சிக்கனமாக உருவாக்கப்பட்ட புதுமை என அழைக்கலாம். ஆனால் 65 வயது நாராயண் தேசாய், அது தன் கலையின் மரணம் என குறிப்பிடுகிறார். சந்தைத் தேவைகளுக்காக செய்யப்படும் ஷெனாய் கருவி வடிவமைப்புகளின் மாற்றத்தைதான் அவர் சொல்கிறார். அக்கலைக்கான இருத்தலுக்கே அது அச்சுறுத்தல்.
காற்றினால் வாசிக்கப்படும் இசைக்கருவியான ஷெனாய், திருமணங்கள், விழாக்கள் மற்றும் நிகழ்வுகளில் பிரபலமாக பயன்படுத்தப்படுவதாகும்.
இரண்டு வருடங்களுக்கு முன் வரை, தேசாய் உருவாக்கிய ஒவ்வொரு ஷெனாயின் முடிவிலும் பித்தளை மணி இணைக்கப்பட்டிருக்கும். பாரம்பரியமாக கையால் உருவாக்கப்படும் ஷெனாயின் மரப்பகுதியிலிருந்து வெளிப்படும் இசையை இந்த மணிதான் அற்புதமாக்கும். தன் தொழிலில் அவர் உச்சத்தில் இருந்த 1970களில், தேசாயிடம் எப்போதும் ஒரு டஜன் பித்தளை மணிகள் இருப்பு இருக்கும். கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்திலுள்ள சிக்கோடி டவுனிலிருந்து பெறப்பட்டவை அவை.
எனினும் சமீபத்திய வருடங்களில், அவரது உத்தியை இரு காரணிகளால் அவர் மாற்ற நேரிட்டது. பித்தளை மணிகளின் அதிகரிக்கும் விலையும் நல்ல ஷெனாய்க்கான உற்பத்திச் செலவை கொடுக்க வாடிக்கையாளர்களிடம் இருக்கும் ஆர்வமின்மையும் அரை நூற்றாண்டாக பயன்படுத்தப்படும் உத்தியை அவர் மாற்ற வைத்தது.
“ஷெனாயை 300-400 ரூபாய்க்கு கேட்க மக்கள் தொடங்கிவிட்டனர்,” என்கிறார் அவர். பித்தளை மணி மட்டுமே 500 ரூபாய் ஆகும் நிலையில் இது சிரமமான விலை என்கிறார் அவர். பல ஆர்டர்களை தவற விட்ட பிறகு, நாராயண் ஒரு தீர்வை கண்டடைந்தார். “கிராமத்து கண்காட்சியில் பிளாஸ்டிக் ட்ரம்பட்டுகளை வாங்கி, அதன் முனைகளை (மணிகளை போல் தோற்றமளிப்பவை) வெட்டி, ஷெனாய்களில் பித்தளை மணிகள் இருக்கும் இடத்தில் பொருத்தினேன்.
“சத்தத்தை அது பாதிக்கும் என்றாலும் மக்கள் அந்த தரமே போதும் என்கின்றனர்,” என புலம்புகிறார். புரிதல் கொண்ட வாடிக்கையாளரிடம், அவரே பித்தளை மணியை வாங்கிக் கொடுக்கும் வாய்ப்பை வழங்குகிறார் அவர். பிளாஸ்டிக்கில் அவர் வாங்கும் மாற்றின் விலை வெறும் 10 ரூபாய்தான். கலையை நீர்த்து போக வைத்த சுமை மட்டும் அவர் மனசாட்சிக்கு மிச்சம்.
தீர்வு கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை எனில் ஷெனாய் தயாரிக்கும் கலை மகாராஷ்டிர எல்லையில் இருக்கும் வடக்கு கர்நாடகாவின் மனகாபூர் கிராமத்தில் அழிந்திருக்கும் என்பதை அவர் ஒப்புக் கொள்கிறார். 8346 பேர் (கணக்கெடுப்பு 2011) வசிக்கும் கிராமம் அது.
அவருக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து ஷெனாய், பெலகாவி கிராமங்களிலும் மகாராஷ்டிராவின் சுற்றுப்புறத்திலும் திருமணம் மற்றும் மல்யுத்த பந்தயங்கள் போன்ற நிகழ்வுகளில் வாசிக்கப்பட்டதாக கூறுகிறார். “இப்போதும் கூட, குஸ்திப் பந்தயங்களின்போது வாசிக்க எங்களை அழைப்பார்கள்,” என்கிறார் பெருமையோடு. “இந்த பாரம்பரியம் மாறவில்லை. ஷெனாய் வாசிப்பவர் இல்லாமல் பந்தயம் தொடங்காது.”
