வீட்டுக்குள் இருக்கும் நாற்காலியில் அமைதியாக அமர்ந்திருக்கும் கோமா ராமா ஹசாரே, கிராமத்தின் சாலையை வெறித்து பார்த்து நேரத்தைப் போக்கிக் கொண்டிருக்கிறார்.

அவ்வப்போது அந்தப் பக்கம் செல்பவர்கள், நின்று அவரை விசாரிக்கையில் அவர்களுடன் பேசுகிறார். அதிக நாட்கள் நீடித்திருந்த நோயால், அவரின் மனைவி ஒரு வாரத்துக்கு முன் இறந்திருந்தார்.

ஏப்ரல் மாதத்தின் (2024) ஒரு நாள். மாலை 5 மணி. வெயில் அதிகமாக இருந்தது. வடக்கு கட்சிரோலியின் அர்மோரி தாலுகாவிலுள்ள தேக்கு மற்றும் மூங்கில் காடுகளின் மடியில் இருக்கும் பலாஸ்காவோன் கிராமம் வழக்கத்துக்கு மாறாக அமைதியாக இருந்தது. இன்னும் சில நாட்களில் கட்சிரோலி-சிமூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. தற்போதைய பாஜக மக்களவை உறுப்பினரான அஷோக் நெடே மீண்டும் இத்தொகுதியில் போட்டியிடுகிறார். பெரிய எதிர்பார்ப்பு இல்லை. உண்மையில் கவலைதான் இருந்தது.

கடந்த இரண்டு மாதங்களாக, கோமாவுக்கு வேலை ஏதும் இல்லை. வழக்கமாக இந்த நேரத்தில் 60 வயதுகளின் தொடக்கத்தில் இருக்கும் நிலமற்ற தொழிலாளரான அவரைப் போன்றவர்கள் இலுப்பை அல்லது தெண்டு இலைகளை சேகரிப்பது அல்லது காட்டில் மூங்கில் வெட்டுவது விவசாயம் பார்ப்பது போன்ற வேலைகளை செய்வார்கள்.

“ஆனால் இந்த வருடம் செய்ய முடியாது,” என்கிறார் கோமா. “யார் பிரச்சினையை எதிர்கொள்வது?”

”மக்கள் வீடுகளுக்குள்ளே இருந்து கொள்கின்றனர்,” என்கிறார் கோமா. வெயில் அதிகமாக இருக்கும் நாட்கள். நீங்கள் வெளியே செல்ல முடியாது. கடந்த நாற்பது வருடங்களாக பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையிலான ஆயுத மோதலால் பாதிக்கப்பட்டிருப்பதால் கட்சிரோலி உள்ளிட்ட கிராமங்களுக்கு இத்தகைய ஊரடங்கு நிலை புதிதல்ல. ஆனால் இம்முறை புது விருந்தாளிகள் வாழ்க்கைக்கும் வாழ்வாதாரத்துக்கும் அச்சுறுத்தலை உருவாக்கி இருந்தது.

இளம் கன்றுகளும் பெண் யானைகளையும் கொண்ட 23 வன யானைகளின் மந்தை, பலாஸ்காவோனின் அருகில் முகாமிட்டிருக்கிறது.

PHOTO • Jaideep Hardikar
PHOTO • Jaideep Hardikar

மகாராஷ்டிராவின் பலாஸ்காவோனில் நிலமற்ற விவசாயியாக இருக்கும் கோமா ராமா ஹசாரே (இடது), கிராமத்தினருகே காட்டு யானைகள் முகாமிட்டிருப்பதால், தன் வாழ்வாதாரத்தை கைவிட வேண்டியிருந்தது. நாடாளுமன்றத்தில் வாக்களிப்பதைக் காட்டிலும் காட்டு யானைகளின் பயம்தான் கிராமவாசிகளுக்கு பிரதானமாக இருந்தது. அவரும் அவரின் குடும்பத்தினரும் தலா 25,000 ரூபாயை இலுப்பை மற்றும் தெண்டு இலைகளை சேகரிக்காததால் இரு மாதங்களில் இழந்திருக்கின்றனர்

PHOTO • Jaideep Hardikar
PHOTO • Jaideep Hardikar

இடது: பலாஸ்காவோனின் காலியான தெருவில் ஹசாரே நடக்கிறார். வலது: ஏப்ரல் மாத மத்தியில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் கிராமம் வெறிச்சோடி கிடக்கிறது. சில வீடுகளில் இலுப்பை பூக்கள் வெயிலில் காய வைக்கப்படுகின்றன. அருகாமை வயல்களிலிருந்து இந்தப் பூக்கள் சேகரிக்கப்படுகின்றன. வழக்கமாக வருடத்தின் இச்சமயத்தில் இலுப்பை மற்றும் தெண்டு இலைகள் கிராமத்தை நிறைத்திருக்கும். ஆனால் இப்போது இல்லை

