கொஞ்சம் மந்தமான வெள்ளை நிறத்தில் இருக்கும் மல்லிகை மொட்டு, நகக்கணு அளவே உள்ள மலர். மல்லிகைத் தோட்டத்தில், இங்கொன்றும், அங்கொன்றுமாக மலர்ந்திருக்கும் மல்லிகை மலர்களின் வாசனை நம் நாசியைத் துளைக்கிறது. மல்லிகை மலர் ஒரு அரிய பரிசு. மேகங்கள் சூழ் வானின் கீழ், புழுதிபடிந்த மண்ணில் நிற்கும் செடியில் விளையும் அற்புதம்.

ஆனால், மல்லிகை மலர்த்தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கோ அந்த நறுமணத்தை நின்று ரசிக்க நேரமில்லை. மல்லிகை மொட்டுக்களைப் பறித்து, அவை மலரும் முன்பே , பூக்கடைகளுக்கு அனுப்பி விட வேண்டும். விநாயக சதுர்த்திக்கு இன்னும் நாலு நாட்களே இருக்கின்றன. மார்க்கெட்டில் நல்ல ரேட் கிடைக்கும்.

வேலையாட்கள், கட்டை விரலையும், ஆட்காட்டி விரலையும் உபயோகித்து மல்லிகை மொட்டுக்களை விரைந்து கிள்ளிப் பறிக்கிறார்கள். கைப்பிடியளவு மொட்டுக்கள் சேர்ந்ததும், அவற்றை தம் மடியில் போடுகிறார்கள். விரைவாகப் பறித்து முன்செல்லும் அவர்கள் பணியில் ஒரு லயம் இருக்கிறது. மூன்று வயதுக்குழந்தையின் உயரமே இருக்கும் செடிகளின் கிளைகளை விலக்கி, மொட்டுக்களை மிக லாவகமாகப் பறிக்கிறார்கள். கைகள் வேலை செய்கையில், வாய்கள் பேசிக் கொள்கின்றன. ரேடியோவில் தமிழ்ச் சினிமாப் பாடல்கள் ஒலிக்கின்றன. கீழ் வானில் சூரியன் மெல்ல மேலெழுந்து வருகிறான்..

விரைவில் இந்தப் பூக்கள் மதுரையின் மாட்டுத்தாவணி மார்க்கெட்டைச் சென்றடையும். அங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அவை பயணிக்கவிருக்கின்றன.

திருமங்கலம், உசிலபட்டி தாலூக்காவின் மல்லிகைப் பண்ணைகளுக்கு 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் ’பாரி’யின் சார்பில் பயணித்தோம். இந்தப் பண்ணைகள் மதுரை நகரில் இருந்து ஒரு மணிநேரப் பயண தூரத்தில் உள்ளவை. மீனாட்சி அம்மன் வசிக்கும் பரபரப்பான மதுரை பூ மார்க்கெட்டில், மல்லிகை சிறு கூறுகளாக விற்கப்படுகிறது.

PHOTO • M. Palani Kumar

திருமங்கலம் தாலூக்கா மேல உப்பிலிகுண்டு குக்கிராமத்தில், தன் பண்ணையின் நடுவே நின்று கொண்டிருக்கிறார் கணபதி. மல்லிகை அறுவடை சீஸன் முடிந்து இப்போது ஒரு நாளைக்கு ஒரு கிலோ மட்டுமே கிடைக்கிறது

PHOTO • M. Palani Kumar

புகைப்படம்: கையளவு மல்லி

உசிலம்பட்டி, மேல உப்பிலிகுண்டு கிராமத்தைச் சேர்ந்த 51 வயதான  பி.கணபதி, மல்லிகையைப் பற்றிய முழுமையான ஒரு சித்திரத்தை எனக்குச் சொல்கிறார். “இந்த ஏரியா மல்லி, அத்தோட மணத்துக்குப் பேர் போனது.. வீட்டுல ஒரு அரைக் கிலோ மல்லிகைப் பூவ வச்சீங்கன்னா, ஒரு வாரத்துக்கு அதோட வாசம் இருக்கும்!”

பாக்கெட்டில் இருக்கும் ரூபாய் நோட்டுக்கள் தெரியுமளவுக்குச் சுத்தமான வெள்ளைச் சட்டையணிந்திருக்கிறார். கீழே, நீல நிற லுங்கி. வேகமான மதுரைத் தமிழும், வெள்ளந்திச் சிரிப்பும் அவரிடம் இருந்து வெளிப்படுகின்றன. “ஒரு வருஷம் வரைக்கும் மல்லிச் செடி பச்சக் கொழந்த மாதிரி. அதை சரியா பராமரிக்கணும்” அவரிடம் இருக்கும் 2.5 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியில் மல்லிகை பயிரிட்டிருக்கிறார்.

மல்லிகைச் செடி, நட்ட ஆறாவது மாதம் பூக்கத் தொடங்குகிறது. ஆனால், தொடக்கத்தில் பூப்பது சீராக இருப்பதில்லை. மார்க்கெட்டில் மல்லிகை விலையைப் போலவே மகசூலும் மேலும் கீழும் செல்கிறது.  சில சமயம், ஏக்கருக்கு 1 கிலோ பூதான் கிடைக்கும். சில வாரங்களுக்குப் பின்னர், மகசூல் 50 கிலோ வரையில் உயர்கிறது. “கல்யாண சீசன், பண்டிகைக் காலத்துல நல்ல விலை கிடைக்கும். கிலோ, ஆயிரம் முதல் ஆயிரத்து முன்னூறு வரை கூடப் போகும். ஆனா, மகசூல் அதிகமாச்சினா, சீசனா இருந்தாக் கூட விலை கொறஞ்சிரும்.” விவசாயத்தில், நல்ல விலை கிடைப்பது நிச்சயமில்லை. ஆனா, செலவு மட்டும் நிச்சயம்.

மல்லிகை பறிப்பது சுலபமான வேலையல்ல. கணபதியும், அவர் வீட்டுக்காரம்மாவும் அதிகாலை ஆரம்பிச்சி, 8 கிலோ வரைக்கும் பறிச்சிருவாங்க. “ஆனா முதுகு ஒடிஞ்சிரும்… அப்படி வலிக்கும்.” ஆனால், இதை விட அவருக்குத் துயரம் தருவது உரம், டீசல், கூலி – இவற்றின் விலை உயர்ந்து கொண்டே செல்வதுதான். “இப்படி விலையேறிச்சினா, எங்களுக்கு எப்படி லாபம் கிடைக்கும்?” செப்டெம்பர் 2021 ல் கணபதி சொன்னது.

மல்லிகை தமிழ்நாட்டின் வீதிகளில் மிகவும் சாதாரணமாகக் காணக்கிடைக்கும் பூ. தமிழ்க் கலாச்சாரத்தின் அடையாளம். மல்லிகை என்றாலே மதுரை நகரும், இட்லியும் நினைவுக்கு வரும். ‘மல்லிப்பூ மாதிரி இட்லி’, என்பது வெண்மையான மெத்து மெத்தென்ற இட்லியைக் குறிக்கும். கோவில்களில், சந்தைகளில், கூட்டத்தில், பேருந்தில், படுக்கையறையில் என எங்கும் நிறைந்திருக்கும் மல்லிகையைப் பயிர் செய்வது சுலபமல்ல.

