குளிர்கால பயிர் அறுவடையை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதிகாலை ஏழு மணிக்கு க்ருஷ்ணா அம்புல்கர், சொத்து மற்றும் நீர் வரி வசூலிக்க கிளம்பி விடுகிறார்
“(இங்குள்ள) விவசாயிகள் ஏழ்மையில் இருக்கின்றனர். 65 சதவிகித இலக்கை கூட வசூலிக்க முடியாது,” என்கிறார் சம்கோலி பஞ்சாயத்து ஊழியரான அவர்.
சம்கோலி, நாக்பூரிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. மனா மற்றும் கவாரி (பட்டியல் பழங்குடி) சமூகங்கள் வசிக்கும் அவ்வூரில் பெரும்பாலானோர் மானாவரி நிலத்தில் விவசாயம் பார்க்கும் குறுநில விவசாயிகளாக இருக்கின்றனர். விவசாயிகள் பருத்தி, சோயாபீன்ஸ், துவரை போன்றவற்றையும் கிணறோ ஆழ்துளைக் கிணறோ இருந்தால் கோதுமையைக் கூட விளைவிக்கின்றனர். நாற்பது வயது க்ருஷ்ணாதான் கிராமத்தில் இருக்கும் ஒரே பிற்படுத்தப்பட்ட சாதியினர். நாவி (நாவிதர்) சாதியை சேர்ந்தவர்.
புது டெல்லியில் தற்போதைய பட்ஜெட் விவசாயத்தில் கவனம் செலுத்துவதாகவும் மத்திய தர வர்க்கத்தினருக்கு வரி விலக்கு கொடுத்திருக்கும் பெருமிதத்தில் அனைவரும் திளைத்துக் கொண்டிருக்கும் நிலையில், பஞ்சாயத்து வரி வசூலிக்க முடியாமல் அம்புல்கர் திணறிக் கொண்டிருக்கிறார். விவசாயிகள் பயிர் விலை சரிவு பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
க்ருஷ்ணாவின் கவலையை எளிதாக விளக்கலாம்: அவர் வசூலிக்க முடியவில்லை எனில் ஊதியம் கிடைக்காது. ஏனெனில் அவரின் ஊதியமான ரூ. 11,500, பஞ்சாயத்தின் வரி வசூல் தொகையான ரூ. 5.5 லட்சம் ரூபாயிலிருந்துதான் வருகிறது.