60களின் பிற்பகுதியிலும் 70களின் தொடக்கத்திலும் அவரின் தந்தை துக்காராம், ஷெனாய் செய்ய மாதந்தோறும் 15 ஆர்டர்கள் பெறுவார். 50 வருடங்களுக்கு பிறகு, நாராயணுக்கோ மாதத்தில் இரு ஆர்டர்கள் கூட வருவது கஷ்டமாகிவிட்டது. “மலிவான மாற்றுகள் இன்று நிறைய வந்துவிட்டன. சந்தையில் பாதி விலையில் கிடைக்கின்றன,” என்கிறார் அவர்.
இளம் தலைமுறையிடம் ஷெனாய் மீதான ஆர்வம் குறைந்து வருவதற்கான காரணமாக அவர், இசைக்குழுக்கள், மின்னிசை போன்றவற்றை குறிப்பிடுகிறார். அவரின் மொத்த குடும்பம் மற்றும் உறவினர்களில் 27 வயது மருமகன் அர்ஜுன் ஜாவிர் மட்டும்தான் மனகாபூரில் ஷெனாய் வாசிக்கிறார். மனகாபூரில் ஷெனாய் தயாரிக்கும் ஒரே நபர் நாராயண்தான். அவர் ஷெனாய் மற்று புல்லாங்குழல் ஆகிய இரண்டையும் தயாரிப்பார்.
*****
நாராயண் பள்ளிக்கு சென்றவரில்லை. ஷெனாய் தயாரிப்புக்கான அவரது பயிற்சி, கிராமத்து கண்காட்சிகளுக்கு அப்பா மற்றும் தாத்தா தத்துபா ஆகியோருடன் செல்லும்போது தொடங்கியது. அக்காலத்தில் பெலகாவி மாவட்டத்தில் ஷெனாய் அற்புதமாக வாசிப்பவர்களில் தத்துபாவும் ஒருவர். “அவர்கள் ஷெனாய் வாசித்தார்கள். நான் ஆடினேன்,” என்கிறார் அவர், 12 வயதில் குடும்பத் தொழிலுக்குள் நுழையத் தொடங்கிய தருணத்தை விவரித்து. “குழந்தையாக இருக்கும்போது இசைக்கருவி எப்படி இயங்குகிறதென கண்டறிய அதை தொட்டுப் பார்க்க விரும்புவோம். எனக்கும் அந்த ஆர்வம் இருந்தது,” என்கிறார் அவர். ஷெனாயும் புல்லாங்குழலும் வாசிக்க அவரே கற்றுக் கொண்டார். “இக்கருவிகளை வாசிக்கத் தெரியவில்லையெனில், எப்படி அவற்றை நீங்கள் உருவாக்க முடியும்?” என அவர் புன்னகையுடன் கேட்கிறார்.
நாராயணுக்கு 18 வயதாக இருக்கும்போது தந்தை இறந்துவிட்டார். அவரின் கலையும் பாரம்பரியமும் மகனுக்கு வந்து சேர்ந்தது. பிறகு, நாராயண் தன் திறன்களை மனகாபூரில் ஷெனாய் வாசிப்பதில் வல்லவரும் புல்லாங்குழல் தயாரிக்கும் திறன் படைத்தவருமான காலஞ்சென்ற மாமனாரின் வழிகாட்டலில் கற்றுக் கொண்டார்.
நாராயணின் குடும்பம் ஹோலார் சமூகத்தை சேர்ந்தது. பட்டியல் சாதியினரான ஹோலார்கள், பாரம்பரியமாக ஷெனாய் மற்றும் தம்புரா கலைஞர்களாக இருந்தவர்கள். தேசாயின் குடும்பத்தினர் போன்ற சிலர் இசைக்கருவி தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் இத்தொழில் ஆணின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகிறது. “தொடக்கம் முதல், ஆண்கள்தான் எங்கள் கிராமத்தில் ஷெனாய்களை தயாரித்து வருகின்றனர்,” என்கிறார் நாராயண். அவரின் தாயான, காலஞ்சென்ற தாராபாய் விவசாயக்கூலியாக இருந்து கொண்டு, திருமணங்கள் மற்றும் மல்யுத்த பந்தயங்களில் ஷெனாய் வாசிக்க ஆண்கள் பயணிக்கும் வருடத்தின் ஆறு மாதங்களும் ஒற்றை ஆளாக குடும்பத்தையும் பார்த்துக் கொண்டார்.