*****

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

கணபதியின் தோட்டத்தில் மல்லிகை நாற்றுகளும், மொட்டுக்களும் (வலது)

PHOTO • M. Palani Kumar

மல்லிகைத் தோட்டத்தை, பணியாட்களுடன் சேர்ந்து சுத்தம் செய்கிறார் பிச்சியம்மா

2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், இரண்டாம் முறை நாங்கள் கணபதியின் தோட்டத்துக்குச் சென்ற போது, இன்னும் ஒரு ஏக்கர் மல்லிகை நட்டிருந்தார். ஒரு ஏக்கரில் 9000 மல்லிகைச் செடிகள்.  இராமேஸ்வர மாவட்டம் தங்கச்சி மடம் என்னும் ஊரில் இருந்து நாற்றுக்களை வாங்கி வந்திருந்தார். ஒரு கைமுழம் அளவு நாற்றின் விலை நான்கு ரூபாய். கணபதியே நேரில் சென்று நல்ல நாற்றுக்களாகப் பார்த்து வங்கி வந்திருந்தார். “நல்ல செம்மண்ணா இருந்தா, நாலடிக்கு நாலடி இடைவெளி விட்டு நடலாம். செடி நல்லா பெரிசா வளரும்... ஆனா இங்க மண்ணு களிமண்ணு. சரியில்லை. செங்கல் சூளைக்குத்தான் சரி வரும்,” என்கிறார்.

ஒரு ஏக்கரில் மல்லிகை பயிரிட, கணபதி 50 ஆயிரம் வரை செலவு செய்கிறார். “முறையாச் செய்யனும்னா, செலவாகத்தான் செய்யும்,” என்பது அவரது கருத்து. கோடைக்காலத்தில், மொத்த தோட்டமும் பூத்துக் குலுங்கும். “பளிச்சினு பூத்திருக்கும்,” என அவர் மொழியில் சொல்கிறார்.  ஒரு நாள் பத்துக் கிலோ பூப்பறித்த கதையை மகிழ்ச்சியுடன் சொல்கிறார்.  சில செடிகள்ல 100-200 கிராம் வரைப் பூ கிடைத்ததைச் சொல்கையில், அவர் கண்கள் மலர்ந்து, குரலில் மகிழ்ச்சி தெறிக்கிறது. மீண்டும் அது போன்ற மகசூல் கிடைக்கும் என்னும் நம்பிக்கையும் தெரிகிறது.

கணபதியின் நாள், காலை விடிகையில் தொடங்குகிறது. அந்தக்காலத்துல இன்னும் 1-2 மணி நேரம் முன்னாடியே வேல ஆரம்பிக்கும். “இப்பெல்லாம் கூலியாட்கள் லேட்டா வர்றாங்க,” என்கிறார். பூப்பறிக்க கூலியாட்களை அமர்த்தியிருக்கிறார். கூலி மணிக்கு 50 ரூபாய் அல்லது ஒரு டப்பாவுக்கு 35-50 வரை தருகிறார்.  ஒரு டப்பாவில் கிட்டத்தட்ட ஒரு கிலோ அளவு என்பது அவர் கணக்கு.

ஒரு வருடம் முன்பு நாங்கள் வந்த போது இருந்த விலையை விட, மல்லிகையின் விலை உயர்ந்திருக்கிறது. குறைந்த பட்ச விலை என்பதை, ‘செண்ட்’ தொழிற்சாலைகள் தீர்மானிக்கின்றன.  இத்தொழிற்சாலைகள், மல்லிகை உற்பத்தி அதிகமாகி, விலை வீழ்ச்சி ஏற்படுகையில், பூக்களைக் கொள்முதல் செய்கின்றன. இவர்களின் கொள்முதல் விலை கிலோ 120 முதல் 220 வரை இருக்கிறது.   மல்லிகைக்கு 200 ரூபாய் கிலோவுக்குக் கிடைத்தால் நஷ்டம் வராது என்கிறார் கணபதி

மல்லிகை உற்பத்தி குறைந்து, டிமாண்ட் இருக்கும்போது, 1 கிலோ மல்லிகைக்கு பல மடங்கு அதிக விலை கிடைக்கும். பண்டிகை நாட்களில், கிலோ 1000 ரூபாய்க்கு மேல் விலை செல்கிறது, துரதிருஷ்டவசமாக மல்லிகைச் செடிக்கு, ‘முகூர்த்த நாள், கரிநாள்’, வேறுபாடுகள்  தெரிவதில்லை.

அவை இயற்கையின் விதிகளைப் பின்பற்றுகின்றன. நல்ல வெயில் அடித்து மழை பெய்தால், பூமியில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. “எங்க திரும்பினாலும் மல்லிப்பூதான்… பூக்காதேன்னும் செடிய புடிச்சு நிறுத்த முடியுமா?”, எனச் சிரித்துக் கொண்டே கேட்கிறார் கணபதி.

PHOTO • M. Palani Kumar

சுவையான கொய்யாக்காயைப் பறித்து சாப்பிடத் தருகிறார் கணபதி

பூவாட்டம் மழை பெஞ்சுதின்னா, மார்க்கெட் முழுசும் மல்லிப்பூவா இருக்கும். “டன் கணக்குல மல்லிப்பூ மார்க்கெட்டுக்கு வந்துரும். 5 டன், 6 டன், 7 டன்னுன்னு.. ஒரு நாளு 10 டன் கூட மல்லிப்பூ வந்துச்சி!” முக்காவாசி சென்ட் ஃபேக்டரிக்குத்தான் போச்சி என விளக்குகிறார்.

மாலை செய்யறதுக்கும் சரம் தொடுக்கறதுக்கும், கிலோ 300 ரூபாய், அதுக்கு மேலேன்னு குடுத்து வாங்குவாங்க. “ஆனா, சீஸன் முடிஞ்சு, வரத்து குறைஞ்சி போச்சின்னா, விலை அதிகமாயிரும்.. அதிக டிமாண்ட் இருக்கறப்ப, 10 கிலோ கெடச்சிதுன்னாக் கூடப் போதும், ஒரு நாளைக்கு 15 ஆயிரம் சம்பாதிச்சிருவேன். அது ரொம்ப நல்ல வருமானம்தானே?” என ஏக்கத்துடன் சிரிக்கிறார். “அப்பறம் சேர் போட்டு ஒக்காந்துகிட்டு, நல்ல சாப்பாடு சாப்பிட்டுட்டு, உங்களுக்கு பேட்டி கூடக் கொடுப்பேன்,” என மேலும் சிரிக்கிறார்.

ஆனால், உண்மை என்னவெனில், அவரால் அப்படிச் செய்ய முடியாது. அவரது மனைவியாலும். ஏனெனில், இந்தப் பயிர் செய்வதில், அத்தனை வேலை இருக்கிறது.  மண்ணை நல்லாத் தயார் செய்து, செடியைப் பூக்க வைப்பதே பெரும்பணி. தன்னிடம் மீதமுள்ள 1.5 ஏக்கரில், கொய்யா பயிர் செய்கிறார் கணபதி. “இன்னிக்குக் காலைல, 50 கிலோ காய மார்க்கெட்டுக்குக் கொண்டு போனேன். கிலோ 20 ரூபாய்னு போச்சு. டீசல் செலவு போக, 800 ரூவா மிஞ்சுச்சு. இந்த ஏரியாவுல கொய்யா அதிகம் இல்லாதப்ப, வியாபாரிகள் தோட்டத்துக்கே வந்து கிலோ 25 ரூவான்னு வாங்கிகிட்டுப் போனாங்க.. அந்தக் காலமெல்லாம் போச்சு..”

ஒரு ஏக்கரில் மல்லிகை பயிர் செய்ய கணபதி, நாற்று வாங்குதல், தோட்டத்தைத் தயார் செய்தல் என கிட்டத்தட்ட 1 லட்ச ரூபாய் முதலீடு செய்கிறார்.  ஒவ்வொரு வருஷமும், மல்லிகை சீசன், மார்ச் முதல் நவம்பர் வரை என 8 மாதங்கள் வரை நீடிக்கிறது.  இந்தக் காலத்தில், நல்ல நாள், ரொம்ப நல்ல நாள்னு அறுவடை இருந்தாலும், சில நாட்களில் பூக்களே பூக்காத நாட்களும் உண்டு என்கிறார்.  சீசனில், மாதம் மொத்த வருவாய், ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை வரும் என்கிறார்.

