பொட்டல் பீடபூமியில் இருக்கும் தர்கா, மல்காவோனில் வசிப்பவர்களுக்கு பெரிதும் உதவியிருக்கிறது. மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் இருக்கும் இந்த தலம் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. எப்போதும் உதவியே வந்திருக்கிறது.
தர்கா மீது சாய்ந்திருக்கும் மரத்தடியில்தான் பள்ளிக் குழந்தைகள் வீட்டுப் பாடம் செய்வார்கள். இளைஞர்களும் இளம்பெண்களும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு நுழைவாயிலில் அமர்ந்து படிப்பார்கள். கொளுத்தும் கோடைக்காலங்களில் அங்குதான் குளிர்ந்த தென்றல் வீசும். சுற்றியிருக்கும் திறந்தவெளியில், போலீஸ் ஆக விரும்புபவர்கள் கடும் உடற்பயிற்சியில் ஈடுபடுவார்கள்.
”தர்காவைப் பற்றி என் தாத்தா கூட நிறைய சொல்வார்,” என்கிறார் 76 வயது வினாயக் ஜாதவ். கிராமத்தில் 15 ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்திருக்கிறார். “எவ்வளவு பழமையானது என யோசித்துக் கொள்ளுங்கள். இந்துக்களும் இஸ்லாமியரும் ஒன்றாக அதை பராமரித்து வந்திருக்கின்றனர். சமாதானமான ஒருமித்த வாழ்வுக்கான அடையாளம் அது.”
செப்டம்பர் 2023-ல் நிலவரம் மாறியது. அதிகமாய் நேசிக்கப்பட்ட மலகாவோனின் அந்த தர்காவுக்கு புது அர்த்தம் கற்பிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டம் கொண்ட இளைஞர்களின் சிறு குழு ஒன்று, அந்த தர்கா ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதாக சொன்னது. இந்துத்துவ குழுக்களின் ஆதரவில் அக்குழு இயங்கியது.
மலகாவோனில் வசிக்கும் இந்த 20-25 வயதுக்குள் இருக்கும் இந்து இளைஞர்கள் “சட்டவிரோத ஆக்கிரமிப்பை” அகற்றும்படி மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் எழுதினர். சிலர், தர்காவுக்கு அருகே இருந்த நீர் தொட்டியை ஏற்கனவே இடித்து விட்டனர். “அதை சுற்றி இருக்கும் நிலத்தை இஸ்லாமிய சமூகம் அபகரிக்க நினைக்கிறது,” என்றது கடிதம். “கிராமப் பஞ்சாயத்தின் விருப்பத்துக்கு எதிராக தர்கா கட்டப்பட்டிருக்கிறது.”













