தொடக்கத்திலிருந்து பேசுவோம்…
2014ம் ஆண்டிலிருந்து பாரி முன்வைத்துவரும் இந்தியாவின் பன்முகத்தன்மை பற்றிய பெருங்கதை, இந்திய மொழிகளிலிருந்து தொடங்குகிறது. நாட்டிலுள்ள கிராமப்புறங்களின் 83 கோடியே 30 லட்சம் மக்கள் கிட்டத்தட்ட 700 மொழிகளை பேசுகின்றனர். 86 வகை வரிவடிவங்களை பயன்படுத்துகின்றனர். எழுத்துகள் இல்லாத மொழிகளையும் உள்ளடக்கிய இம்மொழிப்பன்முகத்தன்மைதான் இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மைக்கான அடிப்படை. இவை இல்லாமல், மக்களுக்கான பெட்டகம் செயல்படுவது மட்டுமல்ல, கற்பனை கூட செய்ய முடியாது. இந்திய மொழிகளிலான இந்த மொழிபெயர்ப்புகள்தாம் ஒவ்வொரு பாரிக் கட்டுரையின் பயணத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
“இதழியலில் இந்தப் பெட்டகம் ஒரு முன்னோடி முயற்சி. சமூகநீதி பார்வையில் மொழிபெயர்ப்பை இது பார்க்கிறது,” என்கிறார் ஸ்மிதா கடோர். “கிராமப்புற இந்தியர்களின் பெரும்பகுதிக்கு ஆங்கிலம் இன்னும் எட்டாக் கனியாக இருக்கும் நிலையில், அறிவு உற்பத்தி மற்றும் பகிர்வு ஆகியவை ஆங்கிலம் படிக்கக் கூடிய, பேசக்கூடிய வர்க்கங்களின் தனிச்சலுகையாக மட்டுமே மிஞ்சாமல் இருப்பதை இது உறுதிப்படுத்துகிறது.”
எங்களின் மொழிபெயர்ப்பு ஆசிரியர் குழுவினரும் மொழிபெயர்ப்பாளர்களும் வார்த்தைகள் கொண்டிருக்கும் பண்பாட்டு பின்னணி குறித்து அடிக்கடி பகிர்வார்கள். விவாதிப்பார்கள். கலந்துரையாடுவார்கள். இப்படித்தான் ஒருநாள்…
ஸ்மிதா: தெலங்கானாவின் செங்கல் சூளையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த குரும்புரி பஞ்சாயத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள், புருசோத்தம் தாகூரை பார்த்ததும் சந்தோஷமடைந்த காட்சியை அவர் விவரித்த கட்டுரை ஞாபகம் இருக்கிறதா? ஒரு முதியவர் கூட, ‘ரொம்ப நாள் கழித்து ஒடியா பேசுபவரை நான் சந்தித்திருக்கிறேன். உங்களை சந்தித்ததில் மிகவும் சந்தோஷம்!’ என சொன்னாரே?
அதே போல, ரகு என்ற புலம்பெயர் தொழிலாளர் சிறுவன் புதிய பள்ளியில் சேர்ந்து, அங்கிருக்கும் ஆசிரியர்களும் நண்பர்களும் அவனுக்கு புரியாத மொழியில் பேசியதால் பட்ட அவதியை குறித்து மகாராஷ்டிராவின் ஜோதி ஷினோலி எழுதிய இக்கட்டுரையும் முக்கியமானது. சிறுவனின் தாயான காயத்ரி சொல்கையில், “மூன்று வாரங்கள் சென்னை பள்ளி ஒன்றுக்கு சென்ற பிறகு, அவன் வீட்டுக்கு வந்து ஒரு நாள் அழுதான். பள்ளிக்கு செல்லப் போவதில்லை என்றான். எதுவும் அங்கு புரியவில்லை என்றும் அனைவரும் அவனிடம் கோபமாக பேசுவதாகவும் சொன்னான்,” என்றார்.
வேலை தேடி புலம்பெயர வேண்டியக் கட்டாயம் கிராமப்புற மக்களுக்கு ஏற்படுகையில் அவர்களின் மொழி அடையாளம் அவர்களுக்கு முக்கியமாக இருக்கிறது.









