ஏழு வயது மகளுடன் நடைபயணமாக ஒருவர் பந்தன்பூரிலிருந்து ஆஷாதி வாரியில் கலந்து கொள்ள நடைபயணமாக செல்கிறார். மாநிலத்தின் எல்லா பக்கங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான வர்காரிகள் வித்தால் கோவிலுக்கு வருவார்கள். போகும் வழியில் அவர்கள், லதூரிலுள்ள மைஸ்காவோன் கிராமத்தில் தங்க முடிவெடுக்கின்றனர். மாலை நேரத்தில் கீர்த்தனை சத்தம் காற்றில் வந்தது. கஞ்சிரா வாத்தியத்தின் சத்தத்தை கேட்டதும், நிகழ்ச்சிக்கு அழைத்து செல்லுமாறு தந்தையை அச்சிறுமி தொந்தரவு செய்தார்.

அவரின் தந்தை தயங்கினார். “இங்குள்ள மக்கள் மகர் மற்றும் எங்களை போன்ற மாங்க் சமூகத்தினரை தொட மாடார்கள்,” என அவர் விளக்க முற்படுகிறார். “நம்மை பயனில்லாதவர்களாக அவர்கள் கருதுகிறார்கள். நம்மை உள்ளே விட மாட்டார்கள்.” ஆனால் சிறுமி ஒப்புக் கொள்ளவில்லை. இறுதியில், தூரமாக நின்று நிகழ்ச்சியை கேட்கலாம் என முடிவாகிறது. இசை ஒலிகளை பின் தொடர்ந்து இருவரும் பந்தலை சென்றடைகின்றனர். மகராஜா நடித்துக் கொண்டே கஞ்சிரியை வாசித்து கீர்த்தனை பாடுகிறார். விரைவில் சிறுமியை ஆர்வம் பற்றுகிறது. மேடைக்கு போக விரும்புகிறார். திடீரென சிறுமி எழுந்து ஓடி மேடையில் ஏறி விடுகிறார்.

“நான் பாருத் (கேலியும் கிண்டலும் சேர்ந்து சமூக மறுமலர்ச்சிக்காக பாடப்படும் பழைய பாடல் வகை) பாட விரும்பினேன்,” என அவர் மேடையிலிருந்த துறவியிடம் சொல்கிறார். பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் மகாராஜா அவரை பாட அனுமதிக்கிறார். அடுத்த சில நிமிடங்களுக்கு சிறுமி, ஒரு உலோகப் பானையைத் தட்டி தாளம் எழுப்பி, ஒரு பாடலை பாடுகிறார். அந்தப் பாடலை எழுதியதும் அங்கிருந்த அதே மகாராஜாதான்.

माझा रहाट गं साजनी
गावू चौघी जनी
माझ्या रहाटाचा कणा
मला चौघी जनी सुना

கிணற்றில் இருக்கும் மரச் சக்கரம், என் அன்பே
நாம் நால்வரும் ஒன்றாய் பாடுவோம்
மரச்சக்கரமும் அதன் முதுகும்
என் மருமகள்கள் நால்வரும்

சிறுமியின் பாடலால் ஈர்க்கப்பட்டு, துறவி அவருக்கு கஞ்சிரியை பரிசாக அளிக்க, அவர், “என் ஆசிர்வாதங்கள் உனக்கு எப்போதுமே இருக்கும். இவ்வுலகுக்கு நீ ஞானத்தை கொண்டு வருவாய்,” என்றார்.

மீரா உமாப், கேலியான உருவகங்கள் நிரம்பி பல அர்த்தங்கல் தரக்கூடிய பாரம்பரிய பாருத் பாடலை பாடுகிறார்

அது 1975ம் ஆண்டில் நடந்தது. அந்தத் துறவி துகாதோஜி மகாராஜ். கிராமப்புறங்களில் இருப்பவர்களின் துயரங்களையும் பிரச்சினைகளையும் கொண்ட பாடல்களை கிராம கீதம் என்ற பெயரில் தொகுத்தவர். அச்சிறுமி, 50 வருடங்கள் கழித்து, இன்றும் நிகழ்ச்சிகளால் மேடைகளை பரபரப்புக்குள்ளாக்குகிறார். நெளவாரி பருத்தி புடவையும் நெற்றியில் பெரிய பொட்டும் கொண்டு திமதி என்கிற சிறு வாத்தியத்தை இடது கையில் வைத்துக் கொண்டு மீரா உமாப், பீம் கீதம் பாடுகிறார். அவரின் வலது கை விரல்கள் உற்சாகமாகவும் துடிப்பாகவும் வாத்தியத்தை வாசிக்கிறது. கையில் அணிந்திருக்கும் வளையல்கள், வாத்தியங்களுடன் அவர் கட்டியிருக்கும் மணிகளுடன் மோதி விளையாடுகிறது. எல்லாமும் உயிர் பெறுகிறது.