அது அவர் உண்மையான நிலையை விடக் கூடுதல் செழிப்பாக இருப்பது போலக் காட்டுகிறது. எல்லா விவசாயிகளையும் போல, இந்தக் கணக்கில், அவர் மற்றும் அவருடைய மனைவியின் உழைப்புக்கான ஊதியத்தை சேர்ப்பதில்லை. அதைக் கணக்கிட்டு, வருமானத்தில் இருந்து கழித்தால், மாத லாபம் 6000 ஆகக் குறைந்து விடும்.

“அது கெடைச்சாலே பெரிய அதிர்ஷ்டம்,” எனச் சுட்டிக் காட்டுகிறார். அவரது மோட்டார் ரூமைச் சென்று பார்க்கும் போது, அதிர்ஷடத்துடன், சில வேதிப்பொருள்களும் காரணமாக இருப்பதை உணர முடிந்தது.

*****

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

கணபதியின் தோட்டத்தின் மோட்டார் ரூம். தரையெங்கும் (வலது) காலி பூச்சி மருந்து பாட்டில்கள்

மோட்டார் ரூம் ஒரு சிறிய இடம். அவரது நாய்கள் அங்கே பகலில் தூங்குகின்றன. மூலையில் சில கோழிகளும் உள்ளன. உள்ளே நுழைந்ததும், அங்கே ஒரு கோழி முட்டையிட்டிருப்பதைப் பார்த்தோம். சிரித்துக் கொண்டே அந்த முட்டையை எடுத்துப் பத்திரமாக உள்ளங்கையில் வைத்துக் கொள்கிறார் கணபதி.  தரை முழுவதும் காலி பூச்சி மருந்து பாட்டில்கள்.  இதெல்லாம் அடிச்சாத்தான் செடி, நல்ல ஸ்ட்ராங்கா, “பளிச்”சினு மொட்டு விடும்னு நமக்கு விளக்குகிறார்.

கீழே கிடக்கும் பாட்டில்களைக் காட்டி, ”இதுக்கு இங்க்லீஸ்ல என்ன பேரு?,” எனக் கேட்கிறார்.  நான் ஒவ்வொன்றாகப் படிக்கிறேன். “இது சிவப்புப் பேனைக் கொல்றது. இன்னொன்னு புழுவுக்கு.. இங்க இருக்கறது எல்லாப் பூச்சிகளையும் கொல்றது... மல்லிச் செடிக்கு நெறயப் பூச்சிக வரும்,” என வருந்துகிறார்.

கணபதியின் மகன் தான் கணபதிக்கு ஆலோசகர். “அவன் பூச்சி மருந்துக் கடைல வேல பாக்கறான்,” என விளக்குகிறார். சுட்டெரிக்கும் சூரியனைத் தாங்கிக் கொண்டு நடக்குறோம். ஒரு குட்டி நாய், ஈர மண்ணில் புரண்டு ஓடுகிறது. அதன் உடல் மென் சிவப்பு நிறமாக மாறுகிறது.  ஷெட் அருகில் இன்னொரு நாய் சுற்றிக் கொண்டிருக்கிறது. “இவங்க பேர் என்ன,” எனக் கேட்கிறேன்.  “கருப்புன்னு சத்தம் போடுவேன்.. ஓடியாரும்,” எனச் சிரிக்கிறார். ஆனால், நாய்கள் கறுப்பு நிறமல்ல எனச் சுட்டுகிறேன்.

“கூப்டா வரும், அவ்ளதான்,” எனச் சிரித்துக்கொண்டே, இன்னொரு பெரும் ஷெட்டுக்குள் நுழைகிறார். உள்ளே தேங்காய்கள் குவியலாகக் கிடக்கின்றன. ரொம்பப் பழுத்துப் போன கொய்யாப் பழங்கள் ஒரு பக்கெட்டில் கிடக்கின்றன. ”அத மாடு சாப்டுரும்.. இப்ப தோட்டத்துல மேயப் போயிருக்கு.” வெளியே சில நாட்டுக்கோழிகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன.

அடுத்து உரங்களைக் காண்பிக்கிறார். கடையில் 800 ரூபாய்க்கு வாங்கிய மண் பதப்படுத்தும் இடுபொருள், சல்ஃபர் குருணைகள் மற்றும் கொஞ்சம் இயற்கை உரம்.  “இந்தக் கார்த்திகை மாசம் (நவம்பர் 15 முதல் டிசம்பர் 15 வரை) நல்ல மகசூல் வரணும். அப்ப நல்ல ரேட்டும் கிடைக்கும். ஏன்னா, அது கல்யாண சீசன்.  ‘நல்ல மகசூல் வேணும்னா, நாம செடிய மதிக்கனும்,’” என்கிறார் ஷெட்டின் கல்தூணில் சாய்ந்து கொண்டு.

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

கணபதியும், அவரது நாய்களும் (இரண்டுக்குமே பெயர் கருப்பு) வலது: தானியத்தைக் கொத்தும் கோழி

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இடது: உரம்  வலது: பூச்சிகள் மல்லிகைச் செடியில் ஏற்படுத்திய சேதத்தைக் காட்டுகிறார் கணபதி

கணபதி ஒரு தேர்ந்த கதை சொல்லி. அவரைப் பொருத்தவரையில், அவரது தோட்டம் ஒரு தியேட்டர் மாதிரி. தினமும் ஏதாவது ட்ராமா  இருக்கும். ”நேத்தி நைட் 9:45 க்கு அந்தப் பக்கம் இருந்தது 4 பன்னிகள் வந்திருச்சி. கொய்யாப்பழ வாசம் புடிச்சி...  கருப்பு இங்கிருந்தான். மூணு பன்னிகளத் தொரத்திட்டான்.. இன்னொன்னு அந்தப் பக்கமா ஓடிருச்சு,” எனக்  மெயின் ரோடை நோக்கிக் கைகாட்டுகிறார். “என்ன பண்றது? முன்னாடி நரியெல்லாம் இருந்துச்சி.. இப்ப எதுவும் இல்ல.”

பூச்சிகளும் பன்றிகளைப் போலவே பெரும் பிரச்சினை என்னும் கணபதி, பூச்சிகள் எவ்வளவு விரைவாகவும் தீவிரமாகவும் மல்லிகை மொட்டுக்களைத் தாக்கிச் சேதப்படுத்துகின்றன என்பதை விளக்கிச் சொல்கிறார். அடுத்து மல்லிகைச் செடிகள் நடப்படும் விதத்தை காற்றில் நமக்கு வரைந்து விளக்க முயல்கிறார்.  ”மதுரை மல்லிகையின் மணம்தான் சிறந்தது,” என ஆணித்தரமாகச் சொல்கிறார்

நான் ஒத்துக் கொண்டேன். அதன் மயக்கும் மணம் – ஒரு வரம்தான். அவரது தோட்டக்கிணற்றை, பழுப்பு நிற மண்ணை மிதித்துக் கொண்டு சுற்றி வருவது ஒரு கௌரவமாகத் தோன்றுகிறது. கணபதி விவசாயம் பற்றிய ஆழ்ந்த அறிவு கொண்டவராகப் பேசுகிறார்.  தன் மனைவியை மிக மரியாதையுடன் குறிப்பிடுகிறார். ”நாங்க பெரும் பண்ணையாருங்க இல்ல.. சின்ன சம்சாரிகதான்.. அதனால, திண்ணைல ஒக்காந்துகிட்டு வேலையாள்கள அதிகாரம் பண்ணிகிட்டு இருக்க முடியாது. எங்க வீட்டுக்காரம்மாவும் கூலியாள்களோட வேல செய்வாங்க.. அப்பதான் சமாளிக்க முடியும்.”

