அவரால் ஓட முடியும். பயிற்சியும் கொடுக்க முடியும்.
எனவே ஜெயந்த் தந்தேகர் தன்னுடைய ஈரறை வாடகை வீட்டை திறந்து அவரை தன்னுடைய பராமரிப்பில் எடுத்துக் கொண்டார்.
எட்டு வயது ஊர்வசியின் வழியாக தன் கனவை வாழ முயலுகிறார் தந்தேகர்.
பெருங்கனவு கொண்ட ஒரு கிராமத்துக் குழந்தை, அவளின் பெற்றோர் மற்றும் இளம் தடகள பயிற்சியாளர் ஆகியோர் பற்றிய கதை இது. பணம் குறைவாக கொண்டிருந்தாலும் லட்சியத்தை உறுதியுடன் கொண்டிருக்கின்றனர்.
இரண்டு வருடங்களுக்கு முன், எட்டு வயது ஊர்வசி நிம்பர்தே தந்தேகரிடம் வந்தார். பந்தாரா நகரத்தின் வெளியே ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார் அவர். உடைமைகளுடன் அவர் வீட்டில் வசிக்கத் தொடங்கினார் ஊர்வசி. தந்தேகர்தான் அவருக்கு இப்போது தாயும் தந்தையும். ஊர்வசியின் பெற்றோரிடம் பணம் இல்லை. அவர்கள், பந்தாரா நகரத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தவ்வா கிராமத்தில் சிறு விவசாயிகளாக உள்ளனர். ஆனால், வாழ்க்கையில் ஊர்வசி மேம்பட வேண்டுமெனில் இந்த இளைஞனையும் அவரது கனவுகளையும் அவர் நம்ப வேண்டுமென ஊர்வசியின் தாய் மாதுரி நினைத்தார்.