खातो तुपात पोळी भीमा तुझ्यामुळे
डोईवरची
गेली मोळी भीमा तुझ्यामुळे
काल
माझी माय बाजारी जाऊन
जरीची
घेती चोळी भीमा तुझ्यामुळे
साखर
दुधात टाकून काजू दुधात खातो
भिकेची
गेली झोळी भीमा तुझ्यामुळे

உங்களால்தான் ரொட்டியை நெய்யில் முக்கி சாப்பிட முடிகிறது, ஓ பீம்
விறகுக் கட்டைகளை நான் சுமக்காததற்கு நீங்கள்தான் காரணம், ஓ பீம்

என் தாய் நேற்று சந்தைக்கு சென்று
ஜரிகை ஜாக்கெட்டை வாங்கி வந்தார், எல்லாம் உங்களால்தான் ஓ பீம்

என் பாலை நான் முந்திரிகளுடன் குடிக்கவும் நீங்கள்தான் காரணம்
பிச்சை பாத்திரம் நான் ஏந்தாமல் இருப்பதற்கும் நீங்கள்தான் காரணம் ஓ பீம்

*****

பிறந்த தேதி மீராபாய்க்கு தெரியவில்லை. ஆனால் 1965ம் ஆண்டில் பிறந்ததாக சொல்கிறார். மகாராஷ்டிராவில் அந்தர்வாலி கிராமத்தின் ஏழை மதாங் குடும்பத்தில் அவர் பிறந்தார். அம்மாநிலத்தில் பட்டியல் சாதியாக வரையறுக்கப்பட்டிருக்கும் அவர்கள் வரலாற்றில் ‘தீண்டத்தகாதவர்களாக’ கருதப்படுபவர்கள்.

அவரின் தந்தை வாமன் ராவும் தந்தை ரேஷ்மா பாயும் பீட் மாவட்டத்தில்  கிராமந்தோறும் பயணித்து பஜனைகள் பாடி யாசகம் கேட்டிருக்கின்றனர். தலித் சமூகத்தில் அதிகம் தெரிந்து போதிக்கும் திறன் கொண்டு பாடும் கலையை பாதுகாக்கும்  ‘குரு கரானா’வாக அவர்களின் குடும்பத்தை சமூகம் மதிக்கிறது.

PHOTO • Vikas Sontate

மகாராஷ்டிராவின் திமிதியும் காஞ்சிரியும் வாசிக்கும் ஒரே பெண் ஷாஹிர் மீரா உமாப்தான். ஆண்களால் மட்டுமே வாசிக்கப்பட்ட வாத்தியங்களை திறன் கொண்டு அவர் வாசிக்கிறார்

ஐந்து மகள்களையும் மூன்று மகன்களையும் பார்த்துக் கொள்ள அந்த இருவரும் மிகவும் சிரமப்பட்டனர். குழந்தைகளின் மூத்தவரான மீராபாய்க்கு ஏழு வயதானபோது, பெற்றோருடன் பாடல் பாடும் இடங்களுக்கு செல்லத் தொடங்கினார். வாமன்ராவ் ஏக்தாரி கருவியை இசைக்க, அவரின் தம்பி பாவ்ராவ் திமதி வாசித்தார். “என் தந்தையும் மாமாவும் ஒன்றாக யாசகம் கேட்பார்கள்,” என்கிறார் அவர் தான் பாட வந்த கதையை விவரித்து. “ஒருமுறை பங்கு பிரிப்பதில் இருவருக்கும் சண்டை வந்தது. இருவரும் அதற்கு பின் பிரிந்தார்கள்.”

அந்த நாளுக்கு பிறகு, மாமா புல்தானாவுக்கு சென்றார். மீராபாய் தந்தையுடன் சேர்ந்து செல்லத் தொடங்கினார். தன் மெல்லிய குரலில், அவருக்கு பின்னால் பாடிச் சென்ற அவர், பிறகு பல பக்தி பாடல்களையும் கற்றுக் கொண்டார். “நான் ஒரு பாடகர் ஆவேன் என என் தந்தை எப்போது நம்பி வந்தார்,” என்கிறார் அவர்.

பிறகு சம்பளத்துக்காக கால்நடைகளை மேய்க்கும்போது திமதி வாசிக்க முயன்றார் அவர். “என்னுடைய சிறு வயதில் உலோகப் பானைகள்தான் என்னுடைய வாத்தியங்கள். நீர் எடுக்கச் செல்லும்போது என் விரல்கள் உலோகப் பானையைத் தட்டும். அது பொழுது போக்கை விட, ஒரு சுபாவமாக மாறிப் போனது. வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட எல்லாமும் இப்படி வேறு விஷயங்கள் செய்யும்போது கற்றுக் கொண்டதுதான்,” என்கிறார் மீராபாய்.

