ஒரு புதியவரின் கேள்வி மற்றும் ஒரு துண்டு காகிதம் ஆகியவற்றில்தான் எல்லாமும் தொடங்கியது.

12 வயது கம்லேஷ் டண்டோலியா, ரதெட் கிராமத்தில் இருக்கும் தன் வீட்டருகே இருக்கும் சுற்றுலா விருந்தினர் விடுதி அருகே சுற்றிக் கொண்டிருக்கும்போது ஒரு புதியவரை சந்தித்தார். “பரியா தெரியுமா என என்னைக் கேட்டார்.” கம்லேஷ் பதிலளிப்பதற்குள், “அவர் ஒரு காகிதத்தை என்னிடம் கொடுத்து வாசிக்க சொன்னார்.”

புதியவர் நியாயமாகதான் கேட்டார். தமியா ஒன்றியத்தில் இருக்கும் இந்த பாதாள்கோட் பள்ளத்தாக்கில் வசிக்கும் பலரும் மத்தியப் பிரதேசத்தில் எளிதில் பாதிக்கத்தக்க பழங்குடியாக (PVTG) வகைப்படுத்தப்பட்டிருக்கும் பரியா சமூகத்தை சேர்ந்தவர்கள். கம்லேஷ் ஒரு பரியா. அச்சமூகத்தின் பரியாட்டி மொழியை சரளமாக பேசுபவர்.

இளம் சிறுவன் நம்பிக்கையோடு அந்த காகிதத்தை முதலில் படித்தான். இச்சமூகம் பற்றிய பொது தகவல்களை அது கொண்டிருந்தது. தேவநாகரி எழுத்தில் இருந்ததால், “படிக்க சுலபமாக இருந்தது.” இரண்டாம் பகுதியில் பொருட்களின் பெயர்கள் இருந்தன. கம்லேஷ் தடுமாறத் தொடங்கினார். “வார்த்தைகள் பரியாட்டி மொழியில் இருந்தன,” என நினைவுகூருகிறார். “ஒலி பரிச்சயமாக இருந்தது. ஆனால் வார்த்தைகள் வித்தியாசமாக இருந்தன.”

சற்று தாமதித்து நினைவுகூருகிறார். “ஒரு வார்த்தை இருக்கிறது. அது ஒருவகை காட்டு மூலிகை. அதை நான் எழுதியிருக்கலாம்,” என்கிறார் அதிருப்தியில் தலையை அசைத்தபடி. “இப்போது அந்த பெயரும் நினைவில் இல்லை, அர்த்தமும் நினைவில் இல்லை.”

கம்லேஷின் நெருக்கடி அவரை யோசிக்க வைத்தது. “பரியாட்டி மொழியில் எத்தனை வார்த்தைகள் எனக்கு தெரியாது என யோசித்தேன்.” சரளமாக அம்மொழி தெரியுமென நினைத்திருந்தார். அவரை வளர்த்த தாத்தா-பாட்டியுடன் அந்த மொழியை பேசிதான் அவர் வளர்ந்தார். “என்னுடைய பதின்வயதுகள் வரை நான் அம்மொழியை மட்டும்தான் பேசினேன். இப்போதும் இந்தி பேச எனக்கு தடுமாறும்,” என்கிறார் சிரித்தபடி.

PHOTO • Ritu Sharma
PHOTO • Ritu Sharma

இடது: கம்லேஷ் டண்டோலியா 29 வயது விவசாயியும் மொழி பாதுகாப்பாளரும் ஆவார். எளிதில் பாதிக்கத்தக்க பழங்குடி வகையை (PVTG) சேர்ந்தவர். வலது: மத்தியப்பிரதேசத்தின் சிந்த்வாடா மாவட்ட ராதெட் கிராமத்தில் அவரது வீடு இருக்கிறது

PHOTO • Ritu Sharma
PHOTO • Ritu Sharma

இடது: தமியா ஒன்றிய பெயர்ப் பலகை, பாதாள்கோட் பள்ளத்தாக்குக்கு வரவேற்கிறது. சத்புரா மலைகளின் 12 கிராமங்களில் பரியா சமூகத்தினர் வசிக்கின்றனர். வீட்டுக்கு செல்ல உள்ளூர்வாசிகள் டாக்சிகள் பிடிக்கும் இடம் இது. வலது: கம்லேஷ் வீட்டுக்கு வெளியே உள்ள சாலை, மத்தியப் பிரதேசத்தின் பல சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வழி

