும். வஞ்சகம் துறந்தால்தான் நாம் பிறரை நேசிக்க முடியும்.”
ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு தன் டோலியை (மூன்று சக்கர சைக்கிளில் இணைக்கப்பட்ட வேன்) ஓட்டிக்கொண்டு செல்லும்போதும் அவர் பாடிக்கொண்டே செல்கிறார். அவரது பாட்டு கேட்டு, அவர் அந்தப் பகுதிக்கு வந்திருப்பதைத் தெரிந்து கொள்கிறார்கள் மக்கள்.
“சிலர் இளநீர் வாங்க மாட்டார்கள். ஆனால், சிறிது நேரம் நின்று என் பாட்டைக் கேட்டுவிட்டுச் செல்வார்கள். அவர்கள் வாங்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. நிறைய விற்பனை ஆகவேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை. அதில் எனக்கு மகிழ்ச்சிதான்,” என்கிறார், வாடிக்கையாளர்களுக்கு வேண்டியதைச் செய்துகொண்டே.
வங்கதேசத்தின் குஷ்டியா மாவட்டத்தில் பிறந்தவர் சுகுமார். அங்கே அவரது தந்தை மீன் பிடித்து வாழ்ந்தவர். மீன் பிடிக்க முடியாத காலத்தில் அவர் தினக்கூலித் தொழிலாளியாக வேலை செய்தார். 1971-ம் ஆண்டு வங்கதேசத்தில் (அப்போது கிழக்கு பாகிஸ்தான்) போர் தொடங்கியபோது நிறைய மக்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். அப்படி வந்தவர்களில் ஒருவர் சுகுமார். “நாங்கள் இந்த நாட்டுக்கு வந்தபோது எல்லோருக்கும் நாங்கள் அகதிகள். பெரும்பாலானவர்கள் எங்களை இரக்கத்தோடு பார்த்தனர்,” என்கிறார் அவர். அவர்கள் இந்தியா வந்தபோது அவர்களால் ஒரே ஒரு மீன் வலையை மட்டுமே கொண்டுவர முடிந்தது.
சுகுமாரின் குடும்பத்தினர் முதலில் மேற்கு வங்கத்தின் ஷிகார்பூர் கிராமத்தில் குடியேறினர். கிருஷ்ணா நகருக்குக் குடிபெயர்ந்து சில மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் இறுதியாக முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஜியாகஞ்ஜ் – அசீம்கஞ்ஜ் என்ற இடத்தில் குடியேறினர். தந்தை கங்கையில் மீன்பிடித்து பிறகு “உள்ளூர் மார்க்கெட்டுக்குச் சென்று நல்ல விலைக்கு விற்பார். அவர் வீட்டுக்கு வந்தவுடன் நாங்கள் கவலைப்படத் தேவையில்லை என்று சொல்லுவார். எங்களுக்கு லாட்டரி விழுந்தது போல இருக்கும். முதல் முறையில் நாங்கள் பிடித்த மீன்களை 125 ரூபாய்க்கு விற்றோம். அந்தக் காலத்தில் அது பெரிய தொகை,” என்று சொல்லும்போது அவரது கண்கள் மின்னுகின்றன.
பெரியவனாக வளரும்போது, இளம் வயது சுகுமார் நிறைய தொழில்களைப் பார்த்தார். ரயில்களில் பொருட்கள் விற்பது, ஆற்றில் படகு ஓட்டுவது, தினக்கூலித் தொழிலாளி, புல்லாங்குழல், டட்டோரா உள்ளிட்ட இசைக்கருவிகள் செய்வது எனப் பல தொழில்கள். எந்தத் தொழில் செய்தாலும் அவர் பாடுவதை நிறுத்தியதில்லை. வங்கதேசத்தின் பச்சை வயல்களிலும், ஆற்றங்கரைகளிலும், தான் கற்றுக்கொண்ட பாடல்களை அவர் இன்றும் நினைவில் வைத்திருக்கிறார்.
சுகுமார் தற்போது, மேற்கு வங்கத்தின் நதியா மாவட்டம் சாந்திபூரில் தன் மனைவியோடு வாழ்கிறார். அவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். அவரது மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவரது மகன் மகாராஷ்டிரத்தில் தினக்கூலித் தொழிலாளி. “நான் என்ன செய்தாலும் அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே விட்டுவிடுகிறார்கள். அவர்கள் எப்போதும் என்னுடன் ஒத்துழைக்கிறார்கள். என் தினசரி வருவாய் குறித்து நான் கவலைப்படுவதில்லை. நான் பிறந்து நீண்ட காலம் ஆகிறது. மிச்சமிருக்கும் வாழ்க்கையையும் இப்படியே வாழமுடியும் என்று நம்புகிறேன்.”
மொழிபெயர்ப்பாளர்: அ.தா.பாலசுப்ரமணியன்