சரஸ்வதி பாவுரி துயரத்தில் இருந்தார்.
சாபூஜ் சாதி சைக்கிள் திருடு போனதிலிருந்து, பள்ளிக்கு செல்வது அவருக்கு சவாலாகி விட்டது. அரசு பள்ளிகளுக்கு 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் செல்வதை ஊக்குவிக்கும் பொருட்டு, அரசு அறிமுகப்படுத்திய திட்டத்தின் காரணமாக அந்த சைக்கிள் கிடைத்த தினத்தை கூட சரஸ்வதி நினைவில் வைத்திருக்கிறார். ஓ! சூரிய வெளிச்சத்தில் எப்படி பளபளத்தது!
இன்று அவர் ஊர்த்தலைவரிடம் புது சைக்கிள் பெறுவதற்கான மனுவை கொடுக்க நம்பிக்கையோடு வந்திருக்கிறார். “உனக்கு சைக்கிள் கெடச்சாலும் கெடைக்கும். ஆனா ஸ்கூல் இங்க இருக்குமான்னு தெரியல,” என்கிறார் ஊர்த் தலைவர் லேசான புன்சிரிப்போடு. காலடியில் இருந்த பூமி நழுவுவதை போல் இருந்தது சரஸ்வதிக்கு. என்ன சொல்கிறார் ஊர்த் தலைவர்? பள்ளிக்கு செல்ல ஏற்கனவே அவர் ஐந்து கிலோமீட்டர் சைக்கிள் மிதித்து செல்கிறார். அது அதிகரித்து 10, 20 கிலோமீட்டரானால், அவருக்கு பிரச்சினைதான். வருடந்தோறும் கன்யாஸ்ரீ திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் ஆயிரம் ரூபாய் கொண்டு சமாளிக்க முடியாது. அவரது தந்தை அவரை மணம் முடித்துக் கொடுத்து விடுவார்.
சைக்கிள்
சிறுமியே சிறுமியே பள்ளிக்கு
அரசாங்க சைக்கிளில் உறுதியான
இரும்பு ஏர் போல் செல்பவளே…
முதலாளிகளுக்கு நிலம் வேண்டுமாம்
பள்ளிக்கூடங்கள் இல்லாது போனால் என்னவாவது?
சிறுமியே சிறுமியே ஏன் கோபம் கொள்கிறாய்?
*****
ஃபுலுக்கி டுடுவின் மகன், புல்டோசர் சென்ற வழித்தடத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்.
நம்பிக்கை என்கிற சொகுசு அவருக்கு எட்டாதூரம். குறிப்பாக கோவிட்டுக்கு பிறகு. சோப் குகுனி விற்ற அவரின் சிறு குமுட்டி யை அரசாங்க புல்டோசர் அப்புறப்படுத்தி விட்டது. துரித உணவும் பக்கோடாவும்தான் நம் தொழிற்துறையின் சக்திகள் என பேசிய அதே அரசாங்கம்தான் இதையும் செய்திருக்கிறது. கடையை வைப்பதற்கென அவர் வைத்திருந்த சேமிப்பை அனைத்தையும் பறித்துக் கொண்ட அதே ஆட்கள்தான் இப்போது ஆக்கிரமிப்பு அகற்றம் என்கிற பெயரில் அவரது கடையையும் அகற்றியிருக்கிறார்கள்.
அதிகரிக்கும் கடனை அடைப்பதற்கென தினக்கூலி கட்டுமான வேலை தேடி மும்பைக்கு அவரது கணவர் சென்றிருக்கிறார். “இந்த கட்சி, ‘மாதந்தோறும் 1200 ரூபாய் தருகிறோம்,’ என சொல்கிறது. அந்தக் கட்சி ‘கடவுளையே உங்களுக்கு தருகிறோம்!’ என்கிறது. லக்கி ஸ்டோரோ, கோவில்-மசூதியோ நான் ஏன் கவலைப்பட வேண்டும்?” ஃபுலுக்கி கோபத்துடன் பொருமுகிறார். “நான் கொடுத்த 50 ஆயிரம் ரூபா லஞ்சத்தை முதல்ல கொடுடா ராஸ்கல்!”
புல்டோசர்
கடன் எங்களின் பிறப்புரிமை, நம்பிக்கைதான் எங்களின்
நரகம்
எங்கள் பலகார மாவுக்குள் நாங்கள் மூழ்கிக் கிடக்கிறோம்.
லக்கி ஸ்டோரோ பணமோ
எதுவும் இல்லை.
வியர்வை வழிய முதுகில் நாங்கள் இந்நாட்டை தூக்கி சுமக்கிறோம்.
பதினைந்து லட்சம் ரூபாய் தருவதாக சொன்னவரைத்தான் காணோம்!
*****
மற்றவர்களை போலல்லாமல் அவருக்கு ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 சதவிகிதம் கிடைத்துவிட்ட்டது. நிச்சயமாக கொண்டாட வேண்டிய விஷயம்தான். இல்லை! பகுதி இக்கட்டான சூழலில் இருக்கிறார். அவரது வேலைநாட்கள் ஒன்றிய அரசின் ஸ்வச் பாரத் திட்டத்தை சேர்ந்ததா அல்லது மாநில அரசின் நிர்மல் பங்களா திட்டத்தை சேர்ந்ததா என அரசதிகாரிகளுக்கு உறுதியாக தெரியாததால், அவருக்கான ஊதியம் அரசு இயந்திரத்தின் கெடுபிடிகளுக்குள் சிக்கிக் கிடக்கிறது.