மத்தியப்பிரதேசத்தில் கிட்டத்தட்ட இரண்டு லட்ச பரியா உறுப்பினர்கள் (பட்டியல் பழங்குடி புள்ளிவிவரம் 2013 ) மத்தியப்பிரதேசத்தில் வசித்தாலும் 381 பேர்தான் பரியாட்டி தாய்மொழியில் பேசுகின்றனர். இந்தத் தரவு, இந்திய மொழிகள் கணக்கெடுப்பு 2001ம் ஆண்டு பிரசுரித்த தரவு களை சேர்ந்ததுதான். 2011ம் ஆண்டில் வெளியான மக்கள்தொகை கணக்கெடுப்பில் பரியாட்டி தனியாக பட்டியலிடப்படவில்லை. பெயர்சூட்டப்படாத தாய்மொழிகளுக்கான பிரிவில் அது மறைக்கப்பட்டிருந்தது. 10,000-க்கும் குறைவான எண்ணிக்கையில் பேசுபவர்களின் மொழிகள் அப்பிரிவில் இருக்கும்.

இச்சமூகத்தினர் ஒரு காலத்தில் மகாராஷ்டிர அரசர்களுக்கு சுமை தூக்குபவர்களாக இருந்ததாக குறிப்பிடுகிறது அரசு வெளியிட்ட இக்காணொளி. நாக்பூரின் முதோஜி II (அப்பா சாகெப் என்றும் அழைக்கப்படுவார்) 1818ம் ஆண்டு நடந்த மூன்றாம் ஆங்கில மராத்தா போரில் தோற்கடிக்கப்பட்டதால் தப்பியோடினார். பல பரியாக்களும் அவரை பின்தொடர்ந்து சென்று மத்தியப்பிரதேசத்தின் சிண்ட்வடா, பெதுல் மற்றும் பச்மாரி ஆகிய காடுகளில் வசிக்கத் தொடங்கினர்.

இன்று அச்சமூகத்தினர் தங்களை பரியா (அல்லது பர்தி) என அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். அவர்களின் பாரம்பரியத் தொழில் மாற்று விவசாயம்தான். மருத்துவ மூலிகைகள் பற்றிய பரந்துபட்ட அறிவும் அவர்களிடம் இருப்பதால், வருடம் முழுக்க அந்த ஊருக்கு மக்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். “ ஜடிபுட்டி எங்களிடம் வாங்க அவர்கள் இங்கு வருகிறார்கள். பல பெரியவர்களிடம் உரிமம் இருப்பதால், இந்த மூலிகைகளை விற்க அவர்கள் எங்கும் செல்ல முடியும்,” என்கிறார் கம்லேஷ்.

இச்செடிகளின் அறிவும் மொழியைப் போலதான். “கிராமத்தின் பெரியவர்களுக்கு மட்டும்தான் தெரியும்,” என்கிறார் அவர்.

இளம் தலைமுறை இந்த பாரம்பரிய அறிவை தொடரவில்லை. புர்டா விவசாயம் (பரியாட்டியில் இனிப்பு சோளம்) மற்றும் சராக் (பரியாட்டியில் கடப்பா பாதாம்), இலுப்பை, நெல்லிக்காய் மற்றும் விறகுகள் ஆகியவற்றால் வருடம் முழுக்க அவர்கள் பிழைப்பு ஓட்ட முடிகிறது.

இச்சமூகத்துக்கான சாலை வசதி சொல்லிக் கொள்ளும்படி இல்லை. மகாதேவர் கோவில், ராஜா கோ குஃபா போன்ற சுற்றுலா தலங்கள் அந்த பள்ளத்தாக்கில் இருந்தாலும் இதுவே நிலை. அவர்கள் அதிகமாக பாதாள்கோட் பகுதியில், சத்புரா மலைத்தொடரின் மலைகளிலுள்ள 12 கிராமங்களில் வாழ்கின்றனர். இந்தூர் போன்ற அருகாமை நகரங்களிலுள்ள விடுதப் பள்ளிகளில் சமூகத்தின் குழந்தைகள் வசித்து படிக்கின்றனர்.

