2023ம் ஆண்டின் ஜூன் மாத மத்தியில் அவுரங்காபாத்தின் டிவிஷினல் கமிஷனரின் (DC) அலுவலகத்துக்கு முன் தர்ணா அமர்ந்தார் அஜிம் ஷேக்.
கொளுத்தும் வெயிலிலும் 26 வயது ஆகும் அவர், நீரை தவிர எதையும் உட்கொள்ளவில்லை. உண்ணாவிரதம் முடிந்தபோது, அவர் பலவீனமாக மயக்கத்தில் இருந்தார். நேராக நடக்கக்கூட முடியவில்லை.
அவரின் கோரிக்கை என்ன? காவல்துறையில் ஒரு புகார் அளிக்க வேண்டும். ஆனால் அவரின் கிராமத்துக்கருகே இருக்கும் ஜால்னா மாவட்ட காவல் நிலையத்தில் அவரது புகார் பதிவு செய்யப்படவில்லை.
மே 19, 2023 அன்று மராத்தா சமூகத்தை சேர்ந்த உள்ளூர் சொனாவனே குடும்பத்தின் உறுப்பினர்கள், அஜிமின் வீட்டுக்குள் இரவு 11 மணிக்கு புகுந்து குடும்பத்தினரை கற்களாலும் தடிகளாலும் தாக்கினர். அவரின் சகோதரருக்கும் பெற்றோருக்கும் காயங்கள். “முதிய வயதில் இருக்கும் என் தாயை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருந்தது. அது கொடூரமான தாக்குதல்,” என்கிறார் அவர் பாரியிடம். “அவர்கள் 1.5 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட நகையையும் ரொக்கத்தையும் கூட திருடிச் சென்றனர்.”
அக்கும்பலில் இருந்ததாக அஜிம் சொன்ன நிதின் சொனாவனேவிடம் கட்டுரையாளர் பேச முயற்சித்தபோது, அவர் கருத்து தெரிவிக்க மறுத்து, “இச்சம்பவம் பற்றி எதுவும் எனக்கு தெரியாது,” எனக் கூறியிருக்கிறார்.
அஜிமின் வீடு, எட்டு ஏக்கர் நிலத்தில் அமைந்திருக்கிறது. மத்திய மகாராஷ்டிராவின் பொகார்தான் தாலுகாவிலுள்ள பலேஷ்கடா முர்தாத் கிராமத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அஜிமின் வீடு இருக்கிறது.
“அது தனியாக, இரவில் அமைதியாக இருக்கும்,” என்கிறார் அவர். “எங்களால் உதவிக்கு கூட யாரையும அழைக்க முடியாது.”
வணிக மோதலால், தாக்குதல் நடந்திருக்குமென அஜிம் சந்தேகிக்கிறார். அவரது கிராமத்திலேயே ஜெசிபி இயந்திரத்தை இயக்குவது இரு குடும்பங்கள்தாம். “அருகே (ஜுலி) அணை இருக்கிறது,” என்கிறார் அஜிம். “நீர்ப்பகுதியின் வண்டல் மண், நல்ல அறுவடை கிடைக்க விவசாயிகளுக்கு தேவைப்படுகிறது. நாங்கள் வண்டல் மண் எடுத்து வந்து விவசாயிகளுக்குக் கொடுத்து சம்பாதிக்கிறோம்.”
இரு குடும்பங்களும் ஒரு மணி நேரத்துக்கு 80 ரூபாய் விவசாயிகளுக்கு கட்டணம் வசூலிக்கின்றனர். “என்னுடைய கட்டணத்தை 70 ரூபாய்க்கு நான் குறைத்ததும் அதிக வியாபாரம் எனக்கு கிடைத்தது,” என்கிறார் அஜிம். “அதற்கு பிறகு நான் மிரட்டப்பட்டேன். என்னுடைய கட்டணத்தை நான் உயர்த்தாததால், என் வீட்டை அவர்கள் தாக்கினர். முன்னால் நிறுத்தி வைத்திருந்த ஜெசிபி இயந்திரத்தையும் அவர்கள் உடைத்திருக்கின்றனர்.”
