கரடகா கிராமத்தில் ஒரு குழந்தை பிறந்தால், குடும்பத்தினர் முதலில் சோமக்கா பூஜாரிக்கு தெரிவிக்கிறார்கள். கிட்டத்தட்ட 9,000 மக்களைக் கொண்ட கிராமத்தில் இன்னும் செம்மறி ஆட்டு ரோமங்களில் வளையல்களை உருவாக்கக்கூடிய சில கைவினை கலைஞர்களில் இவரும் ஒருவர். உள்ளூரில் கண்டா என்று அழைக்கப்படும் இந்த ஆபரணங்கள் மங்களகரமானதாகக் கருதப்படுகின்றன. பிறந்த குழந்தைகளின் மணிக்கட்டுகளைச் சுற்றி வைக்கப்படுகின்றன.
"செம்மறி ஆடுகள் பெரும்பாலும் மேய்ச்சல் நிலங்களைத் தேடி கிராமங்களைக் கடந்து, கடினமான வானிலையையும் பொருட்படுத்தாமல் அனைத்து வகையான மக்களையும் சந்திக்கின்றன," என்று 50 வயதுகளின் பிற்பகுதியில் இருக்கும் சோமக்கா கூறுகிறார். செம்மறி ஆடுகள் சகிப்புத்தன்மையின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. மேலும் அவற்றின் தலைப்பகுதி ரோமங்களில் தயாரிக்கப்படும் கண்டா, தீய சக்தியை தடுக்கும் என்று நம்பப்படுகிறது.
தங்கர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பாரம்பரியமாக இந்த வளையல்களை வடிவமைத்துள்ளனர். இன்று, கரடகாவில் உள்ள எட்டு தங்கர் குடும்பங்கள் மட்டுமே இந்த கலையை பயிற்சி செய்வதாக கூறப்படுகிறது. "நிம்மா கவாலா கட்லா ஆஹே [இந்த கிராமத்தில் உள்ள பாதி குழந்தைகளின் மணிக்கட்டுகளை இந்த வளையல்களால் அலங்கரித்துள்ளேன்]", என்று சோமக்கா மராத்தியில் கூறுகிறார். கரடகா கிராமம் கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மகாராஷ்டிரா எல்லையில் உள்ளது. எனவே அப்பகுதியில் வசிக்கும் பலரும் சோமக்கா போன்று கன்னடம், மராத்தி இரண்டையும் பேசுகிறார்கள்.
"அனைத்து சாதி மற்றும் மதத்தைச் சேர்ந்தவர்களும் கண்டாவுக்காக எங்களிடம் வருகிறார்கள்", என்று சோமக்கா கூறுகிறார்.
குழந்தைப் பருவத்தில் சோமக்கா, தனது தாயார் மறைந்த கிஸ்னபாய் பங்கர், கரடகாவில் சில சிறந்த கண்டாக்களை உருவாக்குவதைப் பார்த்திருக்கிறார். "கண்டா தயாரிப்பதற்கு முன்பு செம்மறி ஆட்டு ரோமங்களை ஒவ்வொரு இழையாக [லோகர் என்றும் அழைக்கப்படுகிறது] ஏன் அம்மா சோதித்தார் என்பதை அறிய ஆர்வமாக இருந்தேன்," என்று அவர் கூறுகிறார். வடிவமைக்க எளிதானவை என்பதால் அவரது அம்மா மெல்லிய இழைகளை பயன்படுத்தினார். முதன்முறையாக கத்தரிக்கப்படும் செம்மறி ஆடுகளின் ரோமங்கள் சொரசொரப்பாக இருப்பதால் பயன்படுத்தப்படுகிறது. "நூறு செம்மறி ஆடுகளில், சரியான வகை ரோமங்களை ஒரே ஒரு ஆட்டில் தான் காண முடியும்."
சோமக்கா தனது தந்தை மறைந்த அப்பாஜி பங்கரிடமிருந்து கண்டா தயாரிப்பதைக் கற்றுக்கொண்டார். அவருக்கு 10 வயது இருந்தபோது, கற்றுக்கொள்ள இரண்டு மாதங்கள் ஆனது. நான்கு தசாப்தங்களுக்குப் பிறகும், சோமக்கா இந்த கலையை தொடர்ந்து பயிற்சி செய்கிறார். அதன் புகழ் மங்கி வருவது குறித்து கவலைப்படுகிறார்: "இப்போதெல்லாம் இளம் மேய்ப்பர்கள் செம்மறி ஆடுகளை மேய்ப்பதில்லை. செம்மறி ஆட்டு ரோமங்களுடன் தொடர்புடைய கைவினை பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்?"