PHOTO • Ritu Sharma
PHOTO • Ritu Sharma

இடது: கம்லேஷ் (இடப்பக்க ஓரம்) குடும்பத்துடன் தன் வீட்டுக்கு வெளியே. சகோதரரின் மனைவி, அவர்களின் மகன்களான சந்தீப் (ஆரஞ்சு நிற சட்டை) மற்றும் அமீத், கம்லேஷின் தாய் ஃபுல்லேபாய் (வலது ஓரம்) மற்றும் பாட்டி சுக்திபாய் (இளஞ்சிவப்பு மேற்சட்டை) ஆகியோர். வலது: சமூகத்தின் பாரம்பரிய வாழ்க்கைமுறையில் மாற்று விவசாயம் இருக்கிறது. இன்று, இளம் தலைமுறையினர் இனிப்பு சோள விவசாயம் மற்றும் விறகு உள்ளிட்ட காட்டுற்பத்தி சேகரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றனர்

*****

பத்து வருடங்களுக்கு பிறகு, முதிய கம்லேஷ் ஆடுமாடுகளை மத்திய இந்தியாவின் மலைகளில் மேய்த்துக் கொண்டிருந்தபோது இன்னொரு புதியவரை சந்தித்தார். அவரின் புன்னகை விரிந்து, அந்த தேஜாவூ கணத்தை நினைவுகூருகிறார். காரை நிறுத்தி அந்த புதியவர் கேள்வி கேட்கவிருந்தபோது, கம்லேஷ் தனக்குள், “இவரும் ஒரு காகிதத்தை கொடுத்து என்னை வாசிக்க சொல்லலாம்,” என நினைத்தார்.

குடும்ப விவசாயத்தில் உதவவென 12ம் வகுப்பில் கல்வியை இடைநிறுத்தினார் கம்லேஷ். அவருக்கும் ஏழு சகோதர்ர்களுக்கும் கல்லூரி மற்றும் பள்ளி கட்டணம் கட்டுமளவுக்கு பணம் இருக்கவில்லை. கிராமத்தில் 5ம் வகுப்பு வரை ஓர் ஆரம்பப் பள்ளி இருந்தது. அதற்கு பிறகு, சிறுவர்கள் தமியா மற்றும் பக்கத்து நகரங்களின் விடுதிப் பள்ளிகளுக்கு சென்று படிக்கின்றனர். சிறுமிகள் படிப்பை நிறுத்தி விடுகின்றனர்.

மொழியை பாதுகாத்து அடுத்த தலைமுறையும் பரியாட்டி மொழியை நினைவில் கொண்டிருக்க 22 வயது கம்லேஷ் விரும்புகிறாரா என அந்தப் புதியவர் கேட்டார். கேள்வி அவருக்கு ஆர்வத்தைக் கொடுத்த, உடனே அவர் ஒப்புக் கொண்டார்.

அந்த புதியவர், டேராடூனிலுள்ள மொழி மற்றும் மொழியியல் சார்ந்த நிறுவனத்தில் மொழி ஆய்வாளராக இருக்கும் பவன் குமார் ஆவார். பரியாட்டி மொழியை ஆவணப்படுத்த கிராமத்துக்கு வந்திருந்தார். அவர் ஏற்கனவே பல கிராமங்களுக்கு சென்றதில் சரளமாக பரியாட்டி பேசக் கூடிய எவரையும் சந்திக்க முடியவில்லை. மூன்று, நான்கு வருடங்களுக்கு அப்பகுதியில் பவன் குமார் தங்கி “பல கட்டுரைகளை நாங்கள் டிஜிட்டலில் பிரசுரித்தோம். ஒரு புத்தகம் கூட பரியாட்டியில் பதிப்பித்தோம்,” என நினைவுகூருகிறார் கம்லேஷ்.

PHOTO • Ritu Sharma
PHOTO • Ritu Sharma

இடது: கம்லேஷ் குமார் ஒரு விவசாயி. 12ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டு குடும்பத்துக்கு விவசாயம் பார்க்க உதவத் தொடங்கினார். வலது: 80 வயதுகளில் இருக்கும் கம்லேஷின் பாட்டியான சுக்திபாய் டண்டோலியா பரியாட்டிதான் பேசுகிறார். அவர்தான் கம்லேஷுக்கு பரியாட்டி கற்றுக் கொடுத்தவர்

PHOTO • Ritu Sharma
PHOTO • Ritu Sharma

இடது: மொழி வளர்ச்சிக் குழுவினர் மற்றும் கம்லேஷ் குழுவினரால் உருவாக்கப்பட்ட எழுத்துகளின் படம். வலது: பரியாட்டி வார்த்தைகளுக்கான எழுத்துகள் உள்ளிட்ட பல புத்தகங்களை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்

கம்லேஷ் ஒப்புக்கொண்டதும் முதல் வேலையாக, தொந்தரவின்றி அவர் பணியாற்றுவதற்கான இடம் கண்டுபிடிப்பதே இருந்தது. “சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்து செல்வதால் இங்கு எப்போதும் சத்தம் நிறைந்திருக்கும்.” பரியா மொழி வளர்ச்சிக் குழு உருவாக்க அவர் இன்னொரு கிராமத்துக்கு இடம்பெயர்ந்தார்.