அடுத்த நாள், அவரது கிராமம் இடம்பெற்றிருக்கும் பொகார்தான் தாலுகா காவல்நிலையத்துக்கு சென்றார். ஆனால் எஃப்ஐஆர் பதிவு செய்ய காவல்துறை மறுப்பு தெரிவித்திருக்கிறது. பதிலாக, “காவல்துறை என்னை மிரட்டியது,” என நினைவுகூருகிறார் அவர். “அந்த குடும்பத்துக்கு எதிராக வழக்கு கொடுப்பதால் என் குடும்பம் பிரச்சினையை சந்திக்கும் என்றார்கள். அவர்கள் அரசியல் செல்வாக்கு கொண்டவர்கள்.”
புகார் பதிவு செய்யப்பட வேண்டும் என அஜிம் வலியுறுத்தியதும், எதிர்தரப்பு பல புகார்களை அவர் மீது பதிவு செய்து கிராமத்தை விட்டே விரட்டி விடுமென காவல்துறை எச்சரித்திருக்கிறது.
“இது எப்படி சட்ட ஒழுங்காக இருக்க முடியும்?” எனக் கேட்கிறார் அவர். “அது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல். கிட்டத்தட்ட 25-30 பேர் என் வீட்டுக்கு வந்து பிரச்சினை செய்தனர். அது அச்சமூட்டுவதாக இருந்தது.”
அஜிமை பொறுத்தவரை அது கொள்கை சார்ந்த பிரச்சினை. சுயமரியாதை சார்ந்த விஷயம். மராத்தா குடும்பம் விளைவுகளிலிருந்து தப்பித்து விட முடியுமென்பது சரி கிடையாது. எனவே “நான் பின் வாங்கவில்லை. காவல்துறை என் எஃப்ஐஆரை பதிவு செய்யும் வரை நான் தொடர்ந்து முயற்சி செய்தேன்.”
ஒரு கட்டத்தில் காவல்துறை ஒப்புக் கொண்ட போதும் புகாரில் எல்லா தகவல்களும் இடம்பெறாது என சொல்லப்பட்டிருக்கிறது. “எங்களிடம் திருடப்பட்ட விஷயத்தை குறித்து பதிவு செய்ய காவல்துறை மறுத்துவிட்டது,” என்கிறார் அவர். “அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.”
எனவே அவர் கிராமப் பஞ்சாயத்துக்கு சென்று கிராமத்தின் முக்கியமான உறுப்பினர்கள் முன் முறையிட்டார். பல தலைமுறைகளாக அஜிமின் குடும்பம் கிராமத்தில் வசித்து வருகிறது. கிராமத்திலிருந்து ஆதரவு கிடைக்குமென நம்பினார். “கிராமத்து மக்கள் அனைவரிடமும் நல்ல உறவு கொண்டிருந்தேன்,” என்கிறார் அவர். “அவர்கள் எனக்கு ஆதரவாக இருப்பார்களென நம்பினேன்.”
வாக்குமூலத்தை எல்லா விவரங்களுடன் அச்சடித்து கிராமத்தினர் ஆதரவளிக்கும் வண்ணம் கையெழுத்திட வேண்டினார். பிரச்சினையை அவர், அவுரங்காபாத் டிவிஷினல் கமிஷனருக்கு கொண்டு போக விரும்பினார்.
20 பேர் மட்டும்தான் கையெழுத்திட்டனர். அவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள். “சிலர் எனக்கு ஆதரவாக இருப்பதாக தனிப்பட்ட முறையில் கூறினார்கள். வெளிப்படையாக அதை தெரிவிக்க அஞ்சினார்கள்.”
அதுதான் கிராமத்தில் இருக்கும் பிளவுகள் திடுமென வெளிப்பட்ட சமயம். “மத ரீதியாக என் கிராமம் பிளவுற்றிருந்ததை நான் அறிந்திருக்கவே இல்லை,” என்கிறார் அஜிம். பல இந்துக்கள் வெளிப்படையாக பேச விரும்பவில்லை. பேசியவர்களும், ஆதரவு குறைவாக இருந்ததற்கு பின்னால் மதரீதியான காரணங்கள் இல்லை என்றே சொன்னார்கள்.