அப்பகுதியில் வழக்கமான பஜனைகள் பாட சிறு கூட்டங்கள் நடத்தப்படும். விரைவில் மீராபாய் அக்குழுக்களில் இணைந்து பல பஜனைகள் பாடத் தொடங்கினார்.

राम नाही सीतेच्या तोलाचा
राम बाई हलक्या दिलाचा

ராமர் சீதாவுக்கு நிகரல்ல
ராமரின் இதயம் தக்கையானது

“நான் பள்ளிக்கு சென்றதில்லை. ஆனால் 40 வகை ராமாயணங்கள் மனப்பாடமாக தெரியும்,” என்கிறார் அவர். “மகாபாரதத்தின் ஷ்ரவன் பால் கதை, பாண்டவர் கதைகள் மற்றும் கபீரின் நூற்றுக்கணக்கான தோஹாக்கள் எல்லாம் என் மூளையில் பதிந்துவிட்டது.” ராமாயணம் ஒரே கட்டத்தில் எழுதப்பட்டது என அவர் நம்பவில்லை. பல்வேறு பண்பாட்டு பின்னணிகளை சார்ந்த மக்களின் உலகளாவிய பார்வை மற்றும் அவதானிப்புகளை கொண்டு காலந்தோறும் உருவாக்கப்பட்டது என நினைக்கிறார். பல சமூகங்களின் வரலாற்றுப்பூர்வ சவால்களும் பலவீனங்களுக்குமான தீர்வுகள் இந்த புராணங்களுக்குள் எட்டப்பட்டிருக்கின்றன. அதே கதாபாத்திரங்கள்தான். ஆனால் கதைகள் பல பரிமாணங்கள் கொண்டவை.

மீராபாய், சமூகத்தில் தனக்கு இருக்கும் இடத்திலிருந்து அப்புராணத்தை வழங்குகிறார். உயர்சாதி இந்துக்கள் சொல்வதிலிருந்து பெரிதும் மாறுபட்ட பாணி அது. அவரின் ராமாயணத்தில், ஒரு தலித் பெண்தான் மையம். ஏன் சீதையை ராமர் கைவிட்டுச் சென்றார்? ஏன் சம்புகனை கொன்றார்? ஏன் வாலியை அவர் கொன்றார்? நிறைய கேள்விகளை அவர் பார்வையாளர்களிடம் கதை சொல்லும்போது கேட்டு, அக்கதைகளுக்கு பின்னிருக்கும் யதார்த்தத்தை புரிய வைக்கிறார். “நகைச்சுவை கலந்தும் இக்கதைகளை நான் சொல்கிறேன்,” என்கிறார் அவர்.

PHOTO • Ramdas Unhale
PHOTO • Labani Jangi

இடது: மீரா உமாப்புக்கு ஏழு வயதாக இருக்கும்போது துறவி துக்தோஜி மகாராஜ் பரிசளித்த காஞ்சிரி கருவியுடன் அவர். வலது: மீராபாய் வாசிக்கும் தோலும் மர வளையமும் கொண்ட சிறு வாத்தியமான திமதியின் படம். காஞ்சிரி கருவியில் அதிகமாக உலோக தட்டுகளும் வெளி வளையத்தில் இணைக்கப்பட்டிருக்கும். தெய்வங்களின் கதைகளை சொல்லும்போது நாட்டுப்புறக் கலைஞர்களால் வாசிக்கப்படும் அந்த வாத்தியம், அவர்களின் வழிபாட்டுக்கு பிரதானமாகக் கருதப்படுகிறது

இசை பற்றிய ஆழமான அறிவு மற்றும் உத்தி பற்றிய புரிதல் ஆகியவற்றுடனான மீராபாயின் இசை, அவரின் தனித்துவத்தை கொண்டிருக்கிறது. மராத்வடா மற்றும் விதர்பாவில் பெரும் ஆதரவை கொண்ட சீர்திருத்தவாதியும் கவிஞருமான துகதோஜி மகாராஜின் அடியொற்றி பயணித்து மீராபாயும் பிரபலமடைந்தார்.

துகோதோஜி மகாராஜ், தன் கீர்த்தனை நிகழ்ச்சிகளில் காஞ்சிரி வாசித்தார். அவரின் சிஷ்யர் சத்யபால் சிஞ்சோலிக்கர் சப்தா காஞ்சிரி வாசித்தார். அதிலுள்ள ஏழு காஞ்சிரிகளும் விதவிதமான சத்தங்களையும் இசையையும் எழுப்புகிறது. சங்க்லியை சேர்ந்த தேவானந்த் மாலியும் சதாரேவை சேர்ந்த மலாரி கஜாபாரேவும் அதே வாத்தியத்தைதான் இசைக்கின்றனர். ஆனால் காஞ்சிரியை இத்தனை திறனுடன் வாசிக்கும் ஒரே பெண் மீராபாய் உமாப் மட்டும்தான்.