*****

2000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மண்ணில் தப்பிப் பிழைத்திருக்கும் மல்லிகைக்கு ஒரு அசாதாரணமான வரலாற்றுப் பின்னணி இருக்கிறது. நார்களில் பின்னப்பட்டு, அழகான மாலையாக மாற்றப்படும் மல்லிகையும் அதன் மணமும், தமிழ்க்கலாச்சாரத்துடன் பின்னிப் பினைந்தவை.  சங்க காலத்தில் முல்லை என அழைக்கப்பட்ட மல்லிகை, சங்கப்பாடல்களில் நூறு முறைக்கும் மேலாக இடம்பெற்றுள்ளது என்கிறார் வைதேஹி ஹெர்பெர்ட். ஹவாயில் வசிக்கும்இவர் சங்கத்தமிழ் அறிஞரும் மொழிபெயர்ப்பாளருமாவார்.  கி.மு 300 முதல் கி.பி 250 வரையிலான காலகட்டங்களில் எழுதப்பட்ட சங்க நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அவற்றை இணையத்தில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

இன்று மல்லி என அறியப்படும் மல்லிகையின் வேர்ச்சொல் ‘முல்லை’, என விளக்குகிறார் வைதேஹி.  சங்க இலக்கிய மரபில், ‘முல்லை’, என்பது ஐந்து வகை அகத்திணை நிலப்பரப்பில் ஒன்றாகும். இது காடும், காடு சார்ந்த இடங்களையும் குறிக்கிறது. குறிஞ்சி, மருதம் நெய்தல், பாலை என்னும் மற்ற நான்கு நிலப்பரப்புகளும் மலர்கள் அல்லது மரங்களின் பெயரால் அழைக்கப்படுகின்றன.

PHOTO • M. Palani Kumar

உசிலம்பட்டி நடுமுதலைக்குளம் கிராமத்தில் பாண்டியின் தோட்டத்தில் மல்லிகை மொட்டுக்களும், மலர்களும்

சங்க காலக் கவிஞர்கள், அகத்திணைகளை, ஒரு கவிதானுபவத்தை உருவாக்கும் கருவியாக உபயோகித்தார்கள் என்கிறார் வைதேஹி ஹெர்பெர்ட்.  கவிதைகளில் உபயோகிக்கப்படும் உவமைகளும், உருவகங்களும் அந்தந்த நிலப்பரப்புகளில் காணக்கிடைக்கும் தாவரங்கள், விலங்குகள், நிலப்பரப்பின் தன்மை இவற்றில் இருந்தே உருவானவை என்பதே இந்த அணுகுமுறையின் சிறப்பு. இவை, இந்தக் கவிதைகளின் நாயக, நாயகியர்களின் உடற் கூறுகளை, உணர்வுகளை எடுத்துச் சொல்ல உதவுகின்றன. எடுத்துக்காட்டாக முல்லை நிலப்பரப்பின் பின்னணியில் எழுதப்பட்ட முல்லைத் திணைக்கவிதைகள் யாவும், ’பொறுமையாகக் காத்திருத்தல்’, என்னும் கருப் பொருளை மையமாகக் கொண்டவை. அதாவது நாயகி, நாயகனுக்காகக் காத்திருத்தல்.

2000 ஆண்டுகளுக்கு முன்பான இந்த ஐங்குறுநூற்றுக் கவிதை, நாயகன் தன் நாயகியின் அழகை எண்ணி ஏங்குவதைச் சொல்கிறது:

நின்னே போலு மஞ்ஞை யாலநின்
நன்னுத னாறு முல்லை மலர
நின்னே போல மாமருண்டு நோக்க
நின்னே யுள்ளி வந்தனென்
நன்னுத லரிவை காரினும் விரைந்தே

OldTamilPoetry.com என்னும் இணையதளத்தை நடத்தி வரும் செந்தில்நாதன், சங்கப்பாடல்களை மொழி பெயர்த்து தன் இணைய தளத்தில் வெளியிட்டு வருகிறார்.  எனக்காக, கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரியைப் பற்றிய ஒரு பாடலை தருகிறார். அது ஒரு பெரும் கவிதை. ஆனால், இந்த நான்கு வரிகள் அழகானவை. இக்கட்டுரையின் கருப்பொருளுக்கு தொடர்புள்ளவை.

இவரே, பூத் தலை அறாஅப் புனை கொடி முல்லை
நாத் தழும்பு இருப்பப் பாடாதுஆயினும்,
'கறங்கு மணி நெடுந் தேர் கொள்க!' எனக் கொடுத்த
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர்;
புறநானூறு 200, வரிகள் 9-12

இன்று தமிழ்நாட்டில் பெருவாரியாகப் பயிரிடப்படும் மல்லிகையின் அறிவியல் பயர் Jasminum sambac.  இந்தியாவில் மல்லிகை தமிழ்நாட்டில்தான் அதிமாகப் பயிர் செய்யப்படுகிறது. இந்தியாவின் மொத்த உற்பத்தி யான 2.4 லட்சம் டன்னில், 1.8 லட்சம் டன் தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது.

புவிசார்க் குறியீடு பெற்றுள்ள மதுரை மல்லிக்குப் பல தனித்துவமான பண்புகள் உள்ளன.  திட்பமான மணம், வலுவான இதழ்கள், நீளமான இலைக்காம்பு, மெல்ல மலரும் தன்மை, இதழ்களின் நிறம் நீண்ட நேரம் மாறாதிருக்கும் தன்மை, நீண்ட நேரம் உதிராமல் இருக்கும் தன்மை போன்றவை மதுரை மல்லியின் தனித்துவமான பண்புகளாகும்.

PHOTO • M. Palani Kumar

மலரில் அமர்ந்து தேனை உறிஞ்சிக் கொண்டிருக்கும் பட்டாம்பூச்சி

மல்லிகையின் இதர ரகங்களுக்கும் சுவாரஸ்யமான பெயர்கள் உண்டு. மதுரை மல்லி தவிர, குண்டு மல்லி, நம்ம ஊரு மல்லி, அம்பு மல்லி, இராமபாணம், மதன பாணம், இருவாட்சி, இருவாச்சிப்பூ, கஸ்தூரி மல்லி, ஊசி மல்லி மற்றும் சிங்கிள் மோக்ரா

மதுரை மல்லி மதுரையில் மட்டுமல்ல, அதையொட்டிய விருதுநகர், தேனி, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலும் பயிர் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில், பூக்கள் பயிரிடப்படும் மொத்த நிலப்பரப்பில், 40% நிலத்தில் மல்லிகை பயிரிடப்படுகிறது. இதில் ஆறில் ஒருபங்கு மல்லிகைத் தோட்டங்கள் மதுரையில் உள்ளன

எழுதுகையில் நன்றாக இருக்கும் விலை விவரங்கள், உண்மையில் உற்பத்தியாளரைப் பெரும் துன்பத்தில் ஆழ்த்துகிறது. நிலக்கோட்டையில் கிலோ 120 ரூபாய்க்கு, செண்ட் தொழிற்சாலைக்கு விற்கப்படும் மல்லி, மதுரை மாட்டுத்தாவணிச் சந்தையில் 3000-4000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.  3000/ 4000 முதல் 120 என்னும் இவ்வகை விலை ஏற்ற இறக்கங்கள் நம்பவே முடியாதவை. நீடித்து நிலைக்காத் தன்மை கொண்டவை

*****

பூக்களைப் பயிர் செய்வது லாட்டரி மாதிரி. எல்லாமே நேரத்தைப் பொறுத்தது. “நீங்கள் பயிர் செய்த பூச்செடிகள் பண்டிகைக் காலத்தில் பூத்துக் குலுங்கினால் மட்டும்தான் உங்களுக்கு லாபம். இல்லைன்னா, உங்க குழந்தைகள் இந்தத் தொழிலுக்கு வர யோசிப்பாங்க.  அப்பாம்மா கஷ்டப்படறத அவங்க பாத்துட்டுத்தானே இருக்காங்க.” என் பதிலுக்காகக் காத்திருக்காமல், கணபதி தொடர்கிறார். “எங்கள மாதிரி சிறு விவசாயிங்க, பெரிய பண்ணையார்கள் கூடப் போட்டி போட முடியாது. அவங்க தோட்டத்துல இன்னிக்கு 50 கிலோ பூ இருக்குன்னா, 10 ரூபா கூடக் கூலி குடுத்து, வண்டியில கூட்டிட்டுப் போயிருவாங்க. டிபன் ஏற்பாடு பண்ணித் தருவாங்க.. நம்மால முடியுமா?”