சந்தோஷமான பிராயத்தில் கிட்டத்தட்ட 50 கிராமங்களுக்கு ஒவ்வொரு வருடமும் பயணிப்பாரென நாராயண் நினைவுகூருகிறார். “தெற்கு பக்கமாக கோவா வரையும் (கர்நாடகாவின்) பெலகாவி கிராமங்களுக்கும் சங்க்லி மற்றும் (மகாராஷ்டிராவின்) கொல்ஹாப்பூர் ஆகிய இடங்களுக்கும் சென்றிருக்கிறேன்,” என்கிறார் அவர்.
அவரது ஷெனாய்களுக்கான தேவை சரிந்திருந்தாலும், அவரது ஓரரை வீட்டுடன் இணைந்திருக்கும் தேக்கு, செங்கருங்காலி, தேவதாரு மற்றும் பிற மரங்களின் நறுமணத்தால் சூழப்பட்ட 8X8 அடி பட்டறையில் நாராயண் இன்னும் பல மணி நேரங்களை கழிக்கிறார். “இந்த இடம் பால்யகாலத்தை நினைவூட்டுவதால் இங்கு அமர்ந்திருக்க பிடித்திருக்கிறது,” என்கிறார் அவர். பல்லாண்டு கால பழமையான துர்கா மற்றும் அனுமன் படங்கள், கரும்பு மற்றும் சோளம் தீவனம் கொண்டு கட்டப்பட்ட சுவரை அலங்கரிக்கின்றன. பட்டறைக்கு நடுவே இருக்கும் உதும்பர மரம் தகரக் கூரைக்கு வெளியே நீண்டிருக்கிறது.
கடந்த ஐம்பதாண்டுகளாக இங்குதான் அவர் 5000-க்கும் மேற்பட்ட ஷெனாய்களை, 30,000 மணி நேரங்களுக்கும் மேலாக கழித்து உருவாக்கியிருக்கிறார். தொழில் தொடங்கிய காலத்தில் ஷெனாய் தயாரிக்க ஆறு மணி நேரங்கள் அவருக்கு பிடித்தது. இப்போது நான்கு மணி நேரங்களில் அவர் செய்து விடுகிறார். அவரின் மனமும் கைகளும் உருவாக்கத்தில் அடங்கியிருக்கும் ஒவ்வொரு நுணுக்கத்தையும் சுமந்திருக்கிறது. “தூக்கத்தில் கூட என்னால் ஷெனாய் தயாரிக்க முடியும்,” என்னும் அவர், செய்து காட்டத் தொடங்குகிறார்.
முதலில் அவர் தேக்குக் கட்டையை ரம்பம் கொண்டு அறுக்கிறார். தொடக்கத்தில் அவர் தரம் வாய்ந்த செங்கருங்காலி, சந்தனம் மற்றும் ஷிஷேம் மரங்களை நல்ல இசைக்குறிப்புகள் உருவாக பயன்படுத்துவார். “முப்பது ஆண்டுகளுக்கு முன், மனகாபூரிலும் அருகாமை கிராமங்களிலும் இந்த மரங்கள் அதிகம் இருந்தன. இப்போது அரிதாகிவிட்டன,” என்கிறார் அவர். செங்கருங்காலி மரத்தின் ஒரு கன அடியில் ஐந்து ஷெனாய்களை செய்ய முடியும். 45 நிமிடங்களாக, அவர் கட்டையின் மேற்பகுதியை ஒரு தட்டையை வைத்து செதுக்குகிறார். “இதில் ஏதேனும் ஒரு தவறு செய்தாலும், இசைக்குறிப்புகள் நன்றாக வராது,” என்கிறார் அவர்.
எனினும் நாராயண் விரும்பும் மிருதுதன்மையை இழைப்புளி கொண்டு பெற முடியவில்லை. பட்டறையை சுற்றிப் பார்க்கும் அவர் ஒரு வெள்ளை சாக்கை வெளியே இழுக்கிறார். அதிலிருந்து ஒரு கண்ணாடி குடுவையை எடுக்கிறார். குடுவையை தரையில் போட்டு உடைக்கிறார். ஒரு கண்ணாடி துண்டை எச்சரிக்கையுடன் எடுத்து, மரக்கட்டையை மீண்டும் செதுக்குகிறார், அவரின் சமயோசிதத்தை மெச்சி சிரித்தபடி.
