டக்-டக்-டக்!
தாளம் மாறாத இந்த ஒலி, கொடவாட்டிப்புடியில் தார்பாயால் மூடப்பட்டிருக்கும் ஒரு குடிலில் இருந்து வருகிறது. செக்க சுத்தி எனப்படும், பானைகளை வட்டமாக வடிவமைக்க பயன்படும் துடுப்பு போன்ற மர சுத்தியால், முலம்பக பத்ரராஜு, ஒரு பானையை தட்டுவதால் ஏற்படும் ஒலி அது.
“பானையின் அடிப்பகுதியை வடிவமைக்க, தடிமனான செக்க சுத்தியும், அதனை சீராக்க, மற்ற பொதுவான சுத்திகளும் பயன்படுத்தப்படுகிறது. ஒல்லியான செக்க சுத்தி முழுப்பானையையும் சீரமைக்க பயன்படுத்தப்படுகிறது,” என தேவைக்கேற்ப சுத்தியலை மாற்றிக்கொண்டே 70 வயதான பத்ரராஜு நமக்கு விவரிக்கிறார். ஒல்லியான, வழக்கமான சுத்திகள், பனை மரக் (போராசஸ் ஃபிளாபெல்லிஃபர்) கிளைகளில் இருந்து செய்யப்படுவதாகவும், தடிமனானது, அர்ஜுன மரத்திலிருந்து (டெர்மினாலியா அர்ஜுனா) செய்யப்படுவதாகவும் அவர் கூறுகிறார். ஒல்லியான செக்க சுத்தியை எடுத்து அவர் அடிக்கும்போது, அதன் ஒலி மிகவும் குறைவாகவே கேட்கிறது.
20 அங்குல விட்டம் கொண்ட ஒரு பெரிய பானையை வடிவமைக்க அவருக்கு சுமார் 15 நிமிடம் ஆகிறது. வடிவமைக்கும்போது பக்கவாட்டில் உடைந்தால், உடனடியாக களிமண்ணை எடுத்து பூசி அதனை சரி செய்து, மீண்டும் பானையை தட்ட ஆரம்பிக்கிறார்.









