“OTP-கள் என்றாலே எனக்கு பயம். ஆறு எண்கள்தான். பணம் பறிபோய்விடும்,” என பேருந்து சத்தம், வியாபாரிகளின் சத்தம், அறிவிப்புகளின் ஒலி போன்றவற்றால் நிறைந்திருக்கும் பேருந்து நிறுத்தத்தில் கூறுகிறார் அனில் தோம்ப்ரே. யாரோ ஒருவர் அவரிடம் OTP கேட்டிருக்கிறார். என்னிடம் உதவக் கேட்டிருக்கிறார்.
பட்ஜெட் பற்றி அவர் கேள்விப்பட்டிருக்கிறார். “ஜனவரி 31 அன்று, அது குறித்த செய்தியை ரேடியோவில் கேட்டேன். ஒவ்வொரு துறைக்குமென சில அறிவிப்புகளை அரசு வெளியிட்டிருக்கிறது. எனக்கு அது தெரியும். முழுமையாக இல்லையெனினும் கொஞ்சமேனும் தெரியும்,” என்கிறார் வெற்றிலைப் பாக்கை சீவியபடி.
சற்று அமைதியான இடத்துக்கு செல்வதென முடிவெடுத்ததில் சிவப்பு கறுப்பு குச்சி வழிகாட்ட அவர் கேண்டீனுக்கு நம்மை அழைத்து செல்கிறார். நடைமேடைகள், கூட்டம், கேண்டீன் கவுண்டர்கள், படிக்கட்டுகள் எல்லாம் அவருக்கு அத்துப்படி. “ஒரு வயதாகும்போது தட்டம்மை வந்து என் பார்வை போய் விட்டதாக சொன்னார்கள்.”