அடுத்தக் கட்டமாக, இழைக்கப்பட்ட கருவியில் இரும்புத் தடிகளை கொண்டு இரு பக்கங்களிலும் துளையிட வேண்டும். நாராயண் தடிகளை இம்ரி என்கிற அரவைக் கல் கொண்டு கூராக்குகிறார். அதை அவர், 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இச்சால்கரஞ்சியிலிருந்து 250 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். எல்லா உபகரணங்களையும் வாங்கும் சாத்தியமில்லை என்பதால் உலோகக் கருவிகளை அவரே உருவாக்கிக் கொள்கிறார். கருவியின் இரு பக்கங்களிலும் இரும்புத்தடியை வேகமாக இறக்குகிறார். சிறு தவறு நேர்ந்தாலும் அவரின் விரல்களில் ஓட்டை விழுந்துவிடும். ஆனால் அவர் அஞ்சவில்லை. துளையினூடாக சில வினாடிகள் அவர் பார்க்கிறார். பிறகு திருப்தி அடைந்து, கடினமான கட்டத்துக்கு நகர்கிறார். ஏழு துளைகள் போடும் கட்டம்.
“ஒரு மில்லிமீட்டர் தவறு கூட அபஸ்வரத்தை கொடுத்துவிடும்,” என்கிறார் அவர். “அதை சரி செய்யவே முடியாது,” என்கிறார். இதை தவிர்ப்பதற்காக, மின் தறியில் பயன்படுத்தப்படும் உருளைகளில் இணை துளைகளை குறிக்கிறார். பிறகு அவர் 17 செண்டிமீட்டர் நீள இரும்புத் தடிகள் மூன்றை சுட வைக்க அடுப்புக்கு செல்கிறார். “துளையிடும் கருவி வாங்க வசதி இல்லை. எனவே இந்த பாரம்பரிய முறையை நான் பின்பற்றுகிறேன்.” தடிகளை கையாள கற்பது சுலபமாக இருக்கவில்லை. தீக்காயங்கள் பல பட்டதை அவர் நினைவுகூருகிறார். “எங்களுக்கு தீக்காயமும் வெட்டுக்காயமும் படும்,” என்கிறார் அவர் தடிகளை காய வைத்து வேகமாக இணை துளைகளை போட்டபடி.
இம்முறைக்கு 50 நிமிடங்கள் பிடிக்கும். இதில் அவர் சுவாசிக்கும் அதிக புகை அவரை தொடர்ந்து இரும வைக்கிறது. எனினும் ஒரு நொடி இடைவெளி கூட அவர் எடுக்கவில்லை. “இது வேகமாக செய்யப்பட வேண்டும். இல்லையெனில், தடிகள் குளிர்ந்துவிடும். மீண்டும் காய வைத்தால் அதிக புகை ஏற்படும்.”
ஸ்வர துளைகள் போடப்பட்டதும் அவர் ஷெனாயை கழுவுகிறார். “இந்த மரத்தில் நீர் நுழையாது. ஒரு ஷெனாயை நான் செய்துவிட்டால், அது 20 வருடங்களுக்கு தாங்கும்,” என்கிறார் பெருமையுடன்.
பிறகு, அவர் ஷெனாயின் கருவியை, பிறகு மராத்தியில் ததாச்சி பான் என அழைக்கப்படும் நாணல் வகையின் தண்டை பயன்படுத்தி உருவாக்க தொடங்குகிறார். 20-25 நாட்களுக்கு நாணல் காய வைக்கப்பட வேண்டும். பிறகு நுட்பமாக தண்டுகளை 15 செண்டிமீட்டர் நீள துண்டுகளாக வெட்டப்படுகின்றன. பெலகாவியின் அடி கிராமத்திலிருந்து அவர் டஜன் தண்டுகளை 50 ரூபாய்க்கு வாங்குகிறார். “சரியான தண்டை கண்டறிவது ஒரு சவால்,” என்கிறார் அவர்.
அவர் தண்டை பாதியாக முடித்து இரண்டாக்கி பிறகு நான்காக்கி, நீரில் 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கிறார். முடிக்கப்பட்ட ஷெனாயில் இந்த இரண்டு மடிப்புகள்தான் ஒன்றுக்கு மேல் ஒன்றாக அதிர்ந்து விரும்பும் இசையை வெளிக்கொணர்கிறது. பிறகு, இரு முனைகளையும் அவர் தேவைப்படுவது போல் வெட்டி பிடிதண்டுடன் வெள்ளை பருத்தி நூலால் கட்டுகிறார்.