தஃப் (மணிகளுடன் கூடிய மேள) வாத்தியத்துடன் பாடல்களை எழுதி பாடும் லதூரின் ஷாகிரான ரத்னாகர் குல்கர்னி, திறமையாக அவர் காஞ்சிரி வாசித்து அற்புதமாக பாடியதை பார்த்தார். ஷாகிரி (சமூக மறுமலர்ச்சிக்கான பாடல்கள்) பாட அவருக்கு ஆதரவும் உத்வேகமும் அளிப்பதென முடிவெடுத்தார். 20 வயதாக இருக்கும்போது மீராபாய் ஷாகிரி பாடத் தொடங்கினார். பீடின் அரசாங்க நிகழ்ச்சிகளை பாடினார்.

“எல்லா மதப் புராணங்களும் மனப்பாடமாக தெரியும். கதா, சப்தா, ராமாயணா, மகாபாரதா, சத்யவான் - சாவித்ரி கதை, மகாதேவர் பாடல்கள், புராணங்கள் யாவும் என் நாக்கு நுனியில் இருக்கும்,” என்கிறார் அவர். “அவற்றை சொல்லியிருக்கிறேன். பாடியிருக்கிறேன். மாநிலத்தின் எல்லா மூலைகளிலும் நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறேன். ஆனால் அவை எதுவும் எப்போதும் எனக்கு திருப்தி அளித்ததில்லை. அப்பாடல்களை கவனிக்கும் மக்களுக்கு புதிய வழியையும் அவை காட்டியதில்லை.”

புத்தர், ஃபுலே, ஷாகு, அம்பேத்கர், துகாதோஜி மகாராஜ் மற்றும் கட்கே பாபா ஆகியோர்தான் பகுஜன் மக்களின் சமூகத் துயரைப் பேசியவர்கள். மீராபாயின் மனதைத் தொட்டவர்கள். “விஜய்குமார் கவாய் எனக்கு முதல் பீம கீதத்தை கற்றுக் கொடுட்த்ஹார். நான் பாடிய வாமன்தாதா கர்தாக்கின் முதல் பாடலும் அதுதான்,” என மீராபாய் நினைவுகூருகிறார்.

पाणी वाढ गं माय, पाणी वाढ गं
लयी नाही मागत भर माझं इवलंसं गाडगं
पाणी वाढ गं माय, पाणी वाढ गं

தண்ணீர் கொடு, அன்பே, தண்ணீர் கொடு
நான் அதிகம் கூட கேட்கவில்லை, என் சிறு பானையை நிரம்பினால் போதும்
தண்ணீர் கொடு, அன்பே, தண்ணீர் கொடு

“அந்த நாளிலிருந்து புராணம் பாடுவதை நான் நிறுத்திவிட்டேன். பீம கீதத்தை பாடத் தொடங்கினேன். பாபாசாகேப் அம்பேதகரின் பிறந்த தின நூற்றாண்டான 1991ம் ஆண்டிலிருந்து அவர் பீம கீதத்துக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். பாபாசாகேபின் செய்தியை நன்றியோடு பரப்பும் பாடல்கள் அவை.

மீரா உமாப்பின் பீம கீதத்தை கேளுங்கள்

ஷாகிர் என்கிற வார்த்தை ‘ஷாயர்’ அல்லது ‘ஷாயிர்’ என்கிற பார்சி வார்த்தையிலிருந்து உருவானது. மகாராஷ்டிராவின் கிராமப்புற ஷாகிர்கள், பொவாடா ஆட்சியாளர்களை கொண்டாடி பாடல்கள் எழுதி பாடியிருக்கிறார்கள். காஞ்சிரியுடன் பாடும் ஆத்மராம் சால்வா , ஹார்மோனியத்துடன் பாடும் தாது சால்வே மற்றும் ஏக்தாரியுடன் பாடும் கடுபாய் காரத் ஆகியோர் தலித் உளவியலை தம் பாடல்களால் மேம்படுத்தி இருக்கின்றனர்.