அச்சத்தின் காரணமாக நிலைப்பாடு எடுக்க முடியவில்லை என பல இந்து விவசாயிகள் தனிப்பட்ட முறையில் கூறினர். நிலைமை மோசமாக இருப்பதாக சொன்ன அவர்கள், எந்தவித பிரச்சினையிலும் சிக்கிக் கொள்ளக்கூடாதென நினைப்பதாகவும் சொன்னார்கள்.
20 வருடங்களாக ஊர்த்தலைவராக இருக்கும் 65 வயது பக்வான் சொனாவனே, முன்பிருந்ததை போல் மதரீதியிலான பிரச்சினைகள் தற்போது இல்லையென தெரிவித்தார். “இரு மதங்களை சேர்ந்த இரு குடும்பங்களுக்கு இடையில் இப்படி ஒரு மோதல் ஏற்படுகையில், அது மொத்த கிராமத்தையும் பாதிக்கும்,” என்கிறார் அவர்.
“அஜிம் பக்கத்தில் தவறில்லை. ஆனால் கிராமவாசிகள் அவரவர் வாழ்க்கைகளை பார்த்துக் கொண்டு இப்பிரச்சினையில் தலையிடாமல் இருக்கவே விரும்பினார்கள்,” என்கிற சொனாவனேவும் ஒரு மராத்தாதான். “கடைசியாக இந்து - இஸ்லாமியர் மோதல் எங்கள் கிராமத்தில் 15 வருடங்களுக்கு முன் நேர்ந்தது. அதற்கு பிறகு சமீபமாக, எந்த பிரச்சினையும் இல்லை,” என்கிறார் அவர்.
பலெக்ஷெதா முர்தாத் கிராமம், மொத்த மாவட்டமான ஜல்னாவும் மொத்த மாநிலம் மகாராஷ்டிராவும் இருக்கும் நிலையின் ஒரு சோற்று பதம்தான்.
மத அறிஞரான சையது ஜாகீர் கஜாமியா, மார்ச் 26, 2023 அன்று, ஜால்னா மாவட்ட அன்வா கிராமத்திலுள்ள மசூதியில் அமைதியாக குரான் படித்துக் கொண்டிருந்தார். “அப்போது மூன்று முகம் தெரியாத நபர்கள் மசூதிக்குள் அத்துமீறி நுழைந்து என்னை ஜெய்ஸ்ரீராம் சொல்ல சொன்னார்கள்,” என காவல்துறையிடம் சொல்லியிருக்கிறார் 26 வயது நிறைந்த அவர். “நான் மறுத்ததும் அவர்கள் என் நெஞ்சில் உதைத்து, அடித்தார்கள். தாடியை பிடித்து இழுத்தார்கள்.”
அவர் கொடுத்த வாக்குமூலத்தின்படி, அந்த மனிதர்கள் கறுப்பு முகமூடிகள் அணிந்திருந்தனர். அவர் மயக்கம் போட்டு விழும் வரை அடித்துவிட்டு, தாடியை மழித்திருக்கின்றனர். தற்போது அவர் 100 கிமீ தொலைவில் இருக்கும் அவுரங்காபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரின் அனுபவம் ஒன்றும் புதிதல்ல. அண்டை கிராமத்தின் தலைவரான அப்துல் சத்தார், நிலவரம் மிகவும் சிக்கலுக்குரியதாக இருப்பதாக சொல்கிறார். “இஸ்லாமியர்களுக்கு நம்பிக்கை அளிக்கும்வகையில் காவல்துறை ஒன்றும் செய்யவில்லை,” என்கிறார் அவர். “அதிகமாக இவை செய்தியாவதில்லை. இவைதாம் எங்களின் வாழ்க்கைகளாக மாறி விட்டிருக்கின்றன.”
ஜூன் 19, 2023 அன்று ஜால்னா காவல்துறை, சிறு விவசாயியான தெளஃபீக் பக்வானின் 18 வயது மகன் மீது “மத உணர்வுகளை புண்படுத்தி” விட்டதாக வழக்கு பதிவு செய்தது. அவர், 17ம் நூற்றாண்டு மொகலாய அரசரான அவுரங்கசீப்பின் படத்தை பதிவேற்றியிருந்தார், அவ்வளவுதான்.
