"கணக்குப் பார்த்தால், நெசவாளர்களுக்குப் பஞ்சமில்லை தான். ஆனால் எனக்குப் பிறகு, அது [நடைமுறையில்] தொடர்வது கடினம்," என்று பெருமூச்சு விடுகிறார் ரூப்சந்த் தேப்நாத். தனது மூங்கில் குடிசையில் கைத்தறியில் நெசவு செய்வதிலிருந்து சிறிது இடைவேளை எடுத்துக் கொண்டு நம்மோடு பேசுகிறார். தறியைத் தவிர, உடைந்த தளவாடங்கள், உதிரி பாகங்கள் மற்றும் மூங்கில் துண்டுகள் என குப்பை குவியல்கள் பெரும்பாலான இடத்தை ஆக்கிரமித்துள்ளன. அவரைத் தவிர இன்னொரு நபருக்கு அங்கே இடம் இல்லை.
73 வயதான ரூப்சந்த், திரிபுரா மாநிலத்தின் இந்தியா மற்றும் வங்கதேச எல்லையில் உள்ள தர்மநகர் நகரின் புறநகர் பகுதியில் உள்ள கோபிந்தாபூரில் வசித்து வருகிறார். ஒரு குறுகிய சாலை அந்த கிராமத்திற்கு வழி கொடுக்கிறது. ஒரு காலத்தில் 200 நெசவாளர் குடும்பங்களும் 600-க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் அங்கே வாழ்ந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். கோபிந்தாபூர் கைத்தறி நெசவாளர் சங்கத்தின் அலுவலகம், குறுகிய பாதைகளில் உள்ள சில வீடுகளுக்கு மத்தியில் உள்ளது. செல்லரித்த அதன் சுவர்கள், மறக்கப்பட்ட அதன் பெருமையை நினைவூட்டுகின்றன.
"தறி இல்லாத வீடே இங்கு இல்லை," என்று நாத் சமூகத்தைச் சேர்ந்த (மாநிலத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகப் பட்டியலிடப்பட்டுள்ளது) ரூப்சந்த் விவரிக்கிறார். காயும் வெயிலில், தன் முகத்தில் உள்ள வியர்வையைத் துடைத்துக் கொண்டு அவர் தொடர்ந்து பேசுகிறார். “சமூகம் எங்களை ஒரு காலத்தில் மதித்தது. இப்போது, யாரும் கண்டுகொள்வதில்லை. சம்பாத்தியம் இல்லாத தொழிலைச் செய்பவர்களை யார் மதிப்பார்கள், சொல்லுங்கள்?" என்று குரலில் உணர்ச்சிப்பெருக்குடன் கேட்கிறார்.
அனுபவமிக்க நெசவாளியான இவர், விரிவான மலர் வடிவங்களைக் கொண்டு, தான் கையால் நெய்த நக்ஷி புடவைகளை நினைவு கூருகிறார். ஆனால் 1980களில், “புர்பாஷா [திரிபுரா அரசாங்கத்தின் கைவினைப்பொருள் அங்காடி] தர்மநகரில் ஒரு விற்பனை நிலையத்தைத் திறந்தபோது, அவர்கள் நக்ஷி புடவை தயாரிப்பதை நிறுத்திவிட்டு சாதாரண புடவைகளைத் தயாரிக்கச் சொன்னார்கள்,” என்கிறார் ரூப்சந்த். இவை டிசைன் மற்றும் ஒட்டுமொத்த தரத்தில் குறைவாக இருந்ததால் மலிவாக இருந்தது.
இப்பகுதியில், மெதுவாக நக்ஷி புடவைகள் மறக்கப்பட்டன. அவர் மேலும் கூறுகையில், "இன்று எந்த கைவினைஞர்களும் இல்லை அல்லது தறிகளுக்கான உதிரி பாகங்களும் கிடைப்பதில்லை." கடந்த நான்கு ஆண்டுகளாக நெசவாளர் சங்கத்தின் தலைவராக செயல்பட்டு வரும் ரவீந்திர தேப்நாத்தும் அதை ஆமோதிக்கிறார். "நாங்கள் தயாரித்த துணிகளை வாங்க ஆட்கள் இல்லை". 63 வயதில், கடினமான உழைப்பைக் கோரும் நெசவுக்கு அவரது உடல் ஒத்துழைப்பதில்லை.