ஒரு மாதத்தில், கம்லேஷும் அவரது குழுவினரும் வெற்றிகரமாக பரியாட்டி எழுத்து களை உருவாக்கினர். “ஒவ்வொரு எழுத்துக்கும் நான் படங்கள் வரைந்தேன்.” வார்த்தைகளை தேர்ந்தெடுக்க மூத்தவர்கள் உதவினர். ஆனால் அவர் அதோடு நிறுத்தவில்லை. ஆய்வாளரின் உதவியோடு, எழுத்துப் பட்டியலை அவரது குழு 500 டிஜிட்டல் பிரதி எடுத்தது. இரு குழுக்களாக பிரிந்து அவர்கள் மோட்டார் பைக்குகளில் சென்று இந்தப் பிரதிகளை நர்சிங்பூர், சியோனி, சிண்ட்வடா மற்றும் ஹோஷாங்காபாத் (நர்மதாபுரம் என தற்போது அழைக்கப்படுகிறது) போன்ற நகரங்களிலுள்ள ஆரம்பப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு விநியோகிக்கின்றனர். “நான் மட்டுமே தமியா, ஹர்ராய் மற்றும் ஜுன்னார்தியோ பகுதிகளிலுள்ள 250 ஆரம்பப் பள்ளிகளுகு விநியோகித்திருப்பேன்,” என்கிறார் கம்லேஷ்.

இந்த இடங்கள் 85 கிலோமீட்டர் அளவுக்கு தூரமாக இருந்தால், “நாங்கள் 3-4 நாட்களுக்கு வீடு திரும்ப மாட்டோம். வேறு எவர் வீட்டிலாவது இரவு தங்கிவிட்டு, காலை எழுந்து மீண்டும் விநியோகிக்க செல்வோம்.”

பெரும்பாலான ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு அவர்களின் சமூகத்தை பற்றி அதிகம் தெரியவில்லை என்கிறார் கம்லேஷ். “ஆனால் அவர்கள் எங்களின் முயற்சிகளை பாராட்டினார்கள். விளைவாக பரியாட்டி மொழி பேசப்படுவது நின்றுபோன கிராமங்களுக்கு எல்லாம் சென்றோம்.”

PHOTO • Ritu Sharma
PHOTO • Ritu Sharma

அன்றாடப் பொருட்களை சேமித்து வைப்பதற்கான சிறு அலமாரிதான் அரீயா (மாதேச்சி என்றும் குறிக்கப்படுகிறது). அதை குழந்தைகள் தங்களுக்கு பரிச்சயமான பொருட்களை தெரிந்து கொள்ளவென கம்லேஷ் பரியாட்டி எழுத்துகளுக்கான பிரதியில் பயன்படுத்தியிருக்கிறார்

PHOTO • Ritu Sharma
PHOTO • Ritu Sharma

இடது: பரியாட்டி மொழியை ஆவணப்படுத்த பயன்படுத்தப்படும் காகிதங்களை கம்லேஷ் காட்டுகிறார். மற்றவை கோவிட் நேரத்தில் எங்கோ வைக்கப்பட்டுவிட்டன. வலது: குழு உரையாடல்களுக்கு பிறகு எழுத்து சார்ட்கள் உருவாக்கப்படுகின்றன. சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் குறித்த செய்திகளை அவை கொண்டிருக்கின்றன

ஒரு வருடத்தில் கம்லேஷும் அவரது மொழி வளர்ச்சிக் குழுவினரும் பல புத்தகங்களை எழுதியிருக்கின்றனர். அதில் வார்த்தைக்கான கூட்டெழுத்துகள் வழிகாட்டி யும், பரியாட்டி  மொழியில் மூன்று சுகாதாரக் கதைகளும் மூன்று அறக் கதைகளும் அடக்கம். “முதலில் எல்லாவற்றையும் காகிதத்தில் எழுதினோம்,” என்கிறார் அவர், வீட்டில் ஒரு பெட்டிக்குள் வைத்திருந்த சில கலர் சார்ட் பேப்பர்களை எடுத்துக் காட்டி. இச்சமூகத்தின் முயற்சியால் பரியாட்டியில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டது.