எல்லாச் சிறு விவசாயிகளையும் போல, கணபதியும், வியாபாரிகளை நம்பித்தான் இருக்கிறார். “நல்லாப் பூக்கற சீசன்ல, ஒரு நாளக்கி மூணுவாட்டி மார்க்கெட்டுக்குப் பூவக் கொண்டு போவேன். வியாபாரிக உதவி பண்ணினாத்தானே எல்லாத்தையும் வித்துக் காசு பாக்க முடியும்?,” என்கிறார் கணபதி.  கணபதி விற்கும் பூவின் விலையில் 10% கமிஷன் வியாபாரிக்குச் செல்கிறது.

அஞ்சு வருஷத்துக்கு முன்பு, மதுரையின் பெரிய பூ வணிகரான பூக்கடைஇராமச்சந்திரனிடம் இருந்து, சில லட்சங்கள் கடனாக வாங்கியிருந்தார் கணபதி. பூக்கடை இராமச்சந்திரன் கடை வழியே தன் பூக்களை விற்றே தன் கடனை அடைத்தார். இது போன்ற சமயங்களில், பூக்கடை வியாபாரியின் கமிஷன் 10% லிருந்து 12.5% ஆக உயர்ந்து விடுகிறது.

சிறு விவசாயிகள் பூச்சி மருந்து மற்றும் உரம் வாங்குவதற்காக, வியாபாரிகளிடம் இருந்தது குறுகிய காலக்கடன்களை வாங்குகிறார்கள். வயலில், பயிருக்கும் பூச்சிகளுக்குமான யுத்தம் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும் விஷயம். கிருஷ்ணகிரிப்பகுதியில், பேருருக் கொண்ட யானைகள் தங்கள் ராகிப்பயிரைத் தின்று நாசம் செய்வதைத் தடுக்க, விவசாயிகள் பூக்களைப் பயிரிடுகிறார்கள்.  ஆனால் மதுரைப் பகுதி மல்லிகை விவசாயிகளின் எதிரிகள் மிகச் சிறியவை – மொட்டுப் புழு, பூச்சிகள், இலைச் சுருட்டுப் புழுக்கள், பேன்கள் போன்றவை மிகச் சிறிய ஆனால் மிகப் பெரும் சேதத்தை ஏற்படுத்தி விடக் கூடிய எதிரிகள். இவற்றின் தாக்குதல்கள் பூக்களின் நிறம் மாறுதல், செடியைச் சேதமாக்குதல் போன்ற பெரிய விளைவுகளை உருவாக்கி விவசாயிகளைப் பெரும் நஷ்டத்தில் ஆழ்த்தி விடுகின்றன.

PHOTO • M. Palani Kumar

மதுரை மாவட்டம் திருமால் கிராமத்தில், சின்னம்மா  பூச்சிகளால் பாதிக்கப்பட்ட தன் மல்லிகைத் தோட்டத்தில் வேலை செய்கிறார்

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இளையவர் வயதானவர் என அனைவரும் பூக்களைப் பறிக்கிறார்கள். வலது: திருமால் கிராமத்தில் மல்லிகைத் தோட்டத்தை அடுத்த கபடித் திடல்

கணபதியின் வீட்டில் இருந்து சற்றுத் தொலைவில் திருமால் கிராமம் உள்ளது. அங்கே பூச்சிகளால் பெருமளவு சேதப்படுத்தப்பட்ட ஒரு தோட்டம் இருந்தது. அத்துடன் அந்த விவசாயியின் கனவும் சிதைந்து போயிருந்ததை உணர முடிந்தது. அந்தத் தோட்டம் ஐம்பது வயதான ஆர்.சின்னம்மா என்னும் விவசாயினுடையது.  அவரது கணவர் பெயர் இராமர். அவர்கள் தோட்டத்தில் இருந்த 2 வயது மல்லிச் செடிகள் பூத்திருந்தன. “இதெல்லாம் இரண்டாம் தரப் பூக்கள். மார்க்கெட்ல வில ரொம்பக் கம்மியாக் கிடைக்கும்.”  ‘வியாதி’ என்கிறார் அலுப்புடன்.  “இந்தப் பூ மலராது. பெரிசாவும் வளராது,” எனத் தன் தலையை ஆட்டுகிறார்.

ஆனாலும், இதற்கும் கடின உழைப்பைத் தந்தே ஆகவேண்டும். வயதான பெண்கள், குழந்தைகள், கல்லூரி செல்லும் பெண்கள் என அனைவருமே பூக்களைப் பறிப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள். நம்மிடம் பேசிக் கொண்டே செடிகளை வருடிப் பூக்களைத் தேடுகிறார் சின்னம்மா. கண்டாங்கிச் சேலை கட்டியிருக்கும் அவர், பூக்களைப் பறித்து தன் முந்தானையில் போட்டுக் கொள்கிறார். அவரது கணவர் இராமர், பல பூச்சிக் கொல்லிகளை உபயோகித்துப் பார்த்திருக்கிறார். “லிட்டர் 450 ரூபாய்னு ரொம்ப விலை கொடுத்து வாங்கியெல்லாம் அடிச்சிப் பார்த்தார். ஒன்னும் வேலைக்காவல... அப்பறம் பூச்சி மருந்துக் கடைக்காரரே சொல்லிட்டார்.. இதுக்கு மேல பணத்த வேஸ்ட் பண்ணாதனு.” அதன் பின்னர், இராமர் தன் மனைவி சின்னம்மாவிடம் சொன்னார்.. “1.5 லட்சம் நஷ்டம்.. செடிகளப் புடுங்கி எறிய வேண்டியதுதான்.”

“அந்த வயித்தெரிச்சல ஏன் கேக்கறீங்க.. அதனாலதான் அவர் (கணவர் இராமர்) தோட்டத்துக்கே வர்றதில்ல.” குரலில் கசப்பும், பொறாமையும் மண்டிக் கிடக்கிறது. “மத்தவங்க பூவுக்கு கிலோ 600 கிடைக்குதுன்னா, எங்க பூவுக்கு 100 ரூபாதான் கிடைக்குது.” ஆனால், சின்னம்மா அந்தக் கோபத்தையும், எரிச்சலையும், செடிகள் மீது காண்பிக்கவில்லை. மிகவும் வாஞ்சையோடுதான் தடவிப் பூக்களைத் தேடுகிறார்.  “நல்லாப் பூத்திருந்தா, ஒரு செடில பறிக்கவே பல நிமிசமாவும்.. இப்ப…,” என விரைவாக நகர்கிறார்.

நல்ல மகசூலுக்குப் பல காரணங்கள் இருக்கு என்னும் கணபதி, துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு சின்னம்மாவுடன் பூக்களைப் பறிக்கத் தொடங்குகிறார். மண்ணுக்கு மண், வளர்ச்சி, விவசாயியோட திறமையப் பொறுத்து மகசூல் மாறுபடுகிறது.  “ஒரு குழந்தைய வளக்கற மாதிரிதான் வளக்கனும். ‘கொழந்தைக்குத் தெரியுமா? தனக்கு என்ன வேணுமின்னு? நாமதான் பாத்துப் பாத்துச் செய்யனும்.  கொழந்த மாதிரி செடிக்கு அழுகவும் தெரியாது. ஆனா, அனுபவம் இருந்தா நமக்குத் தெரிஞ்சுடும். செடிக்கு வியாதியிருக்குதா? வளருதா சாவுதான்னு.”

இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வு பெரும்பாலும் பல பூச்சி மருந்துகளைக் கலந்து அடிப்பதுதான்.  மல்லிப்பூவை இயற்கை முறையில் வளக்க முடியுமா எனக் கேட்கிறேன். “செய்யலாம். ஆனா ரொம்ப ரிஸ்க்கு.. நான் அந்த பயிற்சிக்கெல்லாம் போயிருக்கேன். ஆன அப்படி வளத்தா யாராவது அதிக வெல குடுக்கப் போறாங்களா?” என வெடுக்கெனக் கேட்கிறார்.

