பட்ஜெட்டை தெரிந்துகொள்வது ஆண்களின் வேலை என நம்புகிறார் அஞ்சனா தேவி.
“ஆண்களுக்குதான் அதைப் பற்றி தெரியும். என் கணவர் வீட்டில் இல்லை,” என்கிறார் அவர். ஆனால் வீட்டைப் பொறுத்தவரை குடும்ப பட்ஜெட்டை கையாளுவது அவர்தான். அஞ்சனா, சமார் என்ற பட்டியல் சாதியை சேர்ந்தவர்.
“பஜ்ஜட் (பட்ஜெட்)!” என்கிறார் அவர் புதிய அறிவிப்புகளை அவர் கேட்டாரா என நினைவுபடுத்திக் கொண்டு. “இல்லை, கேள்விப்படவில்லை.” ஆனால் பிகாரின் வைசாலி மாவட்டத்தின் சோந்தோ ரட்டி கிராமத்தில் வசிக்கும் தலித்தான இவர் சொல்கிறார்: “ஆனால் இது (பட்ஜெட்) பணக்காரர்களுக்கானது.”
அஞ்சனாவின் கணவரான 80 வயது ஷம்புராம், நாங்கள் சென்றபோது இல்லை. பக்தி பாடல் பாட சென்றிருந்தார். வீட்டில் ரேடியோ ரிப்பேர் கடை நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் வாடிக்கையாளர்கள் குறைவுதான். “வாரத்தில் 300-400 ரூபாய் கிடைத்தால் அதிகம்,” என்கிறார் அஞ்சனா. வருட வருமானம் 16,500 ரூபாய். வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கும் தனிநபர் வருமான உச்சவரம்பான 12 லட்சம் ரூபாயில் 1.37 சதவிகிதம் அது. உச்சவரம்பை பற்றி சொன்னதும் அவர் சிரிக்கிறார். “சில நேரங்களில் வார வருமானம் 100 ரூபாய் கூட கிடைக்காது. இது செல்பேசிகளின் காலம். யாரும் ரேடியோ கேட்பதில்லை,” என்கிறார் அவர்.