அவரின் அண்ணனான 26 வயது ஷஃபீக், சொந்த ஊர் ஹஸ்னாபாத்தில் இருக்கும் வலதுசாரி குழுக்கள், தெளஃபீக்கின் பதிவை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து காவல் நிலையத்துக்கு சென்றதாக குறிப்பிடுகிறார். “காவல்துறை, யாரெல்லாம் புகைப்படத்தை பதிவேற்றினார்கள் என துப்பறிய தெளஃபீக்கின் செல்பேசியை கைப்பற்றியது,” என்கிறார் ஷஃபீக். “என் தம்பிக்கு வயது 18-தான். அவன் கலக்கத்தில் இருக்கிறான்.”
ஹஸ்னாபாத்தும் அஜிமின் கிராமம் இருக்கும் பொகார்தான் தாலுகாவில்தான் இருக்கிறது. சமூகதள பதிவை கொண்டு வழக்கு பதிவதில் காவல்துறை காட்டும் ஒத்துழைப்பும் தன்னார்வமும், அஜிமுக்கு நேரடி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் நடக்கவில்லை.
நீர்த்து போக வைக்கப்பட்ட எஃப்ஐஆரைத்தான் பதிவு செய்ய முடியுமென காவல்துறை சொன்ன பிறகு, கிராமத்தின் 20 இஸ்லாமியர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை எடுத்துக் கொண்டு அவுரங்காபாத்தின் DC அலுவலகத்துக்கு சென்றார். அவரது கிராமத்தை சேர்ந்த இன்னும் சில இஸ்லாமிய விவசாயிகளும் அவரது போராட்டத்தில் பங்கெடுத்தனர். “எங்களை பற்றி எவரும் பொருட்படுத்துவதாக தெரியவில்லை,” என்கிறார் அவர். “அதிகாரிகளின் கண்களுக்கு நாங்கள் தெரிவதில்லை.”
அஜிமையும் பிற போராட்டக்காரர்களையும் ஐந்து நாட்களுக்கு பிறகு DC சந்தித்து, நடவடிக்கை எடுக்க உறுதியளித்தார். ஜால்னாவின் காவல் கண்காணிப்பாளரை சென்று சந்திக்கும்படி அவர்களிடம் அவர் கூறினார்.
அவுரங்காபாத்தில் நடத்திய போராட்டத்துக்கு பிறகு, ஜால்னா டவுனின் காவல் கண்காணிப்பாளரை அஜிம் சந்தித்து, கடிதத்தை கொடுத்தார். பொகார்தான் காவல் நிலையத்தை காவல் கண்காணிப்பாளர் தொடர்பு கொண்டு, நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
இறுதியாக ஜூலை 14ம் தேதி, பொகார்தான் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இரு மாதங்களுக்கு பிறகு. நிதின் உட்பட 19 பேரை வழக்கில் அது பதிவிட்டது. சட்டவிரோதமாக கூடியது, கலவரம் செய்தது, ஆபத்தான ஆயுதங்களை கொண்டு காயப்படுத்தியது, ரூ.50-க்கும் மேற்பட்ட மதிப்பிலான சேதத்தை உருவாக்கியது, மிரட்டல் போன்ற குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆனாலும் நகை மற்றும் பணம் திருடிய விவரம் எஃப்ஐஆரில் இடம்பெறவில்லை.
“உண்மையில் வழக்கை பதிவு செய்யாத காரணத்துக்காக காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்,” என்கிறார் அஜிம். “ஆனால் அவ்வளவு எதிர்பார்க்க முடியாது. இதே போன்றவொரு சம்பவத்தில் இஸ்லாமியர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தால், அது முற்றிலும் வேறு கதையாக இருந்திருக்கும்.”
பொகார்தான் காவல் நிலைய ஆய்வாளருடன் பேச இக்கட்டுரையாளர் எடுத்த தொடர் முயற்சிகளுக்கு எந்த பலனும் கிட்டவில்லை.
தமிழில்: ராஜசங்கீதன்