அகமெதோஸ் பாரிஸுக்கு சென்றிருக்க முடியும். ஆனால் அவரின் தந்தை அனுமதிக்கவில்லை. “வெளியுலகத்தை பார்த்துவிட்டால், நீ திரும்பி வர மாட்டாய்,” என்றார் அவர். அந்த வார்த்தைகளை நினைவுகூரும் 99 வயது அகமெதோஸின் முகம் புன்னகை உதிர்க்கிறது.
சிதார் கருவி உருவாக்கும் ஐந்தாம் தலைமுறை 30 வயதுகளில் இருந்தபோது, பாரிஸிலிருந்து இரு பெண்கள், சிதார் தயாரிக்கும் கலையை கற்க டவுனுக்கு வந்திருந்தனர். “அனைவரிடமும் விசாரித்து விட்டு, அவர்கள் என்னிடம் உதவி கேட்டு வந்தார்கள். நானும் கற்றுக் கொடுத்தேன்,.” என்கிறார் அகமெதோஸ் இரண்டு மாடி வீட்டில் தரைதளத்தில் அமர்ந்து கொண்டு. அவரின் வீடு, பல தலைமுறைகளாக அவரது குடும்பம் வசித்து வரும் மிரஜின் சிதார் தயாரிப்பு தெருவில் இருக்கிறது.
“அச்சமயத்தில் எங்கள் வீட்டில் கழிவறை கிடையாது,” என தொடர்கிறார் அகமெதோஸ். “வெளிநாட்டிலிருந்து வந்திருந்த அவர்களை எங்களை போல் வயல்களுக்கு போக சொல்ல முடியாதென்பதால், ஒரே நாளில் கழிவறை கட்டினோம்,” என்கிறார். அவர் பேசுகையில், சிதார் கருவி ராகம் சேர்க்கும் சத்தமும் கேட்கிறது. அவரது மகனான கவுஸ், வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இரு இளம்பெண்களும் அகமெதோஸின் குடும்பத்துடன் ஒன்பது மாதங்கள் வசித்தனர். ஆனால் இறுதிக் கட்டத்தை கற்கும் முன்பு அவர்களின் விசா காலாவதி ஆனது. சில மாதங்கள் கழித்து, மிச்ச பாடத்தை கற்பிக்க அவரை அவர்கள் பாரிஸுக்கு வரும்படி கூறினர்.
ஆனால் அப்பாவின் பேச்சை கேட்டு அகமெதோஸ் வீட்டிலேயே தங்கிவிட்டார். மகாராஷ்டிராவில் இக்கலைக்கு பெயர் பெற்ற சங்க்லி மாவட்டத்திலேயே கலைஞராக தொடர்ந்தார். அகமெதோஸின் குடும்பம் இந்த வணிகத்தை 150 வருடங்களுக்கும் மேலாக செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட ஏழு தலைமுறைகள். 99 வயதில் அவர் இன்றும் வேலை செய்து கொண்டிருக்கிறார்.