கீர்த்தனை, பஜனை மற்றும் பொவாடா பாடவென வெவ்வேறு பாணிகளில் இசையை வாத்தியத்தின் வெவ்வேறு இடங்களில் விரல்கள் பட்டு வாசித்து அவர் பாடும் பாடலை கேட்பதே அலாதியான அனுபவம். அவரின் பாடல் மெல்ல வேகம் பிடிக்கிறது. ஒலியும் வெளிப்பாடும் மண் சார்ந்ததாக இருக்கிறது. அலட்சியமான வீரத்தை கொண்டிருக்கிறது. அவரின் அர்ப்பணிப்புதான் திமதி மற்றும் காஞ்சிரி கலையை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

மகாராஷ்டிராவின் பல துறவிகள் பயன்படுத்தும் பாருத் என்கிற நாட்டுப்புற பாடல் வடிவத்தை நிகழ்த்தும் சில பெண்கள் ஷாகிர்களில் மீராபாயும் ஒருவர். இரு வகையான பாருத்கள் இருக்கின்றன. மதம் மற்றும் ஆன்மிகத்தை சார்ந்த பஜனி பாருத் மற்றும் ஆண்கள் பெண்களாக வேடமிட்டு நடிக்கும் சொங்கி பாருத் ஆகியவையே இரு வகை. ஆண்கள்தான் வரலாறு மற்றும் சமூகம் சார்ந்த பொவாதாக்களையும் பாருத்களையும் நிகழ்த்துவார்கள். இந்தப் பிரிவினையை மறுத்து இயங்கும் மீராபாய், எல்லா கலை வடிவங்களையும் அதே வேகத்துடனும் உணர்வுடனும் நிகழ்த்தத் தொடங்கினார். ஆண் நிகழ்த்துக் கலைஞர்களை விட அவரின் பல பாடல்கள் பிரபலம்.

திமதியுடனான நிகழ்ச்சிகள், நாடகம் மற்றும் பார்வையாளர்களுக்கான செய்தி ஆகியவை மீராபாய்க்கு பொழுதுபோக்கு மட்டுமல்ல.

*****

இந்நாட்டில் கலையின் தரம், நிகழ்த்துபவரின் சாதியை சார்ந்து நிர்ணயிக்கப்படுகிறது. இசையிலும் பிற கலைகளிலும் தன் சாதி இயங்குவதையும் ஒருவர் உணர முடியும். தலித் அல்லாதோரும் பகுஜன் அல்லாதோரும் இவற்றை உருவாக்கி, கருவிகளை இதே தன்மையுடன் வாசிக்க முடியுமா? ஒரு வெளியாள் திமதியோ சம்பளோ சும்பருக்கோ வாசிக்க முயன்றாலும், அதற்கென எந்த விதியும் கிடையாது.

மும்பை பல்கலைக்கழக இசைத்துறை மாணவர்கள், காஞ்சிரி மற்றும் திமதி வாசிக்கக் கற்றுக் கொள்கின்றனர். க்ருஷ்ணா முசாலே மற்றும் விஜய் சாவன் ஆகிய பிரபல கலைஞர்கள் இந்த வாத்தியங்களுக்கான குறிப்புகளை உருவாக்கி இருக்கின்றனர். ஆனாலும் சிரமங்கள் இருப்பதாக சொல்கிறார் பல்கலைக்கழகத்தின் லோக் கலா அகாதமி இயக்குநர் கணேஷ் சந்தன்ஷிவே.

PHOTO • Medha Kale
PHOTO • Ramdas Unhale

இடது: கணேஷ் சந்தன்ஷிவே, மும்பை பல்கலைக்கழகத்தின் லோக் கலா அகாடமி இயக்குநர். திமதியோ சம்பலோ தமக்கென ஓர் இசை வடிவத்தை கொண்டிருக்கவில்லை என அவர் ஒப்புக் கொள்கிறார். ‘ஒரு செவ்வியல் இசைக்கருவிக்கான அந்தஸ்தை தரும் வகையிலான “அறிவியலும்” இல்லை. எவரும் குறிப்புகளும் எழுதி வைக்கவில்லை,’ என்கிறார் அவர். வலது: எந்த அறிவியலும் இசைக்குறிப்பும் இலக்கணமும் இல்லாமல், அந்த வாத்தியம் வாசிக்கும் அறிவை மீராபாயே உருவாக்கிக் கொண்டார்

திமதி, சம்பல் மற்றும் காஞ்சிரி ஆகியவற்றை நீங்கள் பிற செவ்வியல் இசைக்கருவிகளை கற்பிப்பது போல் கற்பிக்க முடியாது,” என்கிறார் அவர். “ தபலா போன்ற கருவியை எவரேனும் எழுதிக் கொடுக்கும் குறிப்புகளை வைத்து வாசித்து ஒருவர் கற்றுக் கொள்ள முடியும். அதே போன்ற குறிப்புகளை கொண்டு திமதி மற்றும் சம்பள் வாசிக்கக் கற்றுக் கொடுக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால் இக்கருவிகளுக்கென சுயமான இசையியல் கிடையாது. யாரும் குறிப்புகளை எழுதி வைத்திருக்கவில்லை. செவ்வியல் கருவிக்குரிய அந்தஸ்தை அவற்றுக்கு வழங்கும் வகையிலான அறிவியலையும் எவரும் உருவாக்கவில்லை,” என அவர் விளக்குகிறார்.