“இணையதளத்தின் இரண்டாம் கட்டம் குறித்து நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம்,” என்கிறார் அவர் ராதெடிலுள்ள அவரின் வீட்டில். “பாக்கெட் புத்தகங்களின் டிஜிட்டல் பிரதிகளையும் நாட்டுப்புற பாடல்களையும் விடுகதைகளையும் குழந்தைகளுக்கான வார்த்தை விளையாடுகளையும் பகிர நாங்கள் தயாராக இருந்தோம்… ஆனால் கோவிட் தொற்று தாக்கியது.” அவரிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லை. இந்த வருடம்தான் மின்னஞ்சல் அனுப்ப கூட அவர் கற்றுக் கொண்டார்.

மிச்சமிருந்தவற்றையும் அவர் பக்கத்து கிராமத்தில் இருந்த குழு உறுப்பினர்களுக்கு கொடுத்து விட்டார். அவர்களுடன் தொடர்பில் இல்லை என்கிறார். “அவர்களிடம் இன்னும் அவை இருக்கிறதா என தெரியவில்லை.”

ஆவணப்படுத்துதலை கம்லேஷ் நிறுத்த, தொற்று மட்டுமே காரணமில்லை. இச்சமூகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் இருந்த ஆர்வமின்மை, பரியாட்டியை ஆவணப்படுத்துவதில் பெரும் தடைகளாக இருப்பதாக அவர் சொல்கிறார். “பெரியவர்கள் எழுத விரும்புவதில்லை. இளைஞர்கள் பேச விரும்புவதில்லை,” என்கிறார். “மெல்ல எனக்கும் நம்பிக்கை போய், கடைசியில் நிறுத்தி விட்டேன்.”

PHOTO • Ritu Sharma

கம்லேஷ் மற்றும் பரியாட்டி மொழி வளர்ச்சிக் குழுவினரின் முயற்சிகளால் பரியாட்டி மற்றும் ஆங்கில மொழிகளை கொண்ட இணையதளம் உருவாக்கப்பட்டது

PHOTO • Ritu Sharma

இணையதள உருவாக்கத்தின் முதல் கட்டத்தில் கம்லேஷும் அவரது குழுவினரும் சமூகம், மொழி, வாழ்க்கை பற்றிய தகவல்களையும் கம்லேஷ் எழுதிய பல புத்தகங்களையும் பதிவேற்றினர். கூட்டெழுத்து வழிகாட்டி, சுகாதார மற்றும் அறக் கதைகளும் பதிவேற்றப்பட்டன

கம்லேஷின் குழுவின் விவசாயிகள் இருக்கின்றனர். நீண்ட நாளின் வேலைகளுக்கு பிறகு அவர்கள் வீடு திரும்பி, உண்டு, சீக்கிரமே தூங்கி விடுவார்கள் என்கிறார் அவர். ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களும் செயல்படவில்லை.

”இதை நான் தனியாக செய்ய முடியாது,” என்கிறார் கம்லேஷ். “ஒருவர் பார்க்கும் வேலை அல்ல இது.”

*****

கிராமத்தினூடாக நடந்து செல்கையில் ஒரு வீட்டுக்கு வெளியே கம்லேஷ் நிற்கிறார். “என் நண்பர்களை சந்திக்கும் போதெல்லாம் நாங்கள் திவ்லுவை பற்றி பேசுவோம்.”

திவ்லு பக்டாரியா 48 வயது நாட்டுப்புற நடனக் கலைஞரும் பாடகரும் ஆவார். மத்தியப்பிரதேச அரசால் நடத்தப்படும் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் பரியா சமூகத்தை அடையாளப்படுத்துவார். “எங்கள் பண்பாட்டுக்கு மொழி எத்தனை முக்கியம் என்பதை அறிந்தவர் அவர் மட்டும்தான்,” என்கிறார் கம்லேஷ்.

திவ்லுவை ராதெடிலுள்ள அவரது வீட்டுக்கு வெளியே சந்தித்தோம். விறகு சேகரிக்க காட்டுக்கு சென்றிருக்கும் தாய் திரும்பி வர காத்திருக்கும் பேரக் குழந்தைகளுக்காக பரியாட்டியில் பாடல் பாடுகிறார்.