“ஒரு பைசாவுக்கு பிரயோஜனமில்லாதவர்கள் அவர்கள்,” என லாலு பகுதி குறை கூறுகிறார். கூட்டி பெருக்குதல், கூட்டி பெருக்குதல்தான். குப்பை குப்பைதான். இல்லையா? திட்டத்தின் பெயரில் என்ன இருக்கிறது? ஒன்றியமா, மாநிலமா என்பது முக்கியமா? நாங்கள்தான் செய்தோம். வீண் பெருமை பேசும் முட்டாள்கள்தான் குப்பையிலும் பேதம் பார்ப்பார்கள்.
குப்பைக்காரர்
ஏ நிர்மல், எப்படி இருக்கே?
“துப்புரவு செய்பவர்கள் வரிசையில் நிற்கிறார்கள்.”
இங்குள்ள ஆறுகளில் பிணம் இல்லை…
தொழிலாளர் உரிமையா? அவை மறைந்து போகும்…
ஏ ஸ்வச் பாரத் அய்யா, எப்படி இருக்கீங்க?
“என் வியர்வை காவி, என் ரத்தம் எல்லாம் பச்சை.”
*****
ஃபருக் மொண்டலால் நிம்மதியாக இருக்க முடியவில்லை! பல மாத பஞ்சத்துக்கு பிறகு மழை பெய்தது. பயிரை அவர் அறுவடை செய்வதற்கு முன் வெள்ளம் வந்து மொத்தத்தையும் நாசம் செய்து விட்டது. “ஏ அல்லா, காந்தேஸ்வரி அம்மா, கருணையே இல்லையா?” எனக் கேட்கிறார்.
ஜங்கல்மஹாலில் நீருக்கு எப்போதும் பஞ்சம்தான். ஆனால் வாக்குறுதிகளுக்கும், கொள்கைகளுக்கு, திட்டங்களுக்கும் பஞ்சமில்லை. சஜல் தாரா, அம்ருத் ஜல். பெயரிலேயே மத நோக்கம் தெரிகிறது. ஜலமா, நீரா? குழாய்கள் பதிக்கப்பட்டு, நன்கொடைகள் வசூலாகின்றன. ஆனால் ஒரு துளி குடிநீர் கிடைக்கவில்லை. விரக்தியில் ஃபருக்கும் அவரது மனைவியும் கிணறு தோண்டத் தொடங்கினார்கள். நிலத்துக்குள் பாறைகள்தான் வருகின்றனவே தவிர நீரின் தடம் கூட தென்படவில்லை. “ஏ அல்லா, காந்தேஸ்வரி அம்மா, கருணையே இல்லையா?”
தாகம்
அம்ருதமா, அமிர்தமா? எப்படி உச்சரிப்பது?
எங்களின் தாய்மொழிக்கு நீருற்றி வளர்க்கவா
அல்லது விடைகொடுத்து விடவா?
ஏன் காவியமயமாக்கம்? எங்கே வலிக்கிறது?
வெற்று நிலத்துக்குதான் வாக்களித்தோமா?
அல்லது அதையும் பறித்துக் கொள்ளவா?
*****
சோனாலி மஹாதோவும் சிறுவன் ராமுவும் மருத்துவமனை வாசலருகே அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தார்கள். முதலில் அப்பா, இப்போது அம்மா. ஒரு வருடத்தில் இருவருக்கும் இரு உயிர்க்கொல்லி நோய்கள்.
அரசின் மருத்துவக் காப்பீடு இருந்தும் அவர்கள் ஒவ்வொரு அலுவலகமாக அலைந்தனர். கெஞ்சினர். போராடினர். சாஸ்தியா சாதி திட்டம் உறுதி செய்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் போதுமானதாக இல்லை. நிலமற்றவர்கள் விரைவிலேயே வீடற்றவர்களாக மாறப் போகிறார்கள். அவர்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கும் விண்ணப்பிக்க முயற்சித்தார்கள். அது சாத்தியமா, உதவுமா என்று கூட எவருக்கும் தெரியவில்லை. அரசு அத்திட்டத்தை கைவிட்டு விட்டதென சிலர் சொல்கிறார்கள். சிலர், உறுப்பு மாற்ற சிகிச்சைக்கு அத்திட்டம் உதவாது என்கின்றனர். இன்னும் சிலர் அதில் வரும் பணம் போதாது என்கின்றனர். தகவல் என்கிற பெயரில், குழப்பம்தான் இருக்கிறது.
“ஆனால் அரசாங்கம் நமக்கு ஆதரவானது என்றுதானே பள்ளியில் சொல்லிக் கொடுக்கிறார்கள் அம்மா?” என ராமு கேட்கிறார். அமைதியாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார் சோனாலி.
வாக்குறுதிகள்
ஆஷா அக்கா! ஆஷா அக்கா, கொஞ்சம் உதவி செய்ங்க!
அப்பாவுக்கு புது இதயமும் அம்மாவுக்கு சிறுநீரகங்களும் வேணும்.
அந்த சாஸ்தியா சாதி திட்டம் அக்கா.
எங்க உடம்பையும் நிலத்தையும் வித்துட்டோம்.
ஏ ஆயுஷ், நீயாச்சும் எங்க கஷ்டத்தை போக்குவியா?
இல்ல, நீங்க எல்லாரும் வெறுமனே குரைச்சுட்டு, கடிக்காம போற கூட்டமா?
*****
சொற்களஞ்சியம் :
சோப் - காரசாரமான பலகார வகை
குக்னி - பட்டாணி, சுண்டல் உணவு வகை
கும்தி - கடை அல்லது கொட்டகை
காந்தேஸ்வரி - ஆறு மற்றும் தெய்வம்
கவிஞர், ஸ்மிதா காடோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறார். இந்த முன்னெடுப்புக்கு அவரின் கருத்துகளே மையம்
தமிழில்: ராஜசங்கீதன்