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இடது: பட்டுப்போன மல்லிகைச் செடி. சுற்றிலும் உயிருடன் இருக்கும் செடிகள். வலது: பக்கெட்டில் மல்லிகை மொட்டுக்கள். அருகில் அளக்கும் படி. இதை வைத்துத்தான் பறிப்புக்கான கூலி தீர்மானிக்கப்படுகிறது

PHOTO • M. Palani Kumar

பூப்பறிக்கும் மக்கள். தோட்டத்தின் உரிமையாளர்களும், கூலியாட்களும் இணைந்து, பாட்டுக் கேட்டுக் கொண்டே, பூக்கள் மலரும் முன்பே பறித்து, மார்க்கெட்டுக்கு நேரத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள்

“உரம் போட்டு விவசாயம் பண்றது சுலபம். நல்ல மகசூலும் கிடைக்கும். ஆனா, இயற்கை முறைல பண்றது சிரமம். எல்லாத்தையும் ஒரு தொட்டில போட்டு, கலக்கி, அத எடுத்துத் தெளிக்கனும்.. அப்படிக் கஷ்டப்பட்டு உற்பத்தி பண்ணிக் கொண்டு போனா அதுக்கு பெரிசா விலை கிடைக்காது. இயற்கை முறைல உற்பத்தி செஞ்சா, பூ பெரிசா இருக்கும். நல்ல கலராவும் இருக்கும். ஆனா, அதுக்கு குறைஞ்சு ரெண்டு மடங்கு வில கெடச்சால் ஒழிய, கட்டுபடியாகாது.”

ஆனால், அவரின் வீட்டுக்காக, காய்கறிகளை இயற்கை முறையில் விளைவிக்கிறார். “இது எங்களுக்கும், பக்கத்தூர்ல இருக்கற எங்க மகளுக்கு மட்டும்தான். எங்களுக்கும் இந்தப் பூச்சி மருந்த அடிச்சி விவசாயம் பன்றதுல விருப்பம் இல்ல.. இதுக்குப் பக்க விளைவுகள் இருக்குன்னு சொல்றாங்க.. இவ்வளவு பூச்சி மருந்து அடிக்கறது ஒடம்புக்குக் கெடுதிதான்.. ஆனா, வேற வழி?”

*****

கணபதியின் மனைவி பிச்சையம்மாவுக்கும் வேற வழியில்லை. நாள் முழுதும் தோட்டத்தில் வேலை செய்தே ஆக வேண்டும். அவரது வெள்ளந்தியான சிரிப்புதான் அவரைக் காக்கிறது என நினைக்கிறேன். எப்போதும் மாறாத முகம் நிறைந்த சிரிப்பு. 2022 வருடம் ஆகஸ்டு மாதம், அவரது வீட்டுக்கு இரண்டாவது முறையாகச் சென்றோம். வாசலில் இருந்த வேப்ப மரநிழலில், கட்டிலில் அமர்ந்து கொண்டு தன் தினசரி வேலையைப் பற்றிச் சொல்கிறார்.

“ஆடப் பாக்க, மாடப் பாக்க, மல்லிகைத் தோட்டத்தப் பாக்க, சமைக்க, புள்ளைகளை பள்ளிக் கூடம் அனுப்பிவிட”ன்னு மூச்சுவிட நேரமில்லாத தன் வேலைகளைச் சொல்கிறார்.

அத்தனை உழைப்பும் குழந்தைகளுக்காகத்தான் என்கிறார் 45 வயதான பிச்சையம்மா. “பையன், பொண்ணு ரெண்டு பேருமே படிச்சு டிகிரி வாங்கிட்டாங்க.” பிச்சையம்மா பள்ளியே சென்றதில்லை. சிறுவயதில் தன் பெற்றோரின் தோட்டத்தில் விவசாய வேலை செய்தார். கல்யாணம் ஆனவுடன், தன் சொந்தத் தோட்டத்தில் வேலை செய்கிறார். மூக்கிலும், காதிலும் குறைந்த பட்ச நகைகள் போட்டிருக்கிறார். கழுத்தில் மஞ்சள் கயிற்றில் கட்டப்பட்ட தாலி தொங்குகிறது.

நாங்கள் சென்ற அன்று, மல்லிகைத் தோட்டத்தில் களையெடுத்துக் கொண்டிருந்தார். மிகக் கடினமான வேலை. நாள் முழுதும், கொளுத்தும் வெயிலில், குனிந்த முதுகுடனே வேலை செய்ய வேண்டும்.  ஆனாலும், அன்று விருந்தினர்களாகச் சென்றிருந்த எங்கள் மீதுதான் அவரது முழுக் கவனமும்.  “ஏதாவது சாப்பிடுங்க,” என்கிறார். கணவர் கணபதி நல்ல பழுத்த கொய்யாப்பழங்களையும், இளநீரையும் கொண்டு வருகிறார்.  நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், படித்தவர்கள் கிராமத்தில் இருந்து நகரத்துக்குச் சென்றுவிட்டார்கள் என விளக்கிச் சொல்கிறார். நிலத்தின் விலை 10 லட்சத்துக்குக் குறையாது. சாலையை ஒட்டி இருந்தால், இதைவிட நாலு மடங்கு அதிக விலை. “அதையெல்லாம் ப்ளாட் போட்டு வித்துருவாங்க.”

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

பிச்சையம்மா தனது தினசரி வேலையைப் பற்றிச் சொல்கிறார்  வலது: பிச்சையம்மாவும், கூலியாளும் மல்லிகைத் தோட்டத்தில் களையெடுக்கிறார்கள்

சொந்தமாகத் தோட்டம் வைத்திருப்பவர்களும் தோட்டத்தில் இறங்கி வேலை செய்தால் ஒழிய, விவசாயத்தில் லாபம் கிடைப்பது நிச்சயமில்லை.  விவசாயத்தில் பெண்களின் பங்கு அதிகம் என்பதை கணபதி ஒத்துக் கொள்கிறார்.  இந்த வேலையை இன்னொரு தோட்டத்தில் செய்தால், உங்களுக்கு என்ன கூலி கிடைக்கும் எனக் கேட்கிறேன். ”300 ரூபாய்,” என்கிறார் பிச்சையம்மா. இது போக அவர் கால்நடைகளைப் பார்த்துக் கொள்கிறார். வீட்டுக்கான சமையலும் அவர் வேலைதான். அதெல்லாம் கணக்கில் வராது

”இதனால ஒங்க வீட்டுக்கு மாசம் 15 ஆயிரம் செலவு மிச்சமாகுமா,” எனக் கேட்கிறேன். அவரும் கணபதியும் ஒத்துக் கொள்கிறார்கள். ”அப்படீன்னா ஒங்களுக்கு மாசம் 15 ஆயிரம் சம்பளமாக் கொடுக்க வேண்டும்,” எனச் சொல்கிறேன். எல்லோரும் சிரிக்கிறார்கள். பிச்சையம்மாளின் சிரிப்பு எல்லோரையும் விடப் பலமாக இருக்கிறது.

மென்மையாகச் சிரித்துக் கொண்டே, என்னைக் கூர்ந்து பார்த்து, ஒங்க பொண்ணு கல்யாணத்துக்கு எவ்வளவு நகை போடுவீங்கன்னு கேட்கிறார் பிச்சையம்மா. ”இங்கே குறைந்த பட்சம் 50 பவுன் போடனும்.. அப்பறம் பேரன் பேத்தி பொறந்தா காது குத்துக்கு, தங்கச் செயினு, வெள்ளிக் கொலுசு போடனும்.. நோம்பிக்குக் கெடான்னு லிஸ்டு போயிட்டே இருக்கும். இதுல நான் எப்படி எனக்குன்னு சம்பளம் எடுத்துக்கறது?”

