“முதலில் வரும் இடது பக்கம் திரும்புங்கள். நேராக கொஞ்ச தூரம். கறுப்பு தூணில் ஃபாஜியின் புகைப்படம் இருக்கும். அதுதான் அவரது வீடு.” ராம்கர் சர்தாரனில் இருக்கும் மூத்த சைக்கிள் மெக்கானிக், முனையில் இருக்கும் வளைவை சுட்டிக் காட்டுகிறார். கிராமத்திலுள்ள மக்கள், அஜய்குமாரை ஃபாஜி (ராணுவ வீரர்) அல்லது தியாகி என குறிப்பிடுகின்றனர்.
ஆனால் அரசின் பார்வையிலோ அவர் இரண்டுமே இல்லை.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு எதிராக நின்று இந்திய எல்லையை தன் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை அந்த 23 வயது இளைஞர் காத்து நின்றது முக்கியமாக இல்லை. அவரின் முதிய, நிலமற்ற தலித் பெற்றோர் பென்ஷன் அல்லது மகனுக்கான தியாகி என்ற அங்கீகாரம் ஆகியவற்றை குறித்து கனவு கூட காண முடியாது. முன்னாள் ராணுவ வீரருக்கான சுகாதார திட்டம் அல்லது கேண்டீன் கடைகளின் தள்ளுபடி என ராணுவ வீரர்களுக்கான எந்தப் பலனையும் அவர்கள் பெற முடியாது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி அஜய் குமார் சிப்பாயும் அல்ல, தியாகியும் அல்ல.
வெறும் அக்னிவீர்தான்.
லூதியானா மாவட்டத்தில் இருக்கும் இந்த கிராமத்தில், அரசு ஆவணம் முக்கியம். கிராண்ட் ட்ரங்க் சாலையில் 45 நிமிட பயணத்துக்குப் பிறகு, அழகான கடுக்காய் பூக்கள் பூத்திருக்கும் வயல்கள், ராம்கர் சர்தரன் நோக்கி உங்களை அழைத்து செல்லும். அங்குள்ள சுவர்களில் ஏற்கனவே தகவல்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. ராணுவ உடையில் அஜயின் அழகிய புகைப்படங்களை தாங்கிய பதாகைகள் ஆங்காங்கே இருக்கின்றன. அவரை தியாகி பகத் சிங்குக்கு இணையாக அங்கு வைத்திருந்தனர். தோழர்களுடன் சென்று பகத் சிங் மரணத்தைத் தழுவி தொண்ணூறு ஆண்டுகள் ஆகி விட்டன. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் அவருக்கு தியாகி அங்கீகாரம் வழங்கவே இல்லை.
ஒரு பதாகையில் இப்படி இருக்கிறது:
நவ்ஜவான் ஜாட் உத்டே நே
தான் நிஜாம் பாதல் ஜண்டே நே,
பகத் சிங் அஜ் வி பைதா ஹுந்தே நே,
பாஸ் நாம் பாதல் ஜாந்தே நே…
(இளைஞர்கள் உயர்ந்தால்
மகுடங்கள் தாழும்.
அன்றாடம் பகத் சிங் பிறக்கிறார்
வெவ்வேறு பெயர்களை இவ்வுலகம் அவருக்கு கொடுக்கிறது…)













