உத்தராகண்டின் உத்தம் சிங் நகர் மாவட்ட பாஜ்பூர் நகரிலிருந்து இச்சந்தைக்கு இயாசின் வந்துள்ளார். திரைச்சீலைகள், சோஃபா உறைகள் போன்ற வீட்டு உபயோக பொருட்களை 10 நாள் நிகழ்வில் விற்று ரூ.60,000 வரை சம்பாதிப்பார். ஆனால் இந்த ஆண்டு ரூ.20,000 மட்டுமே அவருக்கு கிடைத்துள்ளது. “எனக்கு கடன் உள்ளது. வியாபாரம் இங்கு நன்றாக இல்லாமல் போனால் என்ன செய்வது?” என்கிறார் அவர் ஏமாற்றத்துடன்.
கடல் மட்டத்திலிருந்து 14,000 அடி உயரத்தில் உள்ள சால் கிராமத்திலிருந்து வந்துள்ளார் கியான் சிங் தர்யால். அவரது கடையில் இமயமலை மூலிகைகள், மசாலாக்கள், அதிக உயரத்தில் கிடைக்கும் கருப்பு பஹாடி ரஜ்மா போன்றவற்றை வியாபாரம் செய்கிறார். நவம்பர் முதல் ஏப்ரல் வரை தார்யால் குடும்பம் தார்ச்சுலாவில் வசிக்கின்றனர். கோடை காலத்தில் சால் செல்லும் அவர்கள், மூலிகைகளையும் மசாலாக்களையும் பயிரிட்டு சேகரிக்கின்றனர். தங்கள் நிலத்தில் விளையும் பெரும்பாலானவற்றை அவர்கள் சொந்த பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்கின்றனர். “மூலிகைகள், மசாலாக்களை விற்றால் பணம் கிடைக்கும்,” என்கிறார் அவர். “முழு குடும்பமும் மூலிகை சேகரிப்பில் ஈடுபடுகிறோம். எங்கள் கடின உழைப்பிற்கு ஜால்ஜிபி நல்ல பரிசை அள்ளித் தரும்.”
இந்த ஆண்டு தர்யாலின் வியாபாரம் கடுமையாக சரிந்துவிட்டது. “சந்தைக்கு பலரும் வரவில்லை,” என்கிறார் அவர். தர்யாலுக்கு நிரந்தரமான கடை கிடையாது. ஜால்ஜிபி, முன்சியாரி, பாகேஸ்வரில் (அனைத்தும் உத்தராகண்டில் உள்ளது) அவர் கடை வைக்கிறார். அதன் மூலம் அவர் பணம் பெறுகிறார். அந்த வாய்ப்பை பணமதிப்பு நீக்கம் பறித்துவிட்டதாக அவர் சொல்கிறார்.
அர்ச்சனா சிங் குஜ்ஜிவாலும் சந்தைக்கு வந்துள்ளார். இவர் 10,370 அடி உயரத்தில் உள்ள குஜ்ஜி கிராமத்தின் தலைவர். இவர் ஜால்ஜிபியில் விற்பதற்காக சீனாவில் 12,940 அடி உயரத்தில் அமைந்துள்ள தக்லாகோட் மண்டியிலிருந்து கதகதப்பு ஆடைகள், மேல்சட்டைகளை வாங்கி வந்துள்ளார். ஜால்ஜிபியிலிருந்து 190 கிலோமீட்டர் தொலைவில் மண்டி உள்ளது. இதில் பாதி தூரத்தை வணிகர்கள் நடந்தே கடக்கின்றனர்.
“சந்தையின் முதல் சில நாட்களில், வியாபாரம் ஆகிவிடும் என நினைத்தோம்,” என்கிறார் அவர். “இந்த ஆண்டு எனக்கு 50 சதவிகிதம் தான் வியாபாரம் நடந்துள்ளது.” டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடைபெறும் முன்சியாரி, பாகேஸ்வர் சந்தைகளில் வியாபாரம் சிறப்பாக இருக்கும் என குஜ்ஜிவால் நம்புகிறார். “அப்போது அநேகமாக [பணம்] இந்த நெருக்கடி சரியாகிவிடும். ”
நேபாளத்தில் ஜூம்லா, ஹம்லா மாவட்டங்களில் இருந்தும் இச்சந்தைக்கு குதிரை வியாபாரிகள் வந்துள்ளனர். இதற்காக அவர்கள் கால்நடைகளுடன் 10 நாட்கள் நடந்தே வந்துள்ளனர். ஒரு குழுவில் 40 குதிரைகள், கழுதைகள் கொண்டு வரப்பட்டதில், 25 மட்டுமே விற்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுகளில், எல்லா கால்நடைகளும் சந்தைகளில் விற்றுவிடும். ஒரு குதிரையின் விலை ரூ.40,000. ஒரு கழுதையின் விலை ரூ.25,000. குன்றுகளில் வசிப்பவர்களுக்கு இந்த விலங்குகள் மிகவும் உதவிகரமாக இருக்கும். சில சாலைகள் மட்டுமே உள்ள இப்பிராந்தியத்தில் பொதி சுமக்க இவற்றை பயன்படுத்துவதால் இந்த விலங்குகளுக்கான தேவை அதிகம் உள்ளது.
“இன்று சந்தையின் கடைசி நாள். எங்களால் ஏழு குதிரைகளை விற்க முடியவில்லை,” என்கிறார் ஹம்லாவின் மற்றொரு குழுவைச் சேர்ந்த குதிரை வியாபாரி நார் பஹதூர். “இந்த பணமதிப்பு நீக்கம் பற்றி எங்களுக்குத் தெரியாது. ஜால்ஜிபி வந்த பிறகு தான் எங்கள் தலைவிதி தெரிந்தது.”