பல விஷயங்கள் சொல்ல இருக்கின்றன. ஆனால் வேண்டாம். 89 வயதாகி விட்டது. பல கதைகள் இருக்கின்றன. அவற்றை நான் சொல்வதில்லை. மனதுக்குள்ளேயே வைத்திருக்கிறேன். பல செய்தியாளர்களும் பத்திரிகையாளர்களும் வந்து என் செய்தியை எழுதி பிரசுரித்திருக்கிறார்கள். புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். நான் பிரபலமாகி விட்டதாக உலகுக்கு சொல்வார்கள். பல இசைஞர்கள் வந்து என் இசையை திருட முயலுவார்கள். எனவே நான் அனைவரையும் சந்திப்பதில்லை. நீங்கள் என்னை சந்திக்க முடிந்தது உங்கள் அதிர்ஷ்டம்.
சங்கித் நாடக அகாடமி விருது எனக்கு கிடைத்தது. விழா டெல்லியில் நடந்தது. விருது பெற்றபோது கண்ணீர் வந்துவிட்டது. என் தந்தை பள்ளிக்கு என்னை அனுப்பியதில்லை. எனக்கு வேலை கிடைக்குமா என்பதில் அவருக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் அவர் ‘இக்கருவிதான் நம் தெய்வம்’ என சொன்னார். உண்மையில் இது தெய்வம்தான். இதுதான் எனக்கு எல்லாமும் தந்தது. மனிதத்தைக் கற்றுக் கொடுத்தது. என் பெயர் உலகம் முழுக்க தெரியும். என் தர்பா அச்சிடப்பட்டு ஒரு அஞ்சல் தலை வெளியிடப்பட்டிருக்கிறது. என் பெயரை உங்கள் செல்பேசியில் உள்ளிட்டு பார்த்தால், என் காணொளியை நீங்கள் பார்க்க முடியும்… வேறென்ன வேண்டும்? கிணற்றில் இருக்கும் தவளைக்கு வெளியே என்ன இருக்கிறதென தெரியாது. ஆனால் நான் அந்த கிணற்றை தாண்டி விட்டேன்… உலகத்தை பார்த்துவிட்டேன்.
இன்றைய இளைஞர்கள் தர்பா மெட்டுகளுக்கு ஆடுவதில்லை. டிஜெவை வரவழைக்கிறார்கள். நானும் விட்டுவிடுகிறேன். ஆனால் ஒரு விஷயத்தை சொல்லுங்கள். நம் வயலில் அறுவடை செய்து, புது அரிசியை கூந்தேவிக்கு படைக்க போய், அவளை வேண்டும்போது டிஜே இசையா இசைப்போம்? அந்த கணங்களில் தர்பாதான், வேறு எதுவும் கிடையாது.
PARI, இதை ஆவணப்படுத்த உதவிய AROEHAN-ன் மாதுரி முகானேவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
நேர்காணல், ஒலிபெயர்ப்பு மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு: மேதா கலே
புகைப்படங்கள் மற்றும் காணொளி: சிதிதா சொனாவனே
இக்கட்டுரை, பாரியின் அருகி வரும் மொழிகள் பணியின் ஒரு பகுதியாகும். நாட்டின் அருகி வரும் மொழிகள் பற்றி ஆவணப்படுத்தும் பணி இது.
வார்லி, இந்தியாவின் குஜராத், டாமன் மற்றும் டையூ, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கோவா போன்ற இடங்களில் வசிக்கும் வார்லி பழங்குடியினரால் பேசப்படும் இந்தோ ஆரிய மொழி ஆகும். யுனேஸ்கோவின் மொழிகளுக்கான வரைபட நூல், வார்லியை அதிகம் பாதிக்கப்படக் கூடிய மொழியாக வரையறுத்திருக்கிறது.
மகாராஷ்டிராவில் பேசப்படுவதை போல் வார்லி மொழியை ஆவணப்படுத்துவதே எங்களின் நோக்கம்.
தமிழில்: ராஜசங்கீதன்