விவசாய நிலத்தில் குடும்பத்துக்காக கட்டப்பட்டிருந்த வீட்டின் மிச்சத்திலிருந்து 70 வயது பல்தேவ் கவுர் வருகிறார். இடியாத சுவர்களில் விரிசல்கள் இருந்தன.
“ஆலங்கட்டி மழை கூரையை அடித்துக் கொண்டிருந்த முழு இரவும், நாங்கள் தூங்கவில்லை,” என்கிறார் நரை கூடிய தலையில் துப்பட்டா போட்டு, பருத்தியிலான சல்வார் கமீஸ் அணிந்திருக்கும் பல்தேவ். “காலையில், நீர் கூரையிலிருந்து ஒழுகத் தொடங்கியதும், நாங்கள் வெளியே ஓடினோம்.”
சூரியன் உதித்ததும் எங்களின் வீடு நொறுங்கத் தொடங்கியது, என்கிறார் பல்தேவின் இளம் மருமகளான 26 வயது அமன்தீப் கவுர். “எங்களை சுற்றியிருந்து வீடு இடிந்து விழுந்தது,” என்கிறார் பல்தேவின் மூத்த மகனான 35 வயது பல்ஜிந்தெர் சிங்.
பல்தேவ் கவுரும் மூன்று குழந்தைகளை உள்ளடக்கிய ஏழு உறுப்பினர் கொண்ட அவரது குடும்பமும் இத்தகைய பேரழிவை இதற்கு முன் பார்த்ததில்லை. மார்ச் 2023-ம் ஆண்டுக்கு பிறகு நேர்ந்த எதிர்பாரா மழையும் ஆலங்கட்டி மழையும் ஸ்ரீமுக்த்சார் சாஹிப் மாவட்டத்தின் கித்தெர்பஹா ஒன்றியத்திலுள்ள பலாயானா கிராமத்தின் வீடுகளையும் பயிர்களையும் அழித்தன. பஞ்சாபின் தென் மேற்கு பகுதியிலுள்ள இந்த பகுதியின் தெற்கு எல்லை ராஜஸ்தானிலும் கிழக்கு எல்லை ஹரியானாவிலும் அமைந்திருக்கிறது.
ஆலங்கட்டி மழை மூன்று நாட்களுக்கு மேலாக தொடர்ந்ததில், பல்ஜிந்தெர் பாதிப்பை அடைந்தார். குடும்பத்துக்கு இருந்த 5 ஏக்கர் நிலத்துடன் சேர்த்து 10 ஏக்கர் நிலத்தையும் குத்தகைக்கு எடுக்க அர்தியாவிடமிருந்து (விவசாய விளைச்சல் ஏஜெண்ட்) 6.5 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தார்கள். கோதுமை விளையாமல் குடும்பமும் பிழைக்க முடியாது. கடனையும் அடைக்க முடியாது.
“அறுவடைக்கு பயிர் தயாரான போது ஆலங்கட்டி மழை வந்து அழித்தது. பிறகு கனமழை பெய்து மொத்த வயலையும் பல நாட்களுக்கு மூழ்கடித்தது. நீர் வெளியேற வழியில்லை. பயிர் நாசமானது,” என்கிறார் பல்ஜிந்தெர். “இப்போது கூட 15 ஏக்கர் நிலத்திலும் பயிர் நாசமாகிதான் கிடக்கிறது,” என்றார் ஏப்ரல் மாத நடுவே பல்ஜிந்தெர்.


















