“நான் என்னை ஓவியராக கருதுவதில்லை. ஓவியருக்கான தகுதிகள் எனக்கு இல்லை. ஆனால் என்னிடம் கதைகள் இருக்கின்றன. அவற்றை ப்ரஷ் கொண்டு எழுத முயற்சிக்கிறேன். என்னுடைய ஓவியங்கள் முழுமையானவை என நான் சொல்வதில்லை. கடந்த இரண்டு-மூன்று வருடங்களாகதான் ஓவியர்கள் பலரது ஓவியங்களை ஆராய்ந்து கற்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ஓவியம் பற்றி பெரிய அறிவு கிடையாது."
லபானி ஓர் ஓவியர். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்திலுள்ள கிராமமான துபுலியாவை சேர்ந்தவர். இரண்டாம் உலகப் போரின்போது, ராணுவ முகாமும் விமானப் பாதையும் இந்த கிராமத்தில் இருந்திருக்கிறது. இஸ்லாமிய பெரும்பான்மை வாழும் இந்த கிராமத்தில், பிரிட்டிஷார் முகாம் அமைத்தபோது விவசாய நிலத்தின் பெரும்பகுதி பறிபோனது. பிறகு பிரிவினை ஏற்பட்டது. கிராமத்தை சேர்ந்த பலரும் எல்லையின் மறுபுறத்துக்கு இடம்பெயர்ந்தனர். “ஆனால் நாங்கள் செல்லவில்லை.எங்களின் முன்னோர்கள் செல்ல விரும்பவில்லை. அவர்கள் இதே நிலத்தில்தான் புதைக்கப்பட்டார்கள். இங்குதான் நாங்கள் வாழவும் சாகவும் விரும்புகிறோம்,” என்கிறார் லபானி. நிலத்துடனான இந்தத் தொடர்பும் இந்தத் தொடர்பை வைத்து நடக்கும் எல்லா விஷயங்களும் இந்த ஓவியரின் இளமைக்கால உணர்வுகளை வடிவமைத்தது.
ஓவியம் வரைவதற்கான ஊக்கம், தந்தையிடமிருந்து அவருக்குக் கிடைத்தது. குழந்தையாக இருக்கும்போது ஓவியப் பயிற்சியில் அவரை சில ஆண்டுகளுக்கு தந்தை அனுப்பினார். அவரின் தந்தைதான் கல்வி பெற்ற முதல் தலைமுறை ஆகும். 10 உடன்பிறந்தார்களில் அவர் மட்டும்தான் கல்வியறிவு பெற்றார். கள மட்டத்தில் பணியாற்றும் வழக்கறிஞரான அவர், விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்குமென கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கினார். ஆனால் அதிகம் பணம் பெறவில்லை. “அவருக்குக் கிடைத்த பணத்தை கொண்டு அவர் எனக்கு புத்தகம் வாங்கிக் கொடுப்பார்,” என்கிறார் லபானி. “மாஸ்கோ பதிப்பகம், ரதுகா பப்ளிஷர்ஸ் ஆகியவற்றிலிருந்து நிறைய குழந்தைகள் புத்தகங்கள் வரும். அவை வங்க மொழிபெயர்ப்புகளாக எங்களின் வீடுக்கு வந்தது. அப்புத்தகங்களில் இருந்த படங்கள் எனக்கு பிடித்தது. ஓவியத்துக்கான முதல் ஊக்கத்தை அங்கிருந்துதான் பெற்றேன்.”
இளம்வயதில் அவரது தந்தை அவருக்கு அறிமுகப்படுத்திய பயிற்சி வகுப்பு தொடரவில்லை. ஆனால் ஓவியத்தின் மீது அவர் கொண்டிருந்த பற்று, 2016ம் ஆண்டில் மொழி அவரைக் கைவிடத் தொடங்கியதும் மீண்டும் திரும்பியது. அரசின் அலட்சியத்தால் கும்பல் வன்முறை நாட்டில் அதிகரித்து வந்தது. சிறுபான்மையினர் மீதான வன்முறை திட்டமிட்டு வளர்க்கப்பட்டது. பெரும்பான்மையானோர் அந்த வெறுப்புக் குற்றங்களை பொருட்படுத்தவில்லை. கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்படிப்பு முடித்தபிறகு, நாட்டின் நிலவரத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டார் லபானி. எனினும் அவரால் அவற்றை பற்றி எழுத முடியவில்லை.
”ஓர் அசெளகரிய உணர்வு தீவிரமாக இருந்தது,” என்கிறார் அவர். “அந்த சமயம் வரை எழுத்தில் எனக்கு விருப்பம் இருந்தது. வங்க மொழியில் சில கட்டுரைகளை எழுதி பிரசுரித்திருக்கிறேன். சட்டென மொழி போதுமானதாக இல்லாமல் மாறியது. எல்லாவற்றிலும் இருந்து ஓடி விட விரும்பினேன். அப்போதுதான் நான் ஓவியம் வரையத் தொடங்கினேன். கடலை எல்லா தன்மைகளிலும் வரைந்திருக்கிறேன். வாட்டர் கலரில், எனக்கு கிடைக்கும் ஒவ்வொரு துண்டு பேப்பரிலும் வரைந்திருக்கிறேன். ஒன்றன் பின் ஒன்றாக நான் பல கடல் ஓவியங்களை (2016-17) காலக்கட்டத்தில் வரைந்தேன். சிரமம் நிறைந்த உலகின் ஓவியம்தான் எனக்கு அமைதியைக் கொடுத்தது.”
இன்று வரை லபானி, சொந்தமாக ஓவியம் கற்றுக் கொண்ட கலைஞராக திகழ்கிறார்.




