“கருவியை உருவாக்குவது கடினம்,” என்கிறார் அவர். நுட்பமான பணியில் அவர் ஈடுபட்டிருக்கையில், நெற்றி சுருக்கங்களுக்கு இடையே இருக்கும் பொட்டு வியர்வையில் ஈரமாகிறது. கூரான இழைகள் அவரது ஆட்காட்டி விரலில் பல காயங்களை ஏற்படுத்துகிறது. ஆனால் அவர் கவனம் சிதறவில்லை. “ஒவ்வொரு காயத்தையும் நான் பார்த்தால், எப்போது ஷெனாய் செய்ய முடியும்?” என சிரிக்கிறார். கருவி திருப்திகரமாக வடிவம் பெற்றதும், பாரம்பரியமாக பித்தளை மணி மாட்டுவது போல் பிளாஸ்டிக் மணியை ஷெனாயின் முனையில் இணைக்கிறார்.
22, 18 மற்றும் ஒன்பது அங்குலமென மூன்று அளவுகளில் நாராயண் ஷெனாய்களை தயாரிக்கிறார். அவற்றை முறையே ரூ.2000, ரூ.1500 மற்றும் ரூ.400 விலைகளில் விற்கிறார். 22, 18 அங்குலங்களுக்கான ஆர்டர்கள் அரிது. கடைசியாக அத்தகைய ஆர்டர் பத்து வருடங்களுக்கு முன் கிடைத்தது,” என்கிறார் அவர்.
அவர் கையால் செய்த மரப் புல்லாங்குழல்களின் தேவையும் நிலையான சரிவை கண்டது. “விலை அதிகமாக இருப்பதாக சொல்லி மக்கள் மரப் புல்லாங்குழல்களை வாங்குவதில்லை.” எனவே மூன்று வருடங்களுக்கு முன், அவர் பாலிவினைல் க்ளோரைட் (PVC) குழாய்களை கொண்டு, கறுப்பு நீல புல்லாங்குழல்களை செய்யத் தொடங்கினார். PVC புல்லாங்குழல் ஒவ்வொன்றும் 50 ரூபாய் விலை. மரப்புல்லாங்குழலின் விலையோ ரூ.100. அதுவும் மரத்தின் தரம் மற்றும் அளவு சார்ந்தது. தொழிலில் செய்ய வேண்டிய சமரசங்கள் நாராயணுக்கு மகிழ்ச்சி தரவில்லை. “மரப் புல்லாங்குழல்களை PVC குழல்களோடு ஒப்பிடவே முடியாது,” என்கிறார் அவர்.
கையால் செய்யப்படும் ஷெனாய் ஒவ்வொன்றுக்கும் செலுத்தப்படும் கடினமான உழைப்பு, புகையால் ஏற்படும் மூச்சிரைப்பு, தொடர்ந்து குனிந்திருப்பதால் ஏற்படும் முதுகுவலி, வேகமாக குறைந்து வரும் வருமானம் ஆகியவற்றால்தான் இளம் தலைமுறையினர் இக்கலையை கைகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை என்கிறார் நாராயண்.
ஷெனாய் செய்வதே சுலபமில்லை என்கிறபோது, அதை வாசிப்பதும் அத்தனை சுலபமில்லை. 2021-ல் கொல்ஹாப்பூரின் ஜோதிபா கோவிலில் வாசிக்க அவர் அழைக்கப்பட்டார். “ஒரு மணி நேரத்தில் நான் மயங்கி விழுந்து விட்டேன். ட்ரிப்ஸ் ஏற்றும் நிலை ஏற்பட்டது,” என்கிறார் அவர். அதற்குப் பிறகு ஷெனாய் வாசிப்பதை அவர் நிறுத்தி விட்டார். “அது சுலபம் கிடையாது. ஒவ்வொரு ஷெனாய் வாசிப்பாளரும் அக்கருவியை வாசிக்கும்போது அவரின் முகத்தை நாம் பார்த்தால், அவரின் சிரமத்தை புரிந்து கொள்ள முடியும்.”
ஆனால் ஷெனாய்களை அவர் விடுவதாக இல்லை. “இக்கலை எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது,” என்கிறார் அவர்.