*****

சம்பளம் என்பது வேளாண்மையில் கூடுதல் உதவி என்பதை அன்று ஒரு இளம் பெண் மல்லிகை விவசாயியிடம் கற்றுக் கொண்டேன். வேலைச்சுமை இரண்டு மடங்காக இருந்தாலும் கூட, கூடுதல் வருமானம் மிக முக்கியமான பாதுகாப்பு. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடுமுதலைக்குளம் விவசாயிகள் ஜெயபால், பொதுமணியும் இதையே சொன்னார்கள்.  இந்தமுறை (2022 ஆகஸ்டு) ஜெயபால் அவருடைய சிறுவயது நண்பரும், மல்லிகை விவசாயியுமான எம்.பாண்டிக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். எம்.பாண்டி முதுகலை பொருளாதாரம் படித்தவர். தற்போது அரசின் மது விற்பனை நிறுவனமான டாஸ்மாக்கில் முழுநேரப் பணியாளராக இருக்கிறார்.

40 வயதான பாண்டி எப்போதுமே விவசாயம் செய்து வந்தவரல்ல. அவரது தோட்டத்துக்குச் செல்லும் வழியில், அவரது வாழ்க்கைக் கதையைச் சொல்கிறார். செல்லும் வழியெங்கும் பசுமை நிறைந்த மலைத்தொடர்களும், நீர்நிலைகளும், ஆங்காங்கே வெண்மையாகப் பளிச்சிடும் மல்லிகைத் தோட்டங்களும் உடன் வருகின்றன.

PHOTO • M. Palani Kumar

நடுமுதலைக்குளம் கிராமத்தில் பாண்டி, தன் மல்லிகைத் தோட்டத்தில். இங்கே பலர் நெல்லும் பயிரிடுகிறார்கள்

‘நான் 18 வருஷம் முன்னாடி, படிப்பை முடிச்சவுடன் டாஸ்மாக்கில் சேந்தேன். இன்னும் அங்கதான் வேல செஞ்சுகிட்டு இருக்கேன். காலைல மல்லிகைத் தோட்டத்தப் பாத்துக்குவேன்.” 2016 ஆம் வருடம், அன்று புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள், டாஸ்மாக் பணியாளர்களுக்கான வேலை நேரத்தை, 12 மணியிலிருந்து 10 மணியாகக் குறைத்தார். எப்போது முதலமைச்சரைக் குறிப்பிட்டாலும், ‘மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள்’, என்றே குறிப்பிடுகிறார். அந்தப் பட்டத்தை ஒவ்வொரு முறையும், முறையாகவும், மரியாதையுடனும் குறிப்பிடுகிறார். ஜெயலலிதாவின் அந்த முடிவினால், பாண்டிக்கு அவரது காலை நேரம் மீண்டும் கிடைத்து விட்டது. காலை 10 மணிக்குப் பதிலாக, 12 மணிக்கு வேலைக்குப் போனால் போதும் என நிலை மாறிய போது, அவர் கிடைத்த கூடுதல் 2 மணி நேரங்களைத் தன் நிலத்தில் உழைக்கப் பயன்படுத்திக் கொள்கிறார்.

தன் மல்லிகைத் தோட்டத்திற்கு பூச்சி மருந்து அடித்துக் கொண்டே, என்னிடம் மிகத் தெளிவாக தனது இரண்டு தொழில்களைப் பற்றியும் பேசுகிறார். “நான் டாஸ்மாக்கில் வேலை செய்யும் தொழிலாளி. இங்கே என் தோட்டத்தில் 10 தொழிலாளர்களுக்கு வேலை தருகிறேன்.” அவர் குரலில் பெருமை தொனிக்கிறது. ஆனால், அதே சமயத்தில் அதில் உண்மையும் பொதிந்திருக்கிறது. “சொந்தமா நிலமிருந்தாத்தான் விவசாயம் பண்ண முடியும். பூச்சி மருந்துக்கு நூத்துக்கணக்குல, சில சமயம் ஆயிரக்கணக்குல செலவாகுது. எனக்கு கூடுதலா ஒரு சம்பளம் கிடைக்கறதனால இத சமாளிக்கிறேன். இல்லன்னா ரொம்பக் கஷ்டம்.”

மல்லிகை விவசாயம் ரொம்பக் கஷ்டம் என்பதை அழுத்தமாகச் சொல்கிறார். நம்ம வாழ்க்கையையே இதச் சுத்தி அமைச்சுக்கனும். ”எங்கியும் போக முடியாது. காலை நேரம் பூப்பறிக்கவும், மார்க்கெட்டுக்குக் கொண்டு போகவுமே சரியாப் போயிரும். அப்பறம் அதுல இருக்கற பிரச்சினைகள்.. இன்னிக்கு ஒரு கிலோ கிடைக்கும் அடுத்த வாரம் 50 கிலோ கிடைக்கும்.. எல்லாத்துக்குமே தயாரா இருக்கனும்.”

பாண்டி தனது ஒரு ஏக்கர் மல்லிகைத் தோட்டத்தில் செடிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்தார். மல்லிகை விவசாயி தினமும் செடிகளோட பல மணிநேரம் செலவு செய்யனும் என்கிறார் பாண்டி. “நான் வேல முடிஞ்சு வீடு வர ராத்திரி 12 மணியாயிடும். அடுத்த நாள் 5 மணிக்கு எந்திருச்சு, தோட்டத்துக்கு வந்துருவேன். குழந்தைகளப் பள்ளிக்கூடம் அனுப்பிட்டு, மனைவியும் தோட்டத்துக்கு வந்துருவாங்க. இப்படி உழைக்காம தூங்கிகிட்டு இருந்தா, வாழ்க்கையில் ஜெயிக்க முடியுமா? இல்ல 10 பேருக்கு வேலதான் கொடுக்க முடியுமா.”

மொத்தத் தோட்டமுமே பூத்திருச்சின்னா, ”20-30 கூலியாள்கள் தேவைப்படுவாங்க”.  நாலு மணிநேர வேலைக்கு 150 ரூபா கூலி. காலைல 6 மணில இருந்து 10 மணி வரைக்கும். பூ சீசன் மாறி மகசூல் குறைந்து (1 கிலோ) போனால், பாண்டி, அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுமே பறித்து விடுகிறார்கள். ”மத்த பகுதிகள்ல கூலி குறைவா இருக்கலாம். ஆனா, இந்தப் பக்கம் முழுக்க நெல்லு வயல்கள். இங்கே கூலியாள்களுக்கு டிமாண்ட் ஜாஸ்தி. அதனால, நல்ல கூலி குடுத்து, டீ, வடைன்னு வாங்கிக் குடுக்கனும்.”

கோடை காலத்தில் (ஏப்ரல், மே) பூப்பூப்பது அதிகமாக இருக்கும். ”40-50 கிலோ வரைக்கும் கிடைக்கும். ஆனா வெல ரொம்பக் கம்மியா இருக்கும். சில சமயம் கிலோ 70 ரூபாய்க்கு இறங்கிரும். இப்பக் கடவுள் புண்ணியத்துல, செண்ட் கம்பெனிக கிலோவுக்கு 220 ரூபாய் குடுக்கறாங்க.”  மார்க்கெட்டில் பூக்கள் குவிந்து கிடைக்கையில், இந்த விலைதான் விவசாயிகளுக்கு அதிக பட்சமாகக் கிடைக்கக் கூடியது. இந்த விலை நஷ்டம் வராத விலை என்கிறார் பாண்டி.