திமதி மற்றும் காஞ்சிரி ஆகியவற்றின் மீதான மீராபாயின் நிபுணத்துவம் எந்த அறிவியலையும் தெரியாமலே உருவானது. அக்கருவிகளின் இசை பற்றிய குறிப்பு, இலக்கணம் எதுவும் அவருக்கு தெரியாது. அவர் வாசிக்கத் தொடங்கியபோது தா அல்லது டா கூட அவருக்கு தெரியாது. ஆனால் அவரின் வேகமும் சுருதியின் பூரணமும் செவ்வியல் கருவி வாசிக்கும் எந்தக் கலைஞரின் இசைக்குறிப்புடனும் பொருந்தக் கூடியதாக இருந்தது. கருவி அவருக்கு சொந்தமானது. லோக் கலா அகாடமியை சேர்ந்த எவரும் திமதி வாசிக்கும் நிபுணத்துவத்தில் மீராபாயின் திறனை மிஞ்ச முடியாது.

பகுஜன் சாதிகள் மத்திய தர வர்க்கமாக மாறத் தொடங்கியபோது அவற்றின் பாரம்பரிய கலையையும் வெளிப்பாடையும் இழக்கத் தொடங்கியது. கல்விக்கும் வேலைக்கும் நகரங்களை நோக்கி புலம்பெயர்ந்தபிறகு, இத்தகைய பாரம்பரியத் தொழில்களையும் அது சார்ந்த கலை வடிவங்களையும் அவை கைவிட்டன. இத்தகைய கலை வடிவங்களை ஆவணப்படுத்துவதற்கான பெரும் தேவை இருக்கிறது. வரலாறு மற்றும் பூகோள ரீதியிலான அவற்றின் இயக்கமும் உருவாக்கமும் புரிந்து கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. நமக்கு தோன்றும் பல கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டியிருக்கிறது. உதாரணமாக, சாதிய மோதலின் தன்மைகள், பிற போராட்டங்கள், அவற்றின் வெளிப்பாட்டில் பிரதிபலிக்கின்றனவா என்பன போன்றவை. ஆம் எனில், அவை பிரதிபலிக்கும் வடிவங்கள் எவை? பல்கலைக்கழகங்களுக்கோ கல்வி நிறுவனங்களுக்கோ இத்தகைய இலக்குகள், கல்விப்பூர்வமாக இக்கலைகளை ஆராயும்போது இருப்பதில்லை.

ஒவ்வொரு சாதிக்கும் பிரத்யேகமாக ஒரு நாட்டுப்புறக் கலை உண்டு. அதே போல அவற்றின் வகைகளும் அதிகம் இருக்கின்றன. இந்த பொக்கிஷங்களையும் பாரம்பரியத்தையும் காப்பதற்கென பிரத்யேகமான ஓர் ஆய்வு மையத்துக்கான தேவை இருக்கிறது. எந்த பிராமணரல்லாத இயக்கத்தின் திட்டத்திலும் இது இல்லை. ஆனால் மீராபாய் இதை மாற்ற விரும்புகிறார். “ காஞ்சிரி, ஏக்தாரி, தோலகி போன்றவற்றை இளைஞர்கள் கற்பதற்கான ஒரு நிறுவனத்தை தொடங்க விரும்புகிறேன்,” என்கிறார் அவர்.

மாநில அளவில் இதற்கென எந்த ஆதரவும் அவருக்குக் கிடைக்கவில்லை. அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தாரா? “எனக்கு எழுதப் படிக்கத் தெரியுமா?” பதிலுக்கு அவர் கேட்கிறார். “எங்கு எப்போது நான் நிகழ்ச்சிக்கு சென்றாலும் அங்கு யாரேனும் அதிகாரி வந்தால் நான் கோரிக்கை வைப்பேன். இக்கனவை அடைய உதவும்படி கேட்டுக் கொள்வேன். ஆனால் ஏழைகளின் கலையை அரசு மதிக்குமா?”