வடக்கு சட்டீஸ்கரிலிருந்து வந்திருக்கும் யானை மந்தை ஒரு மாதத்துக்கும் மேலாக, இங்குள்ள நெற்பயிர்களையும் மூங்கில் காடுகளையும் புதர்களையும் மேய்ந்து வருகிறது. கிராமவாசிகளையும் வனத்துறை அதிகாரிகளையும் அச்சுறுத்தலுக்கு அவை ஆளாக்கியிருக்கின்றன. நான்கு வருடங்களுக்கு முன், சுரங்கப்பணிகளும் காடழிப்பும் வசிப்பிடங்களை பாதித்ததால் இந்த விலங்குகள் மகாராஷ்டிராவின் கிழக்கு விதர்பா பகுதியில் நுழைந்து வடக்கு நோக்கி நகர்ந்தன.

கோண்டியா, கட்சிரோலி மற்றும் சந்திரப்பூர் என மகாராஷ்டிராவின் மூன்று மாவட்டங்களிலும் சட்டீஸ்கரின் பஸ்தாரிலும் தண்டகாரண்யாவின் பிற பகுதிகளிலும், சட்டீஸ்கரின் பெரும் யானை மந்தையிலிருந்து பிரிந்ததாக வல்லுநர்கள் கருதும் இந்த மந்தை, சுற்றி திரிகிறது.

கட்சிரோலி மாவட்டத்தின் தெற்குப் பகுதிகளில் வனத்துறைக்கு போக்குவரத்து பணிகளில் உதவும் வகையில் சில பயிற்சி பெற்ற யானைகள் இருக்கின்றன. மகாராஷ்டிராவின் கிழக்கு பகுதிகளில் ஒன்றரை நூற்றாண்டுகளாக காட்டு யானைகள் திரும்பி வரும் சம்பவங்கள் நடக்கிறது. காட்டு யானைகள் மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படுவது இயல்பு.

வனத்துறையினர், பழங்குடி குடும்பங்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பலாஸ்காவோனின் கிராமத்தினரை, யானைகள் வேறிடத்துக்கு இடம்பெயரும் வரை வீட்டிலேயே இருக்கும்படி கேட்டிருக்கின்றனர். எனவே 1400 பேர் வசிக்கும் (கணக்கெடுப்பு 2011) அக்கிராமத்தின் நிலமற்ற மக்களும் சிறு விவசாயிகளும் பக்கத்து கிராமத்தினரும் காடு சார் வாழ்வாதாரத்தை கைவிட வேண்டியிருந்தது.

பயிர் நஷ்டத்துக்கு மாநில வனத்துறை நிவாரணம் வழங்குகிறது. ஆனால் வருமான இழப்புக்கு நிவாரணம் கிடையாது.

“மொத்த கோடைகாலத்துக்கும் என் குடும்பம் இலுப்பை மற்றும் தெண்டு இலைகளை நம்பி இருக்கிறது,” என்கிறார் கோமா.

வருமான ஆதாரம் இல்லாமல், பலாஸ்காவோன் கிராமம் காட்டு யானைகள் வெளியேற காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை.

PHOTO • Jaideep Hardikar
PHOTO • Jaideep Hardikar

இடது: வனத்துறை அதிகாரிகள் பலாஸ்காவோனில் வசிப்பவர்களை யானைகல் வேறு இடத்துக்கு புலம்பெயரும் வரை காத்திருக்கும்படி கேட்டிருக்கின்றனர்

“கடந்த கோடைகளில் நேர்ந்தது போல மந்தை இம்முறை சட்டீஸ்கரை கடந்து போகவில்லை,” என்கிறார் கட்சிரோலியின் தலைமை வனப் பாதுகாவலரான எஸ்.ரமேஷ் குமார். “பெண் யானை ஒன்று சில நாட்களுக்கு முன் கன்று ஈன்றதும் காரணமாக இருக்கலாம்.”

சில கன்றுகள் மந்தையில் இருக்கின்றன என்கிறார் அவர். யானைகள் தாய் வழி சமூகத்தைக் கொண்டவை.

கடந்த வருடத்தில் (2023), பலாஸ்காவோனிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கோந்தியா மாவட்ட அர்ஜுனி மோர்காவோனின்  நங்கால் - தோ குக்கிராமத்தின் 11 வீடுகளை இதே மந்தை நிர்மூலமாக்கியது. அங்கு சில மாதங்களுக்கு அவை தங்கியிருந்தன.