PHOTO • M. Palani Kumar

தன் மல்லிகைச் செடிகளுக்கு உரமும் பூச்சி மருந்தும் கலந்த கலவையைத் தெளிக்கிறார் பாண்டி

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

கணபதி மல்லிகைச் செடி வரிசைகளுக்கிடையே நடக்கிறார் வலது: பிச்சையம்மாள் தனது வீட்டின் முன்னே நிற்கிறார்

பாண்டி தனது பூக்களை அருகில் இருக்கும் நிலக்கோட்டை மார்க்கெட்டுக்கு (திண்டுக்கல் மாவட்டம்) எடுத்துச் செல்கிறார்.  ”மாட்டுத்தாவணி மார்க்கெட் நல்ல மார்க்கெட்தான். ஆனா அங்கே கிலோ கிலோவா விக்கனும். ஆனா நிலக்கோட்டை மார்க்கெட்ல சாக்கோட வித்துற முடியும். வியாபாரி பக்கத்துலயே ஒக்காந்துருப்பார். நல்லது, கெட்டது, பூச்சி மருந்து வாங்கறதுக்கெல்லாம் பணம் குடுத்து உதவி பண்ணுவார்.”

”பூச்சி மருந்து தெளிக்கறது ரொம்ப முக்கியம்,” என்று சொல்லிக் கொண்டே, தனது உடைகளை மாற்றிக் கொள்கிறார். அரைக்கால் ட்ரௌசரும், டீ ஷர்ட்டும் அணிந்து கொள்கிறார்.  மல்லிகைப் பூவுக்குப் பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். அதே போல மல்லிகை  பல பூச்சிகளையும் ஈர்க்கும் ஒன்றாக இருக்கிறது.  இந்த பூச்சி மருந்துகளைப் பற்றி சொல்லித்தர கணபதிக்கு அவர் மகன் வீட்டிலேயே இருக்கிறார். ஆனால், பாண்டி பூச்சி மருந்துக் கடைக்குச் சென்றுதான் வாங்கி வரவேண்டியிருக்கிறது.  ஷெட்டில் கீழே கிடக்கும் காலி பூச்சி மருந்து பாட்டில்களை நமக்குக் காண்பித்து விட்டு, உள்ளே சென்று மருந்து தெளிக்கும் இயந்திரத் தெளிப்பானை எடுத்து வருகிறார்.  ரோகார் (பூச்சி மருந்து) மற்றும் அஸ்தா (உரம்) வை நீருடன் கலக்கிறார். இதற்கு அவருக்கு ஏக்கருக்கு 500 ரூபாய் செலவாகிறது. 4-5 நாளுக்கு ஒருமுறை அடிக்கிறார். ”பூப்பூக்குதோ இல்லியோ, இத நாம செஞ்சிகிட்டே இருக்கனும். வேற வழியே இல்லை.”

முகத்தில் ஒரு துணி முகமூடியை மாட்டிக் கொண்டு, 25 நிமிடங்களில் இந்தக் கலவையைத் தெளித்து முடிக்கிறார். சிறு அடர் புதர்களாக இருக்கும் மல்லிகைச் செடிகளின் நடுவே இந்தத் தெளிப்பானைச் சுமந்து செல்கிறார். தெளிப்பானில் இருந்து வெளிப்படும் நுன் துளிகள் செடியின் எல்லாப் பாகங்களிலும் படுமாறு தெளிக்கிறார். செடிகள் அவரது இடுப்பளவு உயரத்தில் உள்ளன. அவர் தெளிக்கும் நுன் துகள்கள் அவர் முகம் வரை புகையாய் எழுகின்றன. இயந்திரத் தெளிப்பானின் சத்தம் நாராசமாக இருக்கிறது. பூச்சி மருந்தின் வேதி நாற்றம் காற்றில் பரவுகிறது. பாண்டி தொய்வில்லாமல் நடந்து தெளித்துக் கொண்டே செல்கிறார். தெளிப்பானில் கலவை தீர்ந்ததும், மீண்டும் கரைக்கு வந்து நிரப்பிக் கொண்டு மீண்டும் செல்கிறார்.

வேலை முடிந்ததும், குளித்து விட்டு, வெள்ளைச் சட்டை, நீல நிற லுங்கிக்கு மாறிக் கொள்கிறார். பூச்சி மருந்து தெளிக்கும் போது, அதைக் கையாள்வதைக் கேட்கிறேன். ”மல்லிகைச் செடி வளக்கனும்னா, அதுக்கு என்ன தேவையோ அதையெல்லாம் செஞ்சுதான் ஆகனும். பூச்சி மருந்து தெளிக்கக் கூடாதுன்னா, வீட்லயே ஒக்காந்துக்க வேண்டியதுதான்,” என அமைதியாக பதில் சொல்கிறார். பதில் சொல்கையில், பிரார்த்தனையில் இருப்பது போல கைகளைக் கூப்பிக் கொள்கிறார்.

நாம் கிளம்புகையில், கணபதியும் அதையே சொல்கிறார். நமது கைப்பையில் கொய்யாப்பழங்களை நிரப்பி, நம் பயணத்துக்கு வாழ்த்துகளைச் சொல்லி, மீண்டும் வந்து போகச் சொல்கிறார்.  ”நீங்க அடுத்த வாட்டி வரும்போது, இந்த வீடு ரெடியா இருக்கும்,” என தன் பின்னால் இருக்கும் பூசப்படாத செங்கல் கட்டிடத்தைக் காட்டுகிறார்.  ”வந்து விருந்து சாப்பிட்டுட்டுப் போலாம் வாங்க.”

ஆயிரக்கணக்கான மல்லிகை விவசாயிகளைப் போலவே, பாண்டியும், கணபதியும், மனதை மயக்கும் மணம் கொண்ட, நீண்ட வரலாற்றைக் கொண்ட அந்தச் சிறிய மல்லிகை மொட்டின் மீதும்,  விலைகள் மேலும் கீழும் ஏறி இறங்கும், ஐந்து நிமிடங்களில் ஆயிரக்கணக்கில் பணம் புழங்கும் மார்க்கெட்டின் மீதும் நம்பிக்கை வைத்துக் காத்திருக்கிறார்கள்.

அது இன்னொரு நாளுக்கான கதை.

இந்த ஆய்வு, 2020 ஆம் ஆண்டுக்கான அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நிதிநல்கையின் உதவியினால செய்யப்பட்டது.

தமிழில்: பாலசுப்ரமணியம் முத்துசாமி

Aparna Karthikeyan

अपर्णा कार्थिकेयन स्वतंत्र मल्टीमीडिया पत्रकार आहेत. ग्रामीण तामिळनाडूतील नष्ट होत चाललेल्या उपजीविकांचे त्या दस्तऐवजीकरण करतात आणि पीपल्स अर्काइव्ह ऑफ रूरल इंडियासाठी स्वयंसेवक म्हणूनही कार्य करतात.

यांचे इतर लिखाण अपर्णा कार्थिकेयन
Photographs : M. Palani Kumar

एम. पलनी कुमार २०१९ सालचे पारी फेलो आणि वंचितांचं जिणं टिपणारे छायाचित्रकार आहेत. तमिळ नाडूतील हाताने मैला साफ करणाऱ्या कामगारांवरील 'काकूस' या दिव्या भारती दिग्दर्शित चित्रपटाचं छायांकन त्यांनी केलं आहे.

यांचे इतर लिखाण M. Palani Kumar
Editor : P. Sainath

पी. साईनाथ पीपल्स अर्काईव्ह ऑफ रुरल इंडिया - पारीचे संस्थापक संपादक आहेत. गेली अनेक दशकं त्यांनी ग्रामीण वार्ताहर म्हणून काम केलं आहे. 'एव्हरीबडी लव्ज अ गुड ड्राउट' (दुष्काळ आवडे सर्वांना) आणि 'द लास्ट हीरोजः फूट सोल्जर्स ऑफ इंडियन फ्रीडम' (अखेरचे शिलेदार: भारतीय स्वातंत्र्यलढ्याचं पायदळ) ही दोन लोकप्रिय पुस्तकं त्यांनी लिहिली आहेत.

यांचे इतर लिखाण साइनाथ पी.
Translator : Balasubramaniam Muthusamy

The son of a small farmer, Balasubramaniam Muthusamy studied agriculture and rural management at IRMA. He has over three decades of experience in food processing and FMCG businesses, and he was CEO and director of a consumer products organisation in Tanzania.

यांचे इतर लिखाण Balasubramaniam Muthusamy