"மழைக்காலத்துக்கு முன் கிராம சபை கட்டடத்தை பழுதுபார்த்து விடுவது நல்லது," என்கிறார் லுபுங்பத் மக்களிடம் பேசும் சரிதா அசுர்.
ஒரு தண்டோராக்காரர் பிரதான தெருவில் கொஞ்ச நேரத்துக்கு முன் அறிவித்த கிராம சபைக்கு கூட்டம் இப்போது தொடங்கி இருக்கிறது. வீடுகளிலிருந்து ஆண்களும் பெண்களும் கிளம்பி கிராம சபைக் கட்டடத்தில் கூடி இருக்கின்றனர். அந்த ஈரறை கட்டடத்துக்குத்தான் சரிதா நிதி திரட்டி பழுது பார்க்க விரும்புகிறார்.
ஜார்க்கண்ட் மாவட்டத்தின் கும்லா மாவட்டத்தில் இருக்கும் இந்த கிராமத்து மக்கள் உடனே ஒப்புக் கொண்டனர். சரிதாவின் தீர்மானம் நிறைவேறியது.
முன்னாள் தேசிய ஹாக்கி விளையாட்டு வீரரான அவர், "எங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை நாங்கள்தான் காண வேண்டும் என்றும் எங்களின் கிராம சபை கிராமத்தை மேம்படுத்த முடியும் என்பதையும் இப்போது தெரிந்து கொண்டோம். எங்களின் எல்லாருக்கும் இது அதிகாரம் வழங்கி இருக்கிறது, குறிப்பாக பெண்களுக்கு," என்கிறார்.