PHOTO • Labani Jangi
PHOTO • Labani Jangi

பொவாதா (புகழ் பாடல்கள்) பாட ஷாகிர்களால் பயன்படுத்தப்படும் தஃப் வாத்தியமும் காந்தாலிகளால் ‘பவானி தாய்’ (துல்ஜாபவானி) ஆசிர்வாதம் பெற பயன்படுத்தப்படும் துன்துனே வாத்தியமும். வலது: தக்கல்வார் சமூகத்தினர் எதிரொலிக்கும் ஒரு பெட்டியில் ஒரு குச்சியை கழுத்து போல் செருகப்பட்டிருக்கும் கிங்க்ரி என்கிற வாத்தியத்தை வாசிக்கின்றனர். இன்னொரு வகையான கிங்க்ரி மூன்று எதிரொலி பெட்டிகளையும் சுருதி சேர்த்து வாசிக்க ஒரு மர மயிலையும் கொண்டிருக்கும்

PHOTO • Labani Jangi
PHOTO • Labani Jangi

இடது: சம்பள், பெண் தெய்வங்களுக்கான கந்தால் சடங்கில் வாசிக்கப்படும். ஒரு பக்கம் மர மேளங்கள் தோலால் ஒரு பக்கம் இணைக்கப்பட்டவை இவை. இரண்டு குச்சிகளால் வாசிக்கப்படும் வாத்தியம் இது. கந்தாலிகளின்போது வாசிக்கப்படும். வலது: ஹல்கி ஒரு வட்ட மர மேளம். மாங் சமூக ஆண்களால் விழாக்களிலும் கோவில் மற்றும் தர்கா சடங்குகளிலும் வாசிக்கப்படுகிறது

*****

அரசாங்கம் மீராபாய்க்கு ஒருமுறை அழைப்பு விடுத்தது. மீராபாயின் ஷாகிரியும் பாடலும் பெரும் பார்வையாளர்களை ஈர்க்கத் தொடங்கியதும் மகாராஷ்டிரா அரசாங்கம் விழிப்புணர்வுக்காக நிறைய பங்களிக்கும்படி அவரிடம் கேட்டுக் கொண்டது. விரைவிலேயே மாநிலத்தின் எல்லா பகுதிகளுக்கும் பயணித்து அவர் நாட்டுப்புற இசையுடன் கூடிய சிறு நாடகங்களை சுகாதாரம், போதை ஒழிப்பு, வரதட்சணை தடுப்பு, மதுவிலக்கு குறித்து போட்டார்.

बाई दारुड्या भेटलाय नवरा
माझं नशीब फुटलंय गं
चोळी अंगात नाही माझ्या
लुगडं फाटलंय गं

என் கணவர் ஒரு குடிகாரர்
என் விதி அ நாதரவாக கிடக்கிறது.
நான் அணிய ரவிக்கை இல்லை.
என் புடவையில் கிழிசல் இருக்கிறது.

போதை ஒழிப்புக்கான அவரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி, மகாராஷ்டிரா அரசாங்கத்திடமிருந்து வியாசன்முக்தி சேவா விருதை பெற்று தந்தது. வானொலியிலும் தூர்தர்ஷனிலும் கூட நிகழ்ச்சி நடத்த அவர் அழைக்கப்பட்டார்.

*****

நல்ல வேலை செய்தபோதும், மீராபாய்க்கு வாழ்க்கை சிரமமாகத்தான் இருக்கிறது. “எனக்கு வீடு இல்லாமல் போனது. யாரும் எனக்கு ஆதரவும் இல்லை,” என அவரின் சமீபத்திய துயர நிலையை கூறுகிறார். “ஊரடங்கு (2020) காலத்தில் என் வீடு, மின்சாரக் கசிவால் எரிந்து போனது. எங்களுக்கு வேறு வழி ஏதுமில்லாததால், அந்த வீட்டை விற்றோம். நடுத்தெருவுக்கு வந்தோம். பல அம்பேத்கரியவாதிகள் எங்களுக்கு உதவியதில் இந்த வீட்டை கட்டினோம்,” என்கிறார் அவர் தகர சுவர்களும் கூரையும் கொண்ட புதிய வீட்டை குறிப்பிட்டு.

PHOTO • Ramdas Unhale
PHOTO • Ramdas Unhale

பல பாராட்டுகளையும் விருதுகளையும் வென்ற நாட்டுப்புறக் கலைஞரும் பாடகருமான ஷாகிர் மீரா உமாப் வாழ்க்கை சிரமதசையில் இருக்கிறது. சத்ரபதி சம்பாஜி நகரின் சிகல்தானாவிலுள்ள அவரின் சிறு தகர வீட்டு புகைப்படங்கள் இவை

பெரும் ஆளுமைகளான அன்னபாவ் சாதே, பால் கந்தார்வா மற்றும் லஷ்மிபாய் கொல்ஹாபூர்கர் ஆகியோரின் பெயர்களிலான பல மரியாதைக்குரிய விருதுகள் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்ட ஒரு கலைஞரின் வாழ்க்கைச் சூழல் இப்படித்தான் இருக்கிறது. அவரின் பண்பாட்டு பங்களிப்பை பாராட்டும் வகையில் மகாராஷ்டிரா அரசாங்கம் விருது அளித்து கெளரவித்திருக்கிறது. இந்த விருதுகள் ஒரு காலத்தில் அவரது வீட்டின் சுவர்களை அலங்கரித்தவை.

