“ஹமே பதா நஹி ஹமாரா பேட்டா கைசா மரா, கம்பெனி நே ஹமே பதாயா பி நஹி [எங்கள் மகன் எப்படி இறந்தார் என்றே எங்களுக்கு சரியாக தெரியாது. அவரது கம்பெனியும் எங்களுக்கு எதுவும் சொல்லவே இல்லை],” என்கிறார் நீலம் யாதவ்.
33 வயதான இவர், சோனிபட்டின் ராய் நகரில் தனது வீட்டிற்குள் நின்று பேசுகிறார். பேசும் பொழுது கண்களைப் பார்த்து பேசுவதை தவிர்த்துவிடுகிறார். 2007-ல், தான் திருமணமாகி வந்ததிலிருந்து எடுத்து வளர்த்த, இவரது மைத்துனரின் மகன், 27 வயது ராம் கமல், சுமார் ஆறு மாத காலத்திற்கு முன், உள்ளூர் உணவுசார் ரீடெயில் தொழிற்சாலையில் ஏசி பழுதுபார்க்கும் பிரிவில் பணிபுரியும் போது மரணம் அடைந்துள்ளார்.
நீலம், ஜூன் 29, 2023-ஐ, நல்ல வெயில் காயும் நாளாக நினைவுகூறுகிறார். அவரது மூன்று குழந்தைகள் - இரண்டு மகள்கள், ஒரு மகன், மற்றும் அவரது மாமனார் ஷோப்நாத் அனைவரும், பொதுவாக இவர் செய்யும் பருப்பு சாத (பருப்பு சூப் மற்றும் சாதம்) மதிய உணவை அப்போது தான் உண்டு முடித்திருந்தனர். நீலம் சமையலறையை சுத்தம் செய்து கொண்டிருக்க, ஷோப்நாத் மதிய உறக்கத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தார்.
சுமார் 1 மணியளவில், அழைப்பு மணி ஓசை கேட்டதும், கைகளை துடைத்து விட்டு, ஆடைகளை சரி செய்தவாறே, யார் என்று பார்க்க சென்றார். கைகளில் வண்டியின் சாவிக் கொத்தை வைத்து விளையாடிக்கொண்டே, இரண்டு நீல சீருடை அணிந்த ஆட்கள் நின்று கொண்டிருந்தனர். ஆடைகளை வைத்து அவர்கள் ராம் கமலின் கம்பெனியில் பணிபுரிபவர்கள் என்பதை அடையாளம் கண்டு கொண்டார். அதில் ஒருவர், “ராமுவிற்கு கரண்ட் ஷாக் அடித்து விட்டது, சிவில் மருத்துவமனைக்கு உடனடியாக வரவும்", எனக் கூறியதை நினைவு கூருகிறார் நீலம்.
“அவர் எப்படி இருக்கிறார், பயப்பட ஒன்றுமில்லையே, பேசுகிறாரா என நான் கேட்டதற்கு, இல்லை, பேசவில்லை என்று மட்டும் கூறினார்கள்,” என தழுதழுக்கும் குரலில் நீலம் கூறுகிறார். அவரும், ஷோப்நாத்தும், பொதுப் போக்குவரத்திற்கு காத்திருந்து நேரத்தை வீணாக்காமல், வந்திருந்தவர்களின் வண்டியிலேயே கொண்டு விடச் சொல்லி ஏறி சென்றுவிட்டனர். அவர்கள் மருத்துவமனையை அடைய சுமார் 20 நிமிடம் ஆனது.