*****
ஷெனாய் மற்றும் புல்லாங்குழல் ஆகியவற்றை மட்டுமே நம்பி பிழைப்பை ஓட்ட முடியாதென நாராயணுக்கு தெரியும். அதனால்தான் முப்பது வருடங்களுக்கு முன்பே அவர் வருமானத்துக்காக வண்ணமயமான குச்சி காற்றாடிகளை செய்யத் தொடங்கிவிட்டார். “கிராமத்து கண்காட்சிகளில், இன்னும் குச்சி காற்றாடிகளுக்கான தேவை இருக்கிறது. விளையாடவென ஸ்மார்ட்ஃபோன் வாங்க எல்லாராலும் முடியாதல்லவா?” என்கிறார். 10 ரூபாய் விலையில் இந்த குச்சி காற்றாடி மக்களின் வாழ்க்கைகளில் சந்தோஷத்தை கொண்டு வருகிறது. நாராயணின் குடும்பத்துக்கு தேவையான வருமானத்தையும் தருகிறது.
எளிதாக செய்ய முடிகிற குச்சி காற்றாடிகளையும் தாண்டி, அவர் ஸ்ப்ரிங் பொம்மைகளையும் செய்கிறார். அவரின் கைவண்ணத்தில் 10-20 ரூபாய்க்கு விற்கும் 20 வகை ஓரிகாமி பறவைகளும் உண்டு. “கலை பள்ளிக்கு நான் சென்றதே இல்லை. ஆனால் காகிதத்தை கையில் எடுத்துவிட்டால், அதிலிருந்து எதையேனும் செய்யாமல் நான் கீழே வைக்க மாட்டேன்,” என்கிறார் அவர்.
கோவிட் தொற்றும் பிறகான கிராமத்து கண்காட்சி மற்றும் விழாக்களுக்கான தடையும் இத்தொழிலை நிறுத்தியது. “இரண்டு வருடங்களுக்கு நான் ஒரு குச்சி காற்றாடி கூட விற்க முடியவில்லை,” என்கிறார் அவர். மார்ச் 2022-ல் மனகாபூரின் மகாசிவராத்திரி யாத்திரை நடந்தபோதுதான் வேலை மீண்டும் தொடங்கியது. எனினும் மாரடைப்பு ஏற்பட்ட பிறகான ஆரோக்கிய குறைபாட்டால், பயணிக்க முடியாத அவர், தற்போது ஏஜெண்டுகளை கொண்டு குச்சி காற்றாடிகளை விற்கிறார். “ஒரு குச்சி காற்றாடி விற்றால், அவர்களுக்கு கமிஷனாக நான் மூன்று ரூபாய் தர வேண்டும்,” என்கிறார் அவர். “எனக்கு இதில் சந்தோஷம் இல்லை. ஆனால் ஓரளவுக்கு வருமானம் வருகிறது,” என்னும் நாராயண் மாதத்துக்கு 5,000 ரூபாய் ஈட்டுகிறார்.
40 வயதுகளில் இருக்கும் அவரது மனைவி சுசீலா, செங்கல் சூளையில் வேலை பார்க்கிறார். குச்சி காற்றாடிகள் செய்யும்போது உதவுகிறார். சில நேரங்களில் ஆண்களால் கட்டி காக்கப்பட்ட ஷெனாய் மற்றும் புல்லாங்குழல் தயாரிப்பிலும் இறங்குகிறார். “சுசீலா உதவாவிட்டால், இந்தத் தொழில் பல வருடங்களுக்கு முன்னமே அழிந்திருக்கும்,” என்கிறார் நாராயண். “இக்குடும்பம் நடக்க அவர்தான் உதவுகிறார்.”
”எனக்கு பல திறமைகள் இல்லை. ஒரு இடத்தில் அமர்ந்து பல பொருட்களை நான் உருவாக்குகிறேன்,” என்கிறார் அவர் பணிவாக. “இக்கலை என்னுடன் இறந்துவிடும்,” என்கிறார் அவர் தந்தையும் தாத்தாவும் ஷெனாய் வாசிக்கும் ஒரு புகைப்படத்தை எடுத்தபடி.
இக்கட்டுரை கிராமத்துக் கலைஞர்கள் பற்றிய சங்கேத் ஜெயினின் தொடரில் ஒரு பகுதி. மிருணாளினி முகெர்ஜி அறக்கட்டளையின் ஆதரவில் எழுதப்பட்டது
தமிழில்: ராஜசங்கீதன்