“அந்த இரவில் ஒரு குடிசை கூட யானைகளிடமிருந்து தப்பிக்கவில்லை,” என நினைவுகூருகிறார் விஜய் மாடவி. பர்னோலி கிராமத்தருகே இருக்கும் நிலத்தில் வசிக்கும் மக்களில் ஒருவர் அவர். “நள்ளிரவில் அவை ஊருக்குள் புகுந்தன,” என நினைவுகூருகிறார்.

நங்கால் தோ கிராமம் அந்த இரவே காலி செய்யப்பட்டது. மக்கள் பர்னோலியில் இருந்த பள்ளிக்கு சென்றனர். 2023ம் ஆண்டின் கோடைக்காலம் வரை அங்கு அவர்கள் தங்கியிருந்தனர். பள்ளி தொடங்கியதும், கிராமத்துக்கு வெளியே இருக்கும் காட்டின் ஒரு பகுதியை திருத்தி மின்சாரம், நீர் ஏதுமில்லாமல் குடிசைகள் அமைத்து வசித்தனர். கிணற்றில் தண்ணீர் எடுக்க பெண்கள் சில மைல்கள் நடக்க வேண்டிஉம். ஆனால், புதர்க்காடுகளை அழித்து உருவாக்கியிருந்த விவசாய நிலங்களை கிராமவாசிகள் இழந்துவிட்டனர்.

“எங்களுக்கென சொந்தமாக ஒரு வீடு எப்போது கிடைக்கும்?” எனக் கேட்கிறார் உஷா ஹோலி. நிவாரணமும் நிரந்தர வீடும் எதிர்பார்த்து காத்திருப்பவர்களில் அவரும் ஒருவர்.

யானைகள் புலம்பெயரும் இந்த மூன்று மாவட்டங்களில் பயிரிழப்பு பிரச்சினையில் விவசாயிகள் உழலுகின்றனர். அதற்கு முன் அத்தகைய பிரச்சினை அவர்களுக்கு இருந்ததில்லை.

PHOTO • Jaideep Hardikar
PHOTO • Jaideep Hardikar

கோந்தியா மாவட்டத்தின் அர்ஜுனி மோர்காவோன் தாலுகாவிலுள்ள நங்கால் தோ கிராமத்தின் வீடுகள் எல்லாவற்றையும் காட்டு யானைகள் கடந்த கோடையில் (2023) அழித்து விட்டன. 11 குடும்பங்களும் பக்கத்து கிராமமான பர்னோலிக்கு அருகே இருக்கும் காட்டு நிலத்தில் குடிசைகள் போட்டு வசிக்கின்றனர். நிவாரணத்துக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்

தெற்கிலுள்ளதை போலல்லாமல் வடக்கு கட்சிரோலி பகுதி அதிக மக்கள்தொகையைக் கொண்டிருப்பதால் காட்டு யானைகளை சமாளிப்பது சிரமமெனக் கூறுகிறார் ரமேஷ் குமார். பயிர் சேதம்தான் பெரிய பிரச்சினை. மாலை நேரங்களில் யானைகள் வெளியே வந்து, நின்று கொண்டிருக்கும் பயிரை சிதைக்கும்.

மந்தைகளை பின்தொடர்ந்து எச்சரிக்கைகளை அளிப்பதற்கென வனத்துறை அதிகாரிகள் ஒரு குழுவை கொண்டிருக்கின்றனர். ட்ரோன் மற்றும் தெர்மல் இமேஜிங் போன்ற தொழில்நுட்பங்களை அக்குழு கொண்டிருக்கிறது. யானைகள் நகர்வு தென்படுகையில் கிராமவாசிகளை அக்குழுவினர் எச்சரிப்பார்கள்.

ஏழு ஏக்கர் நிலத்தை பலஸ்காவோனில் வைத்திருக்கும் விவசாயியான நிதின் மனே, இரவு ரோந்து செல்லும் குழுவுடன் மாலையில் இணைகிறார். வன அதிகாரியான யோகேஷ் பண்டாரம் தலைமையில் அவர் யானைகளின் நகர்வை கண்காணித்து காடுகளில் செல்கிறார். ஹுல்லா குழுக்கள் என அழைக்கப்படும் இக்குழு, காட்டு யானைகளை கையாளக் கூடிய வல்லுநர்களை கொண்டது. மேற்கு வங்கத்திலிருந்து பணிக்கமர்த்தப்பட்ட இவர்கள், உள்ளூர் அதிகாரிகளுக்கு உதவுவார்கள். கிராமத்து இளைஞர்கள் யானைகளை கண்காணிக்கும் பயிற்சியும் கொடுப்பார்கள். இரண்டு ட்ரோன்களை அவர்கள் கண்காணிப்புக்கு பயன்படுத்துவதாக நிதின் கூறுகிறார். யானைகள் இருக்கும் இடம் தெரிந்ததும் அதை சுற்றி நடந்து செல்வார்கள்.

