ஸ்ரீரங்கன் வீடு திரும்பியதும், தன் கைகளில் ஒட்டி காய்ந்து போன கெட்டியான ரப்பர் பாலை முதலில் அகற்றுகிறார். 55 வயதாகும் அவர் சிறுவயதில் இருந்தே ரப்பர் மரங்களை வெட்டி பால் எடுத்து வருகிறார். மரப்பால் உலர்ந்தவுடன் கடினமாகவும், பழுப்பு நிறமாகவும் மாறும் என்பதால் வீட்டுக்கு வந்தவுடன் கைகளில் இருந்து அதை அகற்றுவது அவரது முக்கியமான வேலை.
சுருளக்கோடு கிராமத்தில் உள்ள தனது ரப்பர் தோட்டத்திற்கு கொக்கி வடிவிலான ஆறு-ஏழு அங்குல நீளமுள்ள பால் வீதுரா கத்தியோடு (ரப்பர் அறுக்கும் கத்தி) நடந்து செல்லும் போது அவரது அன்றைய நாள் தொடங்குகிறது. அரசின் சார்பில் அவரது தந்தைக்கு ஒதுக்கப்பட்ட ஐந்து ஏக்கர் விவசாய நிலம், வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் உள்ளது. அதில் அவர் ரப்பர், மிளகு, கிராம்பு பயிரிடுகிறார்.
லீலாவும், ஸ்ரீரங்கனும், 27 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் கனிகரன் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
ஸ்ரீரங்கன் (தனது முதல் பெயரை மட்டுமே பயன்படுத்துகிறார்) முதல்நாள் மரத்தில் கட்டியிருந்த ஒரு கருப்பு கோப்பையில் வடிந்து உலர்ந்து போன மரப்பாலை சேகரிக்க தொடங்குகிறார். "இது ஒட்டுகரா" என்று அவர் குறிப்பிடுகிறார். "அந்தந்த நாளில் நாங்கள் புதிய மரப்பால் சேகரித்த பிறகு, மீதமுள்ளவை கோப்பைக்குள் வடிகிறது. அது இரவோடு இரவாக காய்ந்து விடும்."
உலர்ந்த மரப்பால் விற்பதால் கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை கூடுதல் வருமானம் கிடைக்கிறது. இரண்டு வாரங்களுக்கு சேகரித்த பின், ஓட்டுக்கராவை சந்தையில் அவர்கள் விற்கின்றனர்.
கோப்பைகளை காலி செய்தவுடன், புதிய மரப்பால் கோப்பைக்குள் வடிய, மரத்தில் ஒரு அங்குல நீளமுள்ள பட்டையை வெட்டுகிறார். தனது நிலத்தில் மீதமுள்ள 299 மரங்களுக்கும் இதே செயல்முறையை அவர் மீண்டும் செய்கிறார்.














