“நாங்கள் படிக்கலாம் என்று உட்கார்ந்தால், எங்கள் பாடநூல்கள், நோட்டுகள் மீது தண்ணீர் சொட்டுகிறது. கடந்த ஆண்டு (2022) ஜூலையில் வீடு இடிந்தது. ஒவ்வோர் ஆண்டும் இது நடக்கிறது.” பெரும் கற்கள், மூங்கில் கொண்டு கட்டப்பட்ட தனது வீடு குறித்து 8 வயது மாணவன் விஷால் சவாண் கூறியது இது.
ஆலேகாவ் பாகா மாவட்ட ஊராட்சிப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிற விஷால், மகாராஷ்டிராவில் நாடோடிப் பழங்குடி என்று வகைப்படுத்தப்பட்டுள்ள பெல்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்.
“குறிப்பாக, மழை பெய்யும்போது குடிசைக்குள் இருப்பது கடினம். பல இடங்களில் இருந்து நீர் சொட்டும்,” என்று கூறும் விஷாலும், அவரது 9-வயது அக்கா வைஷாலியும் வீட்டில் ஒழுகாத இடத்தை தேடிக்கொண்டே இருப்பார்கள்; மழை வரும்போது அங்கே உட்கார்ந்து படிப்பார்கள். ஷிரூர் வட்டம், ஆலேகாவ் பாகா என்ற ஊரில் இவர்கள் வசிக்கிறார்கள்.
அக்கா – தம்பி இருவரும் படிப்பில் ஆர்வத்தோடு இருப்பதைப் பார்த்து அவர்களது பாட்டி ஷாந்தாபாய் சவாண் மிகவும் பெருமைப்படுகிறார். “முதலில் எழுத படிக்க கற்பவர்கள் என் பேரப்பிள்ளைகள்தான்,” என்கிறார் அந்த 80 வயது பெண்மணி.
தனது பேரப்பிள்ளைகள் குறித்துப் பேசும்போது அவரது சுருக்கங்கள் நிரம்பிய முகத்தில் சோகமும், பெருமையும் கலந்த ஓர் உணர்ச்சி நிழலாகப் படர்கிறது. “அவர்கள் நிம்மதியாகப் படிப்பதற்கு எங்களிடம் ஒரு நல்ல வீடு இல்லை. மின் விளக்கும் இல்லை.” ஆலேகாவ் பாகா வஸ்தி என்ற இடத்தில் உள்ள தார்ப்பாய் குடிசைக்குள் இருந்தபடியே இதைக் கூறுகிறார் அவர்.