“எழுதுவதும் பேசுவதும் முக்கியம்,” என்கிறார் திவ்லு கம்லேஷ் மீது சாய்ந்தபடி. “ஆங்கிலமும் இந்தியும் பாடங்களாக போதிக்கப்படுவது போல் பரியாட்டியும் பிற பழங்குடி மொழிகளும் கூட தேர்வு பாடங்களாக போதிக்கப்பட்டால் நன்றாக இருக்குமல்லவா?” கம்லேஷின் எழுத்துகளுக்கான பிரதியை கடைசி பேரனிடம் காட்டுகிறார் அவர்.

குரங்கை அதில் காட்டி சிரிக்கிறான் பேரன். “விரைவில் பரியா கற்றுக் கொள்வான்,” என்கிறார் திவ்லு.

PHOTO • Ritu Sharma
PHOTO • Ritu Sharma

இடது: திவ்லு பக்டாரியா (இடது) கம்லேஷின் குழுவிலுள்ளவர். 48 வயதுக்காரர். நாட்டுப்புற நடனக் கலைஞரும் பாடகரும் ஆவார். மத்தியப் பிரதேச அரசு நடத்தும் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் பரியா சமூகத்தை அடையாளப்படுத்துவார். வலது: பரியாட்டி எழுத்து பிரதியை பார்க்கும் பேரன் அம்ரித்துடன் திவ்லு

சமூகத்தினரிடன் பணியாற்றுகையில் சந்தித்த சவால்கள் தெரியும் என்பதால் எளிதாக கம்லேஷ் ஒப்புக் கொள்ளவில்லை. “விடுதிப் பள்ளிகளுக்கு செல்லத் தொடங்கினால், நிச்சயமாக பரியாட்டி மொழியை பேச முடியாது. எங்களுடன் வாழ்ந்தால் மட்டும்தான் அம்மொழியை பேச முடியும்,” என்கிறார் மொழியை பாதுகாக்கும் அவர்.

“என் மொழியில் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் அழிந்து விட்டது,” என்கிறார் கம்லேஷ். “பொருட்களுக்கான பரியாட்டி பெயர்களை நாங்கள் மறந்து விட்டோம். எல்லாமும் மெல்ல இந்தி மொழியுடன் கலந்து விட்டது.”

மக்கள் அதிகம் பயணிக்கத் தொடங்கியதும் குழந்தைகளும் பள்ளிக்கு செல்லத் தொடங்கியதும் இந்தி வார்த்தைகளையும் சொல்லாடல்களையும் வீட்டுக்குக் கொண்டு வந்து போதிக்கத் தொடங்கினர். கடந்த தலைமுறை கூட குழந்தைகளுடன் சேர்ந்து இந்தி பேசத் தொடங்கியதால், பரியாட்டி பயன்பாடு சரியத் தொடங்கி விட்டது.

“பள்ளி தொடங்கியபோது நானும் கூட குறைவாகத்தான் பரியாட்டி பேசத் தொடங்கினேன். இந்தி பேசும் நண்பர்களுடன்தான் அதிக நேரம் செலவழிக்க வேண்டி இருந்தது. எனக்குமே கூட அது இயல்பாகி விட்டது,” என்கிறார் கம்லேஷ். அவர் இந்தியும் பரியாட்டியும் பேசுகிறார். ஆனால் சுவாரஸ்யம் என்னவென்றால் இரண்டையும் அவர் ஒன்றாக பேசுவதில்லை. “மற்றவர்களை போல எளிதாக என்னால் அவற்றை கலந்து பேச முடியாது. ஏனெனில் பரியாட்டி பேசும் பாட்டியிடம்தான் நான் வளர்ந்தேன்.”

கம்லேஷின் பாட்டி சுக்திபாய்க்கு கிட்டத்தட்ட 80 வயது இருக்கலாம். இன்னும் இந்தி பேச தெரியாது. இந்தியை ஓரளவுக்கு புரிந்து கொண்டாலும் அதைப் பேச வராது என்கிறார் கம்லேஷ். அவருடன் பிறந்தவர்கள் அதிகம் பேசினால் “சங்கடமாகி விடும் என நினைத்து இந்தியில் மட்டும்தான் பேசுவார்கள்.” அவரின் மனைவி அனிதாவும் தாய்மொழி பேசுவதில்லை. ஆனால் அவரை பேசச் சொல்லி ஊக்கம் கொடுக்கிறார் கம்லேஷ்.