“அவை உங்களின் கண்களுக்கு மட்டும்தான் அழகான காட்சியாக இருக்கும்,” என்கிறார் கண்களில் கண்ணீர் மின்ன. “இவற்றை பார்ப்பதால் மட்டும் ஒருவரின் வயிறு நிரம்பி விடாது. கோவிட் காலத்தில் நாங்கள் பட்டினி கிடந்தோம். அச்சமயங்களில் இந்த விருதுகளை விறகுகளாக பயன்படுத்திதான் உணவு சமைக்க வேண்டியிருந்தது. விருதுகளை விட பசி கடுமையான ஆயுதம்.”

அங்கீகாரம் இருக்கிறதோ இல்லையோ மீராபாய் தன் கலையை எந்தத் தடையுமற்ற அர்ப்பணிப்புடனும் பின்பற்றி, மனித நேயம், அன்பு மற்றும் பரிவு பற்றிய செய்தியை, பிரசாரம் செய்த சீர்திருத்தவாதிகளின் பாதையில் நடக்கிறார். கலை மற்றும் கலை நிகழ்ச்சிகளை அவர் மதவாத, பிரிவினைத் தீயைப் போக்க பயன்படுத்துகிறார். “என் கலையை நான் விற்க விரும்பவில்லை,” என்கிறார் அவர். “மதிக்கப்பட்டால்தான் அது கலை. இல்லையெனில் அது தண்டனை.”

”என் கலையின் தன்மையை அது இழக்க நான் விடவில்லை. கடந்த 40 வருடங்களாக நாட்டின் பல மூலைகளுக்கு பயணித்து கபீர், துகாராம், துகாதோஜி மகாராஜ் மற்றும் ஃபுலே-அம்பேத்கர் செய்திகளை பரப்புகிறேன். அவர்களை பற்றி நான் தொடர்ந்து பாடுகிறேன். அவர்கள் என் நிகழ்ச்சிகளின் வழியாக இன்னும் வாழ்ந்து வருகிறார்கள்.

“கடைசி மூச்சு வரை நான் பீம கீதத்தை பாடுவேன். அதுதான் என் வாழ்க்கை. அதுதான் எனக்கு பூரண திருப்தியை அளிக்கிறது.”

இந்தக் காணொளி, இந்தியக் கலைக்கான இந்திய அறக்கட்டளை, ஆவணக் காப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகத் திட்டத்தின் கீழ், PARI-யுடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட திட்டமான ‘Influential Shahirs, Narratives from Marathwada’ என்ற தொகுப்பின் ஒரு பகுதியாகும். புது தில்லியின் கோத்தே நிறுவனம்/மேக்ஸ் முல்லர் பவன் ஆகியவற்றின் ஆதரவுடன் இது சாத்தியமானது.

தமிழில் : ராஜசங்கீதன்

Keshav Waghmare

Keshav Waghmare is a writer and researcher based in Pune, Maharashtra. He is a founder member of the Dalit Adivasi Adhikar Andolan (DAAA), formed in 2012, and has been documenting the Marathwada communities for several years.

यांचे इतर लिखाण Keshav Waghmare
Editor : Medha Kale

मेधा काळे यांना स्त्रिया आणि आरोग्याच्या क्षेत्रात कामाचा अनुभव आहे. कुणाच्या गणतीत नसणाऱ्या लोकांची आयुष्यं आणि कहाण्या हा त्यांचा जिव्हाळ्याचा विषय आहे.

यांचे इतर लिखाण मेधा काळे
Editor : Pratishtha Pandya

प्रतिष्ठा पांड्या पारीमध्ये वरिष्ठ संपादक असून त्या पारीवरील सर्जक लेखन विभागाचं काम पाहतात. त्या पारीभाषासोबत गुजराती भाषेत अनुवाद आणि संपादनाचं कामही करतात. त्या गुजराती आणि इंग्रजी कवयीत्री असून त्यांचं बरंच साहित्य प्रकाशित झालं आहे.

यांचे इतर लिखाण Pratishtha Pandya
Illustrations : Labani Jangi

मूळची पश्चिम बंगालच्या नादिया जिल्ह्यातल्या छोट्या खेड्यातली लाबोनी जांगी कोलकात्याच्या सेंटर फॉर स्टडीज इन सोशल सायन्सेसमध्ये बंगाली श्रमिकांचे स्थलांतर या विषयात पीएचडीचे शिक्षण घेत आहे. ती स्वयंभू चित्रकार असून तिला प्रवासाची आवड आहे.

यांचे इतर लिखाण Labani Jangi
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

यांचे इतर लिखाण Rajasangeethan