”யானைகள் கிராமத்துக்குள் நுழைய முயற்சித்தால், அதை தடுக்கும் வண்ணம் ஹுல்லா குழுவில் சில கிராமவாசிகளும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்,” என்கிறார் பலாஸ்காவோனின் முதல் ஊர்த் தலைவரான மனா ஆதிவாசி ஜெயஸ்ரீ தத்மால். “ஆனால் அது என் தலைவலி ஆகிவிட்டது. யானைகளை பற்றி என்னிடம் மக்கள் புகார் செய்து, கோபத்தை என்னிடம் காட்டுகிறார்கள்,” என்கிறார் அவர். “யானைகள் வருவதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?”

PHOTO • Jaideep Hardikar
PHOTO • Jaideep Hardikar

இடது: பலஸ்காவோனின் இளம் விவசாயியான நிதின் மனே, யானைகளை ட்ரோன்களின் துணையுடன் கண்காணிக்கும் ஹுல்லா குழுவில் வனத்துறையால் சேர்க்கப்பட்டிருக்கிறார். யானைகள் கிராமத்துக்குள் நுழைய முயன்றால் அவர்கள் விரட்டுவார்கள். வலது: வனத்துறை அதிகாரிகள் சிலரும் ஹுல்லா குழு உறுப்பினர்களும் இரவு ரோந்துக்கு தயாராகின்றனர்

PHOTO • Jaideep Hardikar
PHOTO • Jaideep Hardikar

பலஸ்காவோனின் தலைவரான ஜெயஸ்ரீ தத்மால், தன் நிலத்திலிருந்து ஒரு கூடை இலுப்பைப் பூக்களை கொண்டு வருகிறார். ஆனால் யானைகளின் அச்சுறுத்தலால் அவர் காட்டுக்குள் செல்ல முடியவில்லை

பலஸ்காவோன் கிராமத்தில் இயல்புநிலை திரும்பினாலும் பக்கத்து கிராமங்களில் யானைகள் செல்லும் வாய்ப்பு இருக்கும். இப்பகுதி மக்கள் காட்டு யானைகளுடன் வாழும் வாழ்க்கைக்கு பழகிக் கொள்ள வேண்டும் என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள்.

இந்த வருடம் காட்டுக்கு சென்று இலுப்பைப் பூக்கள் சேகரிப்பதை கைவிட்டிருக்கும் ஜெயஸ்ரீ கிராமவாசிகளுக்கு இரங்குகிறார். “யானைகளினால் தெண்டு இலைகளை நாங்கள் சேகரிக்க முடியாமல் போகலாம்,” என்கிறார் அவர். ஒவ்வொரு குடும்பமும் இரண்டு மாதங்களில் குறைந்தபட்சம் 25,000 ரூபாயை இழக்கும் என்கிறார் அவர்.

“விலைவாசி உயர்வு ஏற்கனவே பிரச்சினை. இப்போது யானைகளும் சேர்ந்திருக்கின்றன. என்ன செய்வது?” என்கிறார் கோமா.

எளிய விடைகள் இல்லை. கேள்விகள்தான் அதிகமாக இருக்கின்றன.

அவற்றில் முக்கியமானது யார் நாடாளுமன்றத்துக்குள் நுழையப் போகிறார் என்பதல்ல, எப்போது காட்டை விட்டு யானைகள் வெளியேறும் என்பதுதான்.

(கட்சிரோலி-சிமூர் மக்களவை தொகுதி, ஒரு தனித்தொகுதி ஆகும். முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்த ஏப்ரல் 19 அன்று 71.88 சதவிகிதம் வாக்கு பதிவு நடந்திருக்கிறது).

தமிழில் : ராஜசங்கீதன்

Jaideep Hardikar

जयदीप हर्डीकर नागपूर स्थित पत्रकार आणि लेखक आहेत. तसंच ते पारीच्या गाभा गटाचे सदस्य आहेत.

यांचे इतर लिखाण जयदीप हर्डीकर
Editor : Medha Kale

मेधा काळे यांना स्त्रिया आणि आरोग्याच्या क्षेत्रात कामाचा अनुभव आहे. कुणाच्या गणतीत नसणाऱ्या लोकांची आयुष्यं आणि कहाण्या हा त्यांचा जिव्हाळ्याचा विषय आहे.

यांचे इतर लिखाण मेधा काळे
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

यांचे इतर लिखाण Rajasangeethan