PHOTO • Ritu Sharma

மக்கள் பயணித்து பிற மொழிகளை கற்றுக் கொண்டதால் பொருட்களின் பரியாட்டி பெயர்கள் மறக்கடிக்கப்பட்டு விட்டது என்கிறார் கம்லேஷ்

“பரியாட்டியால் என்ன பயன்? அது பேசினால் வேலை கிடைக்குமா? தாய்மொழி பேசி மட்டும் நாம் குடும்பத்தை நடத்த முடியுமா?” போன்ற கேள்விகள் இரு மொழி ஆர்வலர்களுக்கும் உள்ள கேள்விகள்.

“இந்தியை நாம் தவிர்க்க முடியாது,” என்கிறார் திவ்லு. “ஆனால் நம் மொழியை நாம் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்.”

“இப்போதெல்லாம் உங்களின் அடையாளத்தை ஆதார் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் கொண்டு உறுதி செய்ய வேண்டியிருக்கிறது,” என்கிறார் காட்டமாக கம்லேஷ்.

அவரின் பக்கம் சாய்ந்து திவ்லுவும், “இந்த ஆவணங்கள் இன்றி உங்களின் அடையாளத்தை உறுதிபடுத்த சொன்னால், எப்படி செய்வீர்கள்?” எனக் கேட்கிறார்.

சிரித்தபடி கம்லேஷ், “நான் பரியாட்டியில் பேசுவேன்,” என்கிறார்.

“ஆமாம். மொழியும் எங்களுக்கு அடையாளம்தான்,” என்கிறார் திவ்லு.

நுட்பமான வரலாறால் மொழியாக பரியாட்டியை வகைப்படுத்துவதில் உறுதியற்ற தன்மை நீடிக்கிறது. திராவிட மொழியாக இருந்த அம்மொழியில் தற்போது இந்தோ ஆரிய மொழிகளின் தாக்கம் வார்த்தைகளிலும் உச்சரிப்புகளிலும் வலுவாக தென்பட்டு மத்திய இந்திய பூகோளத்தை பிரதிபலித்து இரு மொழிக் குடும்பங்களோடும் இருக்கும் பிணைப்பைக் காட்டுகிறது.

இக்கட்டுரையாளர், பரார்த் சமிதியை சேர்ந்த மஞ்சிரி சந்தே மற்றும் ராம்தாஸ் நாகரேவுக்கு பல்லவி சதுர்வேதிக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறார். கல்சா கல்லூரியின் ஆய்வாளராகவும் பேராசிரியராகவும் இருக்கும் அனாகா மேனன் மற்றும் ஐஐடி கான்பூரின் மொழியியலாளரும் உதவிப் பேராசிரியருமான டாக்டர் சின்மய் தரூர்கர் ஆகியோர் தங்களின் சிந்தனையை வழங்கியமைக்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்.

பாரியின் அருகி வரும் மொழிகளுக்கான பணி (ELP) அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆதரவில் முன்னெடுக்கப்படுகிறது. இந்தியாவில் பாதிப்பில் இருக்கும் மொழிகளை, அம்மொழிகள் பேசும் மக்களின் குரல்களாலும் அம்மக்களின் வாழ்வனுபவங்களாலும் ஆவணப்படுத்துவதை இலக்காக கொண்டிருக்கிறது

தமிழில்: ராஜசங்கீதன்

Ritu Sharma

रितू शर्मा हिने भाषाशास्त्रात एमए केले असून तिला भारताच्या विविध बोली भाषांचं जतन आणि पुनरुज्जीवन यासाठी काम करायचं आहे. सध्या ती लोप पावत असलेल्या भाषाविषयक एका प्रकल्पावर पारीसोबत काम करत आहे.

यांचे इतर लिखाण Ritu Sharma
Editor : Priti David

प्रीती डेव्हिड पारीची वार्ताहर व शिक्षण विभागाची संपादक आहे. ग्रामीण भागांचे प्रश्न शाळा आणि महाविद्यालयांच्या वर्गांमध्ये आणि अभ्यासक्रमांमध्ये यावेत यासाठी ती काम करते.

यांचे इतर लिखाण Priti David
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

यांचे इतर लिखाण Rajasangeethan