வயலில் விளையும் ஆமணக்கு செடிகளை பார்த்ததும் கொல்ஹாப்பூரி செருப்புகளை நினைவுகூருகிறார் நாராயண் கெயிக்வாட். 20 வருடங்களுக்கு முன் அவற்றை பயன்படுத்தினார். “கொல்ஹாப்பூரி செருப்புகளுக்கு ஆமணக்கு எண்ணெயை விடுவோம். அதிக நாள் செருப்பு உழைக்க அது உதவும்,” என்கிறார் 77 வயது விவசாயியான அவர், எண்ணெய்க்கும் அப்பகுதியின் பிரபலமான செருப்புக்கும் உள்ள தொடர்பை குறிப்பிட்டு.
கொல்ஹாப்பூரி செருப்புகளுக்காகதான் கொல்ஹாப்பூர் மாவட்டத்தில் பிரதானமாக ஆமணக்கு எண்ணெய் எடுக்கப்படுகிறது. எருமை அல்லது பசுவின் தோலால் செய்யப்படும் இந்த செருப்புகளுக்கு எண்ணெய் விடுவதன் மூலம், அவற்றின் வடிவத்தையும் மென்மையையும் காக்க முடியும். அதற்கு அதிகம் பயன்படும் எண்ணெய், ஆமணக்கு செடிகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்தான்.
இப்பகுதியின் பூர்விகப் பயிர் இல்லையென்றாலும், ஆமணக்கு பிரபலமான பயிராக கொல்ஹாப்பூரில் இருக்கிறது. பசிய இலைகளுடன் தடித்த தண்டு கொண்ட செடி, வருடம் முழுக்க வளரக் கூடியது. உலகளவில் அதிக ஆமணக்கு தயாரிக்கும் நாடு இந்தியாதான். 2021-22-ல் மட்டும் 16.5 லட்சம் டன் ஆமணக்கு விதை உற்பத்தி செய்யப்பட்டது. இந்தியாவில் அதிகமாக குஜராத், ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில்தான் ஆமணக்கு தயாரிக்கப்படுகிறது.
”என் தந்தை 96 வயது வரை வாழ்ந்தார். ஒவ்வொரு வருடமும் அவர் ஆமணக்கு செடியை நட்டார்,” என்னும் நாராயணும் அந்தப் பாரம்பரியத்தை தொடர்கிறார். அவருடைய 3.25 ஏக்கர் நிலத்தில் வருடந்தோறும் ஆமணக்கு பயிர் விளைவித்து வருகிறார். அவருடைய குடும்பம், கடந்த 150 வருடங்களாக ஆமணக்கு விளைவித்து வருவதாக அவர் நம்புகிறார். “இந்த இயற்கை விதைகளை நாங்கள் பாதுகாத்து வருகிறோம். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக காக்கிறோம்,” என்கிறார் ஒரு செய்தித்தாளில் பாதுகாப்பாக அவர் சுற்றி வைத்திருக்கும் விதைகளை காட்டி. “என் மனைவியும் நானும்தான் இப்போது இவற்றை பாதுகாத்து வருகிறோம்.”
நாராயண் மற்றும் 66 வயது குசும், தாம் வளர்க்கும் ஆமணக்கு விதைகளிலிருந்து எண்ணெயும் எடுக்கின்றனர். பரவலாக எண்ணெய் ஆலைகள் பல இருந்தும், அவர்கள் தாமாகதான் அந்த வேலையை செய்கிறார்கள். “முன்பெல்லாம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நாங்கள் எண்ணெய் எடுப்போம்,” என்கிறார் நாராயண்.



















