“என்ன ஓட்டு-கீட்டு! இருட்டுறதுக்கு முன்ன செய்றதுக்கு ஆயிரத்தோரு வேலை இருக்கு… இந்த நாத்தத்தை தாங்க முடிஞ்சா இங்க பக்கத்துல வந்து உட்காருங்க,” என்கிறார் மாலதி மால் அவருக்கருகே இருக்கும் இடத்தைக் காட்டி. வெயிலாலும் தூசாலும் பாதிக்கப்படாமல் மலையென குவிந்திருக்கும் வெங்காயங்களை சுற்றி அமர்ந்திருக்கும் பெண்களுடன் அமரத்தான் என்னை அவர் அழைக்கிறார். ஒரு வாரமாக இந்த ஊரில் இப்பெண்களுடன் இருந்துல், வரும் தேர்தல்கள் குறித்த அவர்களின் பார்வையைக் கேட்டு வருகிறேன்.
அது ஏப்ரல் மாதத் தொடக்கம். மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்திலுள்ள இப்பகுதியில் வெயில் அன்றாடம் 41 டிகிரி செல்சியஸை தொடும். மாலை 5 மணிக்குக் கூட, இந்த மால் பஹாரியா குடிசைப் பகுதியில் வெயில் கொளுத்துகிறது. சுற்றியிருக்கும் மரங்களில் ஓர் இலை கூட அசையவில்லை. வெங்காயங்களின் அடர்த்தியான மணம் காற்றில் மிதக்கிறது.
வெங்காய குவியலை சுற்றி அரைவட்டத்தில் பெண்கள் அமர்ந்திருக்கின்றனர். அவர்களின் வீடுகளிலிருந்து 50 மீட்டர் இடைவெளியில் இருக்கும் திறந்த வெளி அது. தண்டுகளிலிருந்து வெங்காயங்களை வெட்டி எடுப்பதில் மும்முரமாக இருந்தனர். பிற்பகலின் வெயிலில் கலந்திருக்கும் பச்சை வெங்காயங்களின் ஈரப்பதம், அவர்களின் முகங்களை கடும் உழைப்பின் ஒளியை ஊட்டுகிறது.
“இது எங்களின் சொந்த கிராமம் அல்ல. கடந்த ஏழு, எட்டு வருடங்களாக இங்கு நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம்,” என்கிறார் 60 வயதுகளில் இருக்கும் மாலதி. அவரும் குழுவிபிற பெண்களும், பட்டியல் பழங்குடி சமூகமான மால் பஹாரியா பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள். எளிதில் பாதிக்கப்படக் கூடிய பழங்குடி சமூகங்களில் அதுவும் ஒன்று.
“எங்கள் கிராமமான கோவாஸ் கலிகாபூரில், எங்களுக்கு வேலை இல்லை,” என்கிறார் அவர். முர்ஷிதாபாத் மாவட்டத்தின் ராணி நகர் ஒன்றாம் ஒன்றியத்தில் இருக்கும் கோவாஸை சேர்ந்த 30 குடும்பங்கள், பிஷுர்புகுர் கிராமத்தின் ஓரங்களில் குடிசைகள் போட்டு உள்ளூர் விவசாய நிலங்களில் வேலை பார்த்து வாழ்ந்து வருகின்றனர்.
மே 7ம் தேதி நடக்கவிருக்கும் வாக்கெடுப்புக்காக கிராமத்துக்கு செல்லவிருப்பதாக என்னிடம் கூறினார்கள். கோவாஸ் கலிகாபூர், பிஷுர்புகுர் குக்கிராமத்திலